தக்ஷிண கன்னடா மாவட்டம், பெல்டாங்கடி தாலுக்கா மலைப் பகுதிகளில் டைன்-டைன்-டைன் எனும் பசுக்களின் மணிச் சத்தம் கேட்பது இப்போது அரிதாகிவிட்டது. “இப்போது யாரும் இந்த மணிகளை செய்வதில்லை,” என்கிறார் ஹூக்ரப்பா. அவர் பேசுவது பசுவின் கழுத்தில் கட்டும் சாதாரண மணி குறித்து அல்ல. அவரது ஷிபாஜி கிராமத்தில், கால்நடைகளின் கழுத்தில் உலோக மணி கட்டப்படுவதில்லை. மூங்கிலில் செய்யப்படும் கைவினை மணியை அவர் சொல்கிறார். 60 வயதுகளில் உள்ள ஹூக்ரப்பா எனும் கொட்டை பாக்கு விவசாயி இந்த தனித்துவமான கைவினைப் பொருளை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
“இதற்கு முன் நான் கால்நடைகளை மேய்த்து வந்தேன்,” என்கிறார் ஹூக்ரப்பா. “நாங்கள் சில சமயம் பசுக்கள் சென்ற பாதையை தொலைத்துவிடுவோம். அப்போது தான் மூங்கிலில் மணி செய்யும் சிந்தனை வந்தது.” பசுக்கள் பிறரது வயல்களில் சுற்றினாலும் அல்லது மலைகளில் திரிந்தாலும் ஓசையைக் கொண்டு கண்டறிய மணிகள் உதவும். ஊர் பெரியவர் ஒருவர் இக்கலையை கற்றுத் தந்ததும், சிலவற்றை அவர் செய்யத் தொடங்கினார். காலப்போக்கில் அவர் வெவ்வேறு அளவுகளில் மணிகளைச் செய்வதற்கு தேர்ச்சி பெற்றார். மூன்று வகையான மூங்கில் செடிகளின் பிறப்பிடமாக திகழும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் குத்ரேமுக் தேசிய பூங்காவின் காப்புக் காட்டில் உள்ள அவரது பெல்டாங்கடி கிராமத்தில் மூங்கில் கிடைப்பது மிகவும் எளிது.
ஹூக்ரப்பா பேசும் துலு மொழியில் ‘பொம்கா’ எனப்படும் பசு மணியை கன்னடத்தில் ‘மாண்டி’ என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி கோயிலில் தெய்வத்திற்கு காணிக்கையாக இந்த மாண்டிகள் வழங்கும் மரபு உள்ளதால் ஷிபாஜியின் கலாச்சார வாழ்விலும் இதற்கு சிறப்பான இடம் உள்ளது. கோயில் எல்லையில் ‘மாண்டிதட்கா’ என்றும் அழைக்கின்றனர். பக்தர்கள் தங்களின் கால்நடைகளின் பாதுகாப்பிற்கும், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கும் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் ஹூக்ரப்பாவிடம் மூங்கில் மணிக்கு ஆர்டர் தருகின்றனர். “மக்கள் இதை ஹர்கே [நேர்த்திக்கடன்] செலுத்துவதற்காக வாங்குகின்றனர். [உதாரணத்திற்கு] பசு கன்று போடாவிட்டால் இதை தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துகின்றனர்,” என்கிறார் அவர். “ஒரு துண்டுக்கு அவர்கள் ரூ.50 தருகின்றனர். பெரிய மணி என்றால் 70 ரூபாய் வரை விற்கலாம்.”


