டிசம்பர் 11ம் தேதி காலை, மின்சாரக் இணைப்புகளை அவர்கள் அகற்றிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த கடைக்காரர் ஒருவர் அழத் தொடங்கி விட்டார். “நாங்கள் இல்லாமல் அவர் தனிமையில் இருப்பதாக உணர்வார் என அவர் சொன்னார். எங்களுக்கும் கடினமாகதான் இருக்கப் போகிறது. எனினும் விவசாயிகளின் வெற்றி பெரியக் கொண்டாட்டம்தான்,” என்கிறார் குர்விந்தர் சிங்.
மேற்கு தில்லியின் திக்ரி போராட்டக் களத்தில் தற்காலிகக் கூடாரங்களை குர்விந்தரும் அவரது ஊரைச் சேர்ந்த விவசாயிகளும் பிரிக்கத் தொடங்குகையில் காலை 8.15 மணி. அவ்வப்போது மூங்கில் இணைப்புகளை மரப்பலகை கொண்டு உடைக்கிறார்கள். சில நேரங்களில் அடித்தளத்தை உடைக்க செங்கற்களைப் பயன்படுத்துகின்றனர். 20 நிமிடங்களில் எல்லாமும் குவியலாக மாறியது. தேநீர் மற்றும் பகோடா சாப்பிட இடைவேளை எடுத்துக் கொண்டனர்.
“இந்த வீடுகளை எங்களின் சொந்தக் கைகள் கொண்டு கட்டினோம். இப்போது அதே கைகள் கொண்டு அகற்றுகிறோம்,” என்கிறார் 34 வயது குர்விந்தர். அவருடைய குடும்பம் கோதுமை, நெல் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் இருக்கும் தங்கியான் கிராமத்திலுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறது. “வெற்றியுடன் வீடு திரும்புவதில் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம் இங்கு உருவான உறவுகளை விட்டுப் பிரியும் துயரும் இருக்கிறது.”
“போராட்டம் தொடங்கியபோது இங்கு ஒன்றுமே இல்லை. சாலைகளில்தான் உறங்கினோம். பிறகு இந்த வீட்டை நாங்கள் உருவாக்கினோம்,” என்கிறார் 35 வயது தீதார் சிங். அவரும் லூதியானா மாவட்டத்தின் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்தான். கோதுமை, நெல், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைக் காய்கறிகளை ஏழு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறார். “நிறைய விஷயங்களை நாங்கள் இங்குக் கற்றுக் கொண்டோம். குறிப்பாக இங்கு தங்கி இருக்கையில் சகோதரத்துவ உணர்வைக் கற்றுக் கொண்டோம். எல்லா அரசுகளும் எங்களுக்குள் சண்டைதான் மூட்டி விடுகின்றன. ஆனால் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களிலிருந்த நாங்கள் அனைவரும் இங்கு கூடியபோது நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்தான் எனப் புரிந்து கொண்டோம்.
“பஞ்சாபில் தேர்தல்கள் வருகின்றன. சரியான நபருக்கு நாங்கள் வாக்களிப்போம்,” என்கிறார் குர்விந்தர். “எங்களுடன் கரம் கோர்ப்பவர்களுக்குதான் (ஆதரவளிப்பவர்கள்) நாங்கள் வாக்களிப்போம். அதிகாரத்துக்கு வந்து எங்களை ஏமாற்றுபவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம்,” என்கிறார் தீதார்.

































