இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாண்டி வெங்கையா எனும் விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெனுகோலானு கிராமத்திலுள்ள தனது வயலில் இறந்து கிடந்துள்ளார். அவர் தனியாகக் கிடந்துள்ளார். அவரின் குடும்பம் வீட்டில் இருந்தது. காலை 9 மணியளவில் சில விவசாயிகள் பாண்டி வெங்கையா இறந்து கிடந்துள்ளதைப் பார்த்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு பருவச் சாகுபடிக்காக வெங்கையா ரூ.10 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து அவரின் கடன் வட்டியுடன் ரூ.17 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர் ஒரு ஏக்கர் நிலத்தில் சொந்தமாக பயிரிட்டுக் கொண்டு எஞ்சியுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு ரூ.30,000 என ஆண்டுக் குத்தகைக்கு விட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு ஏக்கரில் மட்டும் அவர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மிளகாய்ப் பயிரை அறுவடை செய்துள்ளார். எஞ்சிய நான்கு ஏக்கரில் பருத்தியை அறுவடை செய்துள்ளார். அவர் 10 லட்ச ரூபாயை விவசாயப் பயிர்களுக்காக முதலீடு செய்ததாக அவரது மனைவி சீதா (35) தெரிவித்தார். தனியார் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து சிறிது தொகையும், சீதாவின் தங்க நகைகளை அடமானம் வைத்து சிறிது தொகையையும் ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் கம்பாலகுடம் மண்டலத்தைச் சேர்ந்த பெனுகோலானு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய்ப் பயிர் மகசூல் இன்று நலிவடைந்துள்ளதாக ஆட்சியர் அலுவலகக் கோப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. பயிரிட்டவர்கள் அனைவரும் மிளகாய்ப் பயிருக்கான விதைகளை அருகிலுள்ள நர்சரித் தோட்டத்தில் பெற்றுள்ளனர். ''162 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய்ப் பயிர்கள் பொய்த்தது. அதில் செலவிட்ட முதலீடு மற்றும் வேலையாட்கள் கூலி அனைத்தும் நஷ்டமடைந்து விட்டது'' என 26 வயதான வத்தேராபு திருப்பதி ராவ் தெரிவிக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு 2017 நவம்பர் 22ஆம் தேதி வெங்கையா தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து புதிதாக உருவாகியுள்ள தலைமைச் செயலகக் கட்டடத்தின் முன்பு திருப்பதி ராவ் உள்பட பனாலா நாக பூர்னையா (32), ராமையா (35), ஆகிய மூன்று விவசாயிகளும் தற்கொலைக்கு முயன்றனர். இரண்டு நர்சரி தோட்டத்திலிருந்து பெறப்பட்ட தரமற்ற விதைகளால் ஏற்பட்ட இழப்புகளைக் கண்டித்தும், நர்சரி உரிமையாளர்களை குற்றவாளிகளாக்க முடியாத அரசாங்கத்தை கண்டித்தும் அமராவதி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகக் கட்டடத்தை நெருங்கும்போது விவசாயிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர். ஆதரவற்ற நிலையை உணர்ந்ததால், விரக்தியடைந்த விவசாயிகள் மூன்று பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
2016ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா பகுதிகளில் லாபம் தரக்கூடிய விளைச்சலாகவே மிளகாய்ப் பயிர்கள் இருந்து வந்தன. அவை மிளகாய்ப் பயிர்களுக்காக பெயர்பெற்றவை. அதிக அளவிலான விவசாயிகள் தேஜா வகை மிளகாயைப் பயிரிடுவது வழக்கம். 2016-ல் வழக்கத்தை விட மிளகாய் விலை இரு மடங்கு அதிகரித்தது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.15,000 என்ற உச்சத்தை எட்டியது. 2016ஆம் ஆண்டின் முதல் பாதியில் மிளகாய் விலை அதிகரித்ததால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மிளகாய் விதைகளின் தேவையை அதிகரித்தது. பருத்திப் பயிரில் ஏற்பட்ட காய்ப்புழுத் தாக்குதல் இன்னும் அதிகமான விவசாயிகளை மிளகாய் பயிரிடும் முயற்சியை நோக்கி செல்ல வேண்டியக் கட்டாயத்தை ஏற்படுத்தியது.
ஆனால் விளைச்சல் மிகவும் மோசமடைந்தது. காரணம் இரண்டு நர்சரித் தோட்டத்தினர் மிளகாய்ப் பயிருக்கு ஏற்பட்டுள்ளத் தேவையை அறிந்து பெரும் பணத்திற்காக தரமற்ற விதைகளை விற்பனை செய்துள்ளனர். பெனுகோலானா விவசாயிகள் எப்போதும் இல்லாத வகையில் இச்சம்பவத்தை நினைவுகூர வேண்டியதாகிவிட்டது.
இப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரும்பாலும் அதிக விளைச்சல் அளிக்கக்கூடிய ஹைப்ரிட் விதைகளை நர்சரிகளில் இருந்து வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். செயற்கை உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டினால் மண்ணில் ஏற்படும் தாக்கம் மற்றும் பிற காரணங்களால் நான்-ஹைப்டிட் எனப்படும் கலப்பினமற்ற வகைகள் இங்கு நன்றாக வளரவில்லை. இதனால், விவசாயிகளால் அடுத்த ஆண்டு விதைப்புக்காக தங்கள் சொந்த பயிர்களில் இருந்து வலுவான உள்நாட்டு ரகங்களில் ஒரு பகுதியை கடந்த காலத்தில் செய்தது போல் சேமிக்க முடியாது என அகில இந்திய கிசான் சபையின் நாகபோயின ரங்காராவ் கூறுகிறார். 2016-ல் அதிகப்படியான தேவையின் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த இரண்டு நர்சரி தோட்டத்தினர் 87 விவசாயிகளுக்கு குறைந்த விளைச்சல் திறன் கொண்ட விதைகளை அளித்துள்ளனர். விதைகள் ஒன்றுபோலவே இருந்ததால், விவசாயிகளும் பயிரிட்டுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் விளைச்சல் குறைந்தது.
இப்பகுதிகளில் சராசரியாக ஒரு ஏக்கரில் 30 முதல் 40 குவிண்டால் மிளகாய் விளையும். ஆனால் கடந்த ஆண்டில் ராமய்யாவின் நிலத்தில் 3 குவிண்டால்தான் விளைந்தது
இப்பகுதிகளில் சராசரியாக ஒரு ஏக்கரில் 35 முதல் 40 குவிண்டால் மிளகாய் விளைச்சல் ஏற்படும். ''ஆனால் கடந்த ஆண்டு (செப்டம்பர் 2016 முதல் ஜனவரி 2017) 10 ஏக்கரில் பயிரிட்டும் 20 குவிண்டால் மிளகாய் மட்டுமே கிடைத்தது. ராமையா வயலில் அதிகபட்சமாக ஒரு ஏக்கரில் 3 குவிண்டால் விளைச்சல் கிடைத்தது'' என பூர்னையா கூறினார். அவர் 2016-ல் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். ஆனால் மிளகாய் விளைச்சல் குறைந்ததால், ஏற்பட்ட மன உளைச்சல் அவரை தற்கொலைக்குத் தூண்டியது. ''நான் 3 ஏக்கரை மட்டுமே இந்த ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளேன் (செப்டம்பர் 2017 முதல் ஜனவரி 2018). எனக்கு ஏற்கெனவே 12 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
மிளகாய் விளைச்சல் அதிக உழைப்பு தேவைப்படும் பயிர். இதில் ஏக்கருக்கு ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை விதைகளுக்காகவும், உரம், விதைப்பு மற்றும் அறுவடைக்காகவும் முதலீடு செய்வார்கள். ''விளைச்சல் நலிவடைந்துள்ளதை உணர்வதற்கு முன்பாகவே ரூ.1.5 லட்சம் வரை விவசாயிகள் முதலீடு செய்துவிட்டனர். இதில் அதிகப்படியானோர் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்பதால் பயிர் நலிவடைந்ததற்காக உரிமையாளர்களுக்கு பணம் தர வேண்டும்'' என்றார் பூர்னையா
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அலுவலகத்திலிருந்து கடன் பெறும் வாய்ப்பு இல்லை. சொந்தமாக விவசாய நிலம் இல்லாததே அதற்குக் காரணமாக உள்ளது. நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள தேவார நாகர்ஜுனா (50) தெரிவித்ததாவது, ''எனக்கு 60 சதவிகித வட்டி விகிதத்தில் தற்போது 10 லட்ச ரூபாய் வரை கடன் உள்ளது. இதில் ஒரு பகுதி விதையை விற்பனை செய்தவர்களிடம் வாங்கியது'' எனக் கூறுகிறார். தேவாரா நகர்ஜுனா 2016 - 17 காலகட்டத்தில் நலிவடைந்த விதை வாங்கியதில் 5 லட்ச ரூபாய் வரை இழப்பை சந்தித்தவர். ''விதைகள், பூச்சிக்கொல்லி, உரம் போன்றவற்றைக் கொடுக்கும்போது அவர்கள் வெறும் வெள்ளைத் தாளில் எங்களிடம் கைநாட்டு வாங்கிக்கொள்வார்கள். பின்னர் எந்த தொகையையும் எழுதிக்கொள்ளலாம். எங்கள் விளைபொருட்களை வாங்கும் இடைத்தரகர்களும் அவர்களே என்பதால், கடனையும் வட்டியையும் கழித்துவிட்டு மீதியை எங்களுக்குத் திருப்பித் தருகிறார்கள்’’ என்று கூறுகிறார்.
நர்சரி தோட்ட உரிமையாளர்களைத்தான் தேவாரா 'அவர்கள்' எனக் குறிப்பிடுகிறார். அபயாஞ்சநேயா நர்சரி உரிமையாளர் நாகல்லா முரளி மற்றும் லஷ்மி திருபதம்மா நர்சரி உரிமையாளர் எடுரு சத்யநாராயண ரெட்டி ஆகியோர் விதைகளை விற்பனை செய்துள்ளனர். அவர்களுடையக் கடைகளில் விதைகளுடன் உரங்கள், பூச்சிக்கொல்லி வழங்குவதுடன் வேளாண் துறையில் கடன் பெற வாய்ப்பில்லாத விவசாயிகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய பணத்தையும் கடனாக வழங்குகிறார்கள். குண்டூரில் மிளகாய்ச் சந்தை முகவர்களாகவும் அந்த நர்சரித் தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர்.
நாகல்லா முரளி தெலுங்கு தேசம் கட்சியின் கிராமத் தலைவராக உள்ளார். அவர் நீர்வளம் மற்றும் பாசனத் துறை அமைச்சர் உமா மகேஸ்வர ராவிற்கு நெருக்கமானவர். இதே போன்று எடுரு சத்யநாராயண ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின் யுவஜனா ஷர்மிகா ரைது காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி.) காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். திருவூரு (பெனுகோலானு அமைந்துள்ள) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார்.
டிசம்பர் 2016ஆம் ஆண்டு 87 விவசாயிகள் மற்றும் பல பொதுமக்கள் ஒற்றுமையுடன் இணைந்து கம்பாலகுடத்திலுள்ள மண்டல வருவாய் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் மசிலிப்பட்டணம் பகுதியிலுள்ள ஆட்சியர் அலுவலகம், குண்டூரிலுள்ள வேளாண் துறை அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பாதயாத்திரை நடத்தவும் திட்டமிட்டனர்.
மிளகாய்ப் பயிர் விளைச்சலின் ஏமாற்றம் அவர்களை ஆந்திரப் பிரதேச குத்தகை விவசாயிகள் சங்கமாக ஒன்று சேர்த்துள்ளது. இது அகில இந்திய கிஷான் சபையுடன் இணைந்த சங்கம். '' இரு நர்சரி தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து நஷ்ட ஈடு பெறுவதற்காக போராடி வருகிறோம்'' எனப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவரான பூர்னையா தெரிவித்தார். அவருக்கு எதிராக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 24 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அறிவியல் அறிஞர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட அளவிலான குழுவை கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் பி. லக்ஷ்மிகாந்தம் உருவாக்கினார். அந்த குழு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விதைகள் போலியானவை என்பதை உறுதி செய்தது. மேலும், நர்சரித் தோட்ட உரிமையாளர்கள் ஏக்கருக்கு ரூ.91,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மதிப்பிட்டனர். இரு நர்சரி தோட்டங்களும் இணைந்து 87 விவசாயிகளுக்காக ரூ.2.13 கோடி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நர்சரித் தோட்ட உரிமையாளர்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் விவசாயிகள் மறு அறுவடை செய்த பிறகும் அந்த தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக லக்ஷ்மிகாந்தத்திடம் பேசும்போது அவர் கூறியதாவது, ''இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வருவாய் மீட்புச் சட்டத்தின்படி அவர்களது உரிமையாளர்களின் உடமைகளை கைப்பற்றி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவோம்''
''நாங்கள் வேளாண் துறை அமைச்சரை (எஸ். சந்திரமோகன் ரெட்டி) நான்கு முறை சந்தித்தோம். மாவட்டப் பொறுப்பு அமைச்சரை (தேவினேனி உமா) இரு முறை சந்தித்தோம். மற்றும் மாவட்ட ஆட்சியரை எட்டு முறை சந்தித்தோம். மண்டல வருவாய் அலுவலர் மற்றும் வேளாண் துறை அலுவலரை எண்ணற்ற முறை சென்று சந்தித்தோம்'' என்கிறார் தற்கொலைக்கு முயன்ற இளம் விவசாயி திருப்பதி ராவ். ''போராடியதற்காக நாங்கள் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளோம். மிளகாயைப் பயிரிட்டு விளைச்சலில் நஷ்டத்தை சந்தித்து 18 மாதங்களுக்கும் மேலாகிறது. ஆனால் நாங்கள் ஒரு ரூபாயைக் கூட இழப்பீடாக இதுவரை பெறவில்லை.''
பெனுகோலானு கிராமத்திற்கான கிடைக்க வேண்டிய இழப்பீடு குறித்து நான் நுஸ்விட் மண்டலத்திற்குட்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் ரங்கையாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, ''விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.91,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டதற்கு பிறகு நர்சரி உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விவகாரம் துணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவிற்காக நாம் காத்திருக்க வேண்டும்.''
ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வாதாடி வரும் வழக்குரைஞர் பொத்தேரி சுரேஷ் குமார் கூறியதாவது, ''போலி விதைகளின் பயன்பாட்டை சரிபார்க்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. நர்சரிகளுக்கு விதிமுறையோ அல்லது சட்டமோ ஏன் இல்லை? நர்சரிகளுக்கு தனி சட்டம் இயற்றி அனைத்து நர்சரிகளையும் அதன் கீழ் கொண்டுவர வேண்டும்.''
''நர்சரிகளில் அதுபோன்ற விதிகளை வகுத்து பாதுகாப்பை உறுதி செய்யாததால், வெங்கையா தனது வாழ்க்கையை இழந்துள்ளார். மற்ற விவசாயிகளின் வாழ்க்கையும் தள்ளாட்டமாகவே உள்ளது. இந்த நாட்டில் யாரும் விவசாயியாக பிறக்கக் கூடாது. நாங்கள் நாட்டிற்கு உணவளிக்கிறோம் மற்றும் அனைத்து அரசும் விவசாயிகளின் நண்பனாக இருப்பதைப்போன்று காட்டிக்கொள்கின்றன. ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டுமே நினைவுகூரப்படுகிறோம்.'' என்கிறார் திருப்பதி ராவ். ''எங்கள் குரலைக் கேட்க வைப்பதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? நீதியின் மீது என்ன நம்பிக்கை கொள்ள முடியும்? எனது மூன்று வயது குழந்தையையும் மனைவியையும் நினைத்துக்கொண்டாலும் தற்கொலை என்பது இயல்பான முடிவாகவே தோன்றியது.. பணத்தைக் கொடுத்தவர்களால் நாள்தோறும் வேட்டையாடப்படுவதை விட இறப்பது மேலானது.'' என்று கண்ணீர் சிந்துகிறார் 26 வயதேயான இளம் விவசாயி திருப்பதி ராவ்.
தமிழில்: அன்பில் ராம்