"எங்கள் மண்ணில் நாங்கள் எந்த விதமான ரசாயனங்களையும் பயன்படுத்துவதில்லை. பூச்சிகளைக் கொல்வதற்கு விஷம் தேவையில்லை. மண்ணின் வளம் நன்றாக இருக்கும்பட்சத்தில் மற்ற எல்லாவற்றையும் அதுவே கவனித்துக் கொள்ளும்", என்று மகேந்திர நௌரி கூறுகிறார், அவருடைய வயல் நியாம்கிரி மலையில் இருந்து கிழக்கே ஒன்றறை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உங்களுக்கு தேவையானது எல்லாம் வயல் வரப்பில் இலுப்பை மரமோ அல்லது ஒரு மருத மரமோ தான் பறவைகள், பல்லிகள் மற்றும் தவளைகளுக்கு அது அடைக்கலம் கொடுக்கும். அவை எங்கள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் கவனித்துக் கொள்ளும்".
தென்மேற்கு ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பிஷாமகடக் வட்டடத்தில் சுமார் 100 பேர் வசிக்கும் கிராமமான கேரண்டிகுடாவில் மகேந்திராவின் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. நௌரி குடும்பம் டோரா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இக்கிராமத்திலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் கோண்டு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்களே.
அவர்களது நிலத்தில் 30 வயதாகும் மகேந்திரா மற்றும் அவரது 62 வயதாகும் தந்தை லோகநாத் ஆகியோர் 34 வகையான பயிர்களை பயிரிட்டு வருகின்றனர் நம்பமுடியாத அளவிற்கு 72 உப வகைகளை அது உள்ளடக்கியுள்ளது. அவர்கள் தங்களது நிலத்தில் சுழற்சி முறையில் வெவ்வேறு இடங்களில் விதைத்து அறுவடை செய்கின்றனர் மேலும் அவர்களது அறுவடையில் சிறுதானியங்கள் (சாமை மற்றும் தினை), பருப்பு வகைகள் (துவரை மற்றும் பச்சை பயறு), எண்ணெய் வித்துக்கள் (ஆளி, சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை) கிழங்குகள், மஞ்சள், இஞ்சி, பச்சை காய்கறிகள், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் பல வகைகள் அடங்கும். "நாங்கள் உணவுக்காக ஒரு போதும் சந்தையை சார்ந்து இருந்ததில்லை", என்று மகேந்திரா கூறுகிறார்.
நியாம்கிரி மலையில் இருந்து ஓடும் ஓடைகளில் இருந்து வரும் நீரை கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் வயல்களுக்கு தண்ணீரைத் திருப்ப கற்களை கொண்டு வரப்புகள் அமைக்கின்றனர். "கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு பருவநிலை மிகவும் மோசமடைந்து வருகிறது, ஆனால் எங்களது பயிர்கள் எல்லா நெருக்கடியையும் தாங்கி வளர்ந்தது. நான் இதுவரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை. அதற்குக் காரணம் எங்களது பாரம்பரிய விவசாய முறை மட்டுமே", என்று கூறுகிறார் லோகநாத். இவர்களது குடும்பம் அவர்களது அறுவடையினை பயன்படுத்தியே வாழ்ந்து வருகின்றது, மேலும் அவர்கள் தங்களது உபரி விளைபொருட்களை தான் முனிகுடா மற்றும் பிஷாமகட்டக்கிலுள்ள வாராந்திர சந்தைகளில் விற்று வருகின்றனர்.
"50 ஆண்டுகளாக நான் விவசாயம் செய்து வருகிறேன். விதைப்பதற்கும், நடவு செய்வதற்கும் மண்ணை எவ்வாறு தயார்படுத்துவது என்பதை நான் என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்", என்று கூறுகிறார் லோகநாத். அவரது தந்தை நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக இருந்தார் லோகநாத்தும் பல வருடங்களாக அப்படித்தான் இருந்தார். அவருக்கு 30 வயதாக இருந்தபோது அரசாங்கம் கொடுத்த நிலத்தை பெற்றபிறகு விதைகளை பாதுகாக்க தொடங்கியுள்ளார்.
"நான் இப்போது வரை அதே நடைமுறைகளை (என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவைகளை) பின்பற்றி வருகிறேன் அதனால் எனக்கு அதே விளைச்சல் கிடைத்து வருகிறது", என்று அவர் கூறுகிறார். "ஆனால் இத்தலைமுறை விவசாயிகள் பருத்தியை பயிரிட்டு மண்ணின் வளத்தை அழிப்பதை நான் காண்கிறேன். அந்த மண்ணில் ஒரு மண்புழுவை கூட நீங்கள் காணமுடியாது. அவர்கள் மண்ணை மேலும் கடினமாக்கி விட்டார்கள். விவசாயிகள் தங்கள் விதைகளை மாற்றி உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை நெல் மற்றும் காய்கறிகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் விளைச்சலில் ருசி குறைந்து கொண்டே வருகிறது. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மீது அதிக அளவில் பணம் செலவழிப்பதால் அவர்களால் அதே அளவிற்கு பணத்தை விளைச்சலில் இருந்து எடுக்க முடிவதில்லை", என்று கூறுகிறார்.
லோகநாத் உட்பட கேரண்டிகுடாவில் நான்கு குடும்பங்கள் மட்டுமே எந்த ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தாமல் இருக்கின்றனர் என்று நௌரி கூறுகிறார். இவை இப்போது இந்தப் பகுதியில் இருக்கும் தொலைதூரப் பழங்குடி கிராமங்களில் கூட பயன்படுத்தப்படுகின்றன, மேலும் சில ஆதிவாசி குடும்பங்கள் தங்கள் நிலங்களை பருத்தி மற்றும் யூகலிப்டஸ் சாகுபடிக்காக வணிகர்களுக்கு குத்தகைக்கு விட தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் அதிகளவு ரசாயனங்கள் மற்றும் களைக் கொல்லிகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது என்று மகேந்திரா கூறுகிறார்.
லோகநாத் மற்றும் மகேந்திரா ஆகியோர் 4 பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வருகின்றனர் பகுருபி, பஞ்சிபுட்டா போதனா மற்றும் லால்பாரோ ஆகியவயே அவை. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் போதான வகை நெல் அதிகமாக பயிரிடப்பட்டதாக லோகநாத் கூறுகிறார் மேலும் இப்போது பல விவசாயிகள் மற்றவகை நெல்லுக்கு மாறினாலும் இவர் அதை பாதுகாத்து வருகிறார். இது ஒரு குறுகிய கால நெற்பயிர் வருடத்திற்கு மூன்று முறை பயிரிடலாம். மகேந்திரா மற்ற மூன்று நெல் வகைகளை டாக்டர் தேபல் தேப் என்னும் புகழ்பெற்ற நெல் பாதுகாவலரிடம் இருந்து சேகரித்தார், இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கேரண்டிகுடாவில் இருக்கும் தனது இரண்டரை ஏக்கர் பண்ணையில் வசித்து வருகிறார். மேலும் அவர் இப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களிடம் இருந்து அவர்களது விதை மற்றும் விதை பாதுகாப்பு குறித்த பாரம்பரிய அறிவை புதுப்பிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மகேந்திரா தனது வயலில் விவசாயம் செய்வதுடன் கூடுதலாக விதை பாதுகாப்பிற்காக டாக்டர் தேப் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார், மேலும் அதற்கு சன்மானமாக மாதத்திற்கு ரூபாய் 3000 பெற்று வருகிறார்.
தனது தந்தை லோகநாத் தான் தனது வழிகாட்டியும், ஆசிரியரும் ஆவார், பல தசாப்தங்களாக காட்டு தாவரங்களின் இலைகளை பூச்சி விரட்டியாக பயன்படுத்துதல் அவ்வப்போது ஊடுபயிராக காய்கறிகளை (வெங்காயம் போன்றவற்றை பயிரிடுவது) பயிரிட்டு சிலவகையான பூச்சி இனங்களை விரட்டுவதோடு மட்டுமல்லாமல் மண்ணின் நைட்ரஜன் வளத்தையும் பாதுகாக்கிறது மேலும் கலப்புப் பயிராக (பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபாடு செய்து) சிறு தானியங்களை பயிரிடுவது போன்ற பாரம்பரிய நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். மகேந்திரா மற்றும் அவரது சகோதரர் மற்றும் ஐந்து சகோதரிகள் ஆகிய அனைவரும் தங்களது குடும்பத்தின் வயலில் வேலை செய்து வருகின்றனர். நான் எனது தந்தையிடமிருந்து விவசாயத்தை கற்றுக்கொண்டேன். பின்னர் டாக்டர் தேப் மற்றும் 'வாழும் பண்ணை' (ராயகடா மற்றும் காலகண்டி ஆகிய மாவட்டங்களில் ஆதிவாசிகளுடன் விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக இணைந்து செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்) இவர்களிடமிருந்து விஞ்ஞான விஷயங்களான மகரந்தச் சேர்க்கை மற்றும் பயிர் வளர்ச்சி முறை ஆகியவற்றை ஆவணப்படுத்துதல் போன்றவற்றைப் பற்றிய தெளிவை வளர்த்துக் கொண்டேன் என்று அவர் கூறுகிறார்.
மகேந்திரா தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மூலம் பயின்றார் மேலும் பிஷாமகட்டாக்கில் உள்ள மா மார்காமா கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார் பின்னர் அவர் உயிரி தொழில்நுட்பவியலில் முதுகலை பட்டம் பெறுவதற்காக கட்டாக்கில் உள்ள ராவின்ஷா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அவரது குடும்ப நிதி நிலை காரணமாக அவரால் முதுகலைப் படிப்பை முடிக்க முடியவில்லை, அதனால் அவர் தனது தந்தையுடன் வேலை செய்வதற்காக கேரண்டிகுடாவிற்கு திரும்பியுள்ளார்.
மகேந்திரா தனது பகுதியில் உள்ள மண் மற்றும் தாவரங்களின் பல்லுயிரியலைப் பாதுகாக்க விரும்புகிறார். அவர் வருவாய் துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தரிசு நிலத்தை அடர்த்தியான இயற்கை வனமாக மாற்றியுள்ளார். அவர் 2001ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் தாவரங்களை வளர்க்க துவங்கினார். "இதற்கு பாதுகாப்பு மட்டுமே தேவை நடவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை", என்று அவர் கூறுகிறார். இது ஒரு வரப்பு இல்லா உயர் நிலம் சாதரணமாக இத்தகைய நிலம் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு தரிசாக விடப்பட்டு பின்னர் சிறு தானிய வகைகளை பயிரிடுவதற்கு ஏற்றதாக மாற்றப்படும். மரங்களின் வளர்ச்சிக்காக அதை பயன்படுத்த நான் முடிவு செய்தேன். இப்போது அங்கிருந்து காட்டு கிழங்குகள், காளான்கள், மந்தாரை இலைகள், மஹூவா பூக்கள், சார் கோலி மற்றும் பலவற்றை சேகரித்து வருகிறோம். இந்த வனத்தின் பலன்களை நாங்களே அனுபவித்து வருகிறோம்", என்று கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்