அந்தத் தோட்டத்தில் ஐந்துக்குப் பத்து அடி அளவில் செங்கல், சிமெண்ட்டால் ஆன சிறிய நினைவுத்தூபியின் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘சேத்தன் தடராவ் கோப்ரகடே; பிறப்பு - 8/8/1995; இறப்பு - 13/5/18.’ புலியால் அடித்துக்கொல்லப்பட்ட மகனின் நினைவாக அவருடைய பெற்றோர் அமைத்துள்ள தூபி, அது.
சேத்தனுக்கு 23வயதாக இருக்கும்போது அவருடைய அக்கா பயலின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அதையடுத்து தன்னுடைய திருமணத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ”எங்கள் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது தெரியும். ஆனால் அவன் புலியடித்து கொல்லப்படுவான் என பயங்கரமான கனவாகக்கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை...அதுவும் எங்களின் தோட்டத்திலேயே..” என்கிறார் பயல்.
அன்று கடுமையான வெயில் மே மாதத்தின் மாலை 6 மணி இருக்கும்.. அவர்களின் அம்கோன் கிராமத்தில் மாடுகளுக்கான தீவனத்தை எடுத்துக்கொண்டு சேத்தன் தங்கள் தோட்டத்துக்குச் சென்றிருந்தார். 7 மணி ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை. அதனால் அவரின் தம்பி 17வயது சாகில், அவரின் மைத்துனர் விஜய் அவரைத் தேடிப் போனார்கள். அவருடைய அரிவாள்தான் கீழே கிடந்தது. அந்தக் குடும்பத்தின் 5 ஏக்கர் நிலம், அவர்களுடைய வீட்டிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில், சாலையைக் கடந்தவுடன் வந்துவிடும். அதைக் கடந்தால் வறண்ட இலையுதிர்வகை தேக்கு, மூங்கில் மரங்களைக் கொண்ட வனம் இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன் இருவரும் புலிபுலி என அலறினார்கள். மற்றவர்களை உதவிக்கு கூப்பிட்டார்கள். சிறிது தொலைவு தள்ளி பச்சையான கத்யாலு தீவனச் செடிகளுக்கு இடையே புலியால் தாக்கப்பட்ட சேத்தனின் சடலம் இருந்தது. அந்த வட்டாரத்தில் பதுங்கியிருக்கும் புலியால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கும் என ஊர்க்காரர்கள் அனைவருக்கும் புரிந்துவிட்டது.
தோட்டத்தை அடுத்த காட்டுப்பகுதியைக் காட்டி, அந்தக் காட்டுக்குள் புலி போனதைப் பார்த்தோம்; அது நன்றாக வளர்ந்த புலி; பார்க்க பசியோடும் கோபத்தோடும் இருந்தது என்கிறார் விஜய்.
சுருங்கிவரும் பொதுநிலம்
இந்தச் சிறிய சமூகத்தினரின் சமூக, அரசியல் நிகழ்வுகளை வழிநடத்திய இளைஞரின் மரணம், ஆம்கான் மக்களை அச்சத்திலும் இருண்மையான அமைதிக்குள்ளும் தள்ளிவிட்டது. மழைக்காலம் வந்தும்கூட ஒருவரும் நிலங்கள் தரிசாகவே இருந்தன. தோட்டங்களுக்குள் போவதற்கு அவர்களுக்குத் துணிவு இல்லை.
போர் புலிகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் வார்தா மாவட்டம், செலூ வட்டத்தில், இருக்கிறது இந்த ஊர். சரணாலயச் சுற்றுவட்டாரத்தில் வனப் பாதுகாப்புச் சட்டப்படி புறம்போக்கு நிலத்தை கட்டுமானத்துக்கோ புல்வெளிக்காகவும் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மையத்தில் மனிதர்கள் நடமாட்டம் வனத்துறையால் ஒழுங்குபடுத்தப்படுவதாகும். இந்த வட்டாரக் காடுகள் அல்லது பகுதியைத் தாண்டி கிராமங்கள் அமைந்துள்ளன.
போர் வனச்சரகம் நாக்பூரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இது, நாட்டின் மிகச்சிறியதும் புதியதுமான வனச்சரகம் ஆகும். 138 சதுர கிமீ பரப்பைக் கொண்ட இந்தப் பகுதி, 2014 ஜூலையில் இது புலிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
சரணாலயத்தைச் சுற்றியும் எல்லையிலுமாக உள்ள பல கிராமங்களைப் போலவே, ஆம்கோனும், கிழக்கு மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மனித - விலங்கு மோதல் அதிகரித்துவரும் இடமாக மாறிவிட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மக்கள்தொகை 395 பேர். 2014 வனத்துறைக் கணக்கெடுப்பின்படி இந்த வட்டாரத்தின் வனத்துறைப் பரப்பு 22,508 சதுர கிமீ. இதில், ஆறு புலிகள் காப்பகங்களும் மூன்று முக்கிய சரணாலயங்களும் உள்ளன.
"இதற்கு முன்னர் இப்படியொரு துயரத்தை நாங்கள் சந்தித்ததே இல்லை" என்கிறார் ஆம்கோனின் முன்னாள் ஊர்த்தலைவர் பாபன்ராவ் இயோல், 65. இவர், ஒரு கோவ்லி அல்லது நந்தா-கவாலி எனும் அலைகுடி இடையர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாரம்பரிய கோலாவ் இன மாடுகளை வளர்ப்பவர்கள், இந்தப் பிரிவினர். தங்கள் சமூகத்தினர் மேய்ச்சலுக்காக மாடுகளை வனப்பகுதிக்குள் விட்டுவிடுவார்கள் எனும் இவர், மேயப்போகும் மாடுகளை காட்டுவிலங்குகள் அடித்துக்கொன்றுவிடும் என்பதையும் தெரிந்தே இருக்கிறார். நீண்டகாலமாகவே புலிகளுக்காக சில கன்றுக்குட்டிகளை விட்டுவிடவும் செய்கிறோம் என்கிறார்.
ஆனால், 1970 ஜூனில் போர் பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 2014 ஜூலையில் இந்தியாவின் 47ஆவதும் மகாரஷ்டிரத்தின் ஆறாவதுமான புலிகள் காப்புப் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி மனித நடமாட்டத்தையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். ஆம்கோன் கிராமம் சுற்றுப்பகுதியில் உள்ளதால், வனத்துறையானது கால்நடைகள் நடமாட்டம், காப்புக்காட்டில் மேய்ச்சல் ஆகியவற்றுக்கு பல தடைகளை விதித்தது. இன்னின்ன செய்யலாம், இன்னின்ன செய்யக்கூடாது என கறாரான விதிகளை உருவாக்கியது.
ஆண்டுதோறும் கோடைக்காலம் தொடங்கி தீபாவளிக்குப் பிறகுவரை ஆறு மாதங்கள் மாடுகள் மேய்ச்சலுக்காக வனத்துக்குள் விடப்படும். அவற்றை மேய்ப்பதற்காக நந்தா-கவாலிகள் நாள்தோறும் காட்டுக்குள் செல்வார்கள். ஊருக்குள் தண்ணீரும் தீவனமும் கிடைக்கும் குளிர்காலத்தின்போது மாடுகளை ஊருக்குள் ஓட்டிவந்துவிடுவார்கள்.
வனத்துக்கும் எங்களுக்கும் இடையிலான முறையான பிணைப்பு இருந்தது; போர் புலிகள் காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பிறகு அது எல்லாமே இல்லாமல்போனது; காடுகளும் காட்டுவாழ்க்கையும் எங்களுடைய சுற்றுச்சூழலில் இருந்து பறிக்கப்பட்டதாக உணர்ந்தோம் என்கிறார் இயோல். வனத்துடனான தங்களின் பிணைப்பு அறுபட்டதாகவே அந்த மக்களுக்குப் பட்டது.
பெருகிவரும் புலிகள்
அனைத்து இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட 2014 ஆம் ஆண்டு புலிகள் மதிப்பீடு கணக்கெடுப்பானது (புலிகள் கணக்கெடுப்பு), மனிதர்- புலிகள் மோதல் அதிகரித்துவருவது பற்றி எச்சரிக்கைவிடுத்தது. நாடளவில் 2010 ஆம் ஆண்டில் 1706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2014இல் 2226 ஆகப் பெருகியுள்ளது. இதுவே, 2006 இல் 1,411 ஆக இருந்தது. இந்த விவரத்தில், பாதுகாக்கப்படாத காட்டுப்பகுதிகளில் இருக்கும் பல புலிகள் சேர்க்கப்படவில்லை. 2014 இல் போர் புலிகள் காப்புக்காட்டில் இருந்த எட்டு புலிகளும் இதில் சேர்க்கப்படவில்லை.
வனம் - சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2011 புலிகள் மதிப்பீட்டு அறிக்கை, மனிதர் -புலிகள் மோதல்கள் இன்னும் கூடும் என்று எச்சரித்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான குட்டிபோடும் புலிகள் இப்போது ஒட்டுமொத்த புலிகளின் வாழ்விடத்தில் 10 சதவீதப் பரப்பில்தான் இருக்கின்றன என்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது. 2018 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை. எனினும் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்; மனிதர் -புலிகள் மோதல்கள் இன்னும் பெரிய அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதையும் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
பெருகிவரும் புலிகள் காப்புக்காடுகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுகின்றன. 2018 மார்ச் முதல் ஜூன் தொடக்கம்வரை மட்டும் புலிகளின் தாக்குதல் கூடுதலாகியது. விதர்பா பகுதியில் குறைந்தது 20 தாக்குதல்களாவது நிகழ்ந்தன எனலாம். பெரும்பாலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் காப்புக்காடுகளுக்கு வெளியேதான் நிகழ்ந்துள்ளன. நாக்பூரிலிருந்து தெற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள ததோபா அந்தரி புலிகள் காப்பகத்தைச் (டிஏடிஆர்) சுற்றிய பகுதிகள்வரை மட்டுமே புலிகளின் வாழிடப்பரப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி விதர்பாவின் மற்ற இடங்களுக்கும் அவற்றின் வாழிடம் பரவியதாகவே தெரிகிறது.
மேலும், டிஏடிஆர் காப்புப்பகுதிக்கு உள்ளும் சுற்றியும் உள்ள கிராமங்களைத் தவிர, நாக்பூர் மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பகுதிக் காடுகளிலும் புலிகளின் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. யவத்மல் புதர்க் காடுகள், வார்தாவின் போர் புலிகள் காப்பகத்தைச் சுற்றிய வகுதிகளில் புலிகள் மனிதர்களைத் தாக்கியுள்ளன. கடைசியாக நவம்பர் மாத நடுவில், பிரம்மபுரி நகருக்கு அருகே ஒரு கிராமத்தில் 60 வயதுப் பெண்ணை புலி அடித்துக்கொன்றுள்ளது.
எல்லாம் திடீரென, அதிர்ச்சியடையும்படியாக, வயல்களிலோ ஊரை ஒட்டிய வனப்பகுதிகளிலோ உள்ள புதர்ப்பகுதிகளில் நிகழ்ந்தன.
மேற்கு விதர்பாவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஜாரி-ஜமானி வட்டத்தில் இருக்கிறது, ஹிவரா பராசா கிராமம். 2018 மே மாதத்தில் தாமு தன் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டு இருந்தபோது, புலி அவரைத் தாக்கியது. அப்போது ஊர்க்காரர்கள் வந்து காப்பாற்றியதால் அவர் தலை, கழுத்தில் காயங்களுடன் உயிர்தப்பினார். உரிய நேரத்தில் அவருக்கு உதவி கிடைத்தது. அதனால்தான், மண்டையில் எட்டு தையல்களுடனும் கழுத்தில் ஐந்து தையல்களுடனும் நம்மிடம் புலிக் கதையைச் சொல்லமுடிகிறது. "எனக்கு தலை பாரமாகவும் மயக்கம் வருவதைப்போலவும் இருக்கிறது." என்றார் அத்ரம்." அன்று காலையில் தோட்டத்தில் நான் வேலையில் இருந்தபோது, என் பின்னாலிருந்து புலி வந்தது. அந்த இடத்தில் புலி இருப்பதாக எனக்குத் தெரியாது. அது அப்படியே என் மீது பாய்ந்தது; ஆனால் நான் கத்தியதும் புதர்களுக்குள் ஓடித் தப்பிவிட்டது.” என நினைவுகூர்ந்தார்.
இந்த இடத்திலிருந்து சில கிமீ தொலைவில், நாக்பூர் மாவட்டம், ராம்தெக் வட்டத்தில் இருக்கிறது, பிண்ட்கபார் கிராமம். இங்குள்ள 25 வயது கோண்டு பழங்குடியின விவசாயி பீர்சிங் பீரேலால் கோட்வாட், புலியுடனான ஆபத்தை இன்னும் எதிர்கொள்ளவில்லை. மே மாதத் தொடக்கத்தில் ஒரு நாள், அவர் இருசக்கர வாகனத்தில் தன் மூன்று வயது மகன் விகானுடன் தோட்டத்துக்குச் சென்றார். நீண்ட தொலைவு பயணித்து டெண்டு இலைகளைப் பறித்துவந்தார். பிறகு அவற்றை உலர்த்தி பீடி சுற்றி ஒப்பந்தகாரரிடம் விற்பனை செய்வது அவர் வழக்கம். அவரைப் பொறுத்தவரை, இதுவரை ஒரு புலியையும் எதிர்கொண்டதில்லை. பவந்தாடி உப்பங்கழிப் பகுதியின் குறுக்கே, தேக்கு, மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகள் சூழ அமைந்திருக்கும் தோட்டங்களில் கோட்வாட் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெஞ்ச் புலிகள் காப்புக்காட்டைச் சுற்றியுள்ள இந்தப் பகுதி, கோண்டியாவின் நவேகான் - நாக்சிரா புலிகள் காப்பகம்வரை நீண்டுள்ள புலிகளின் நடமாட்டப் பகுதியிலும் இருக்கிறது.
"வனத்தில் சாலையோரத்தில் இருந்த ஒரு கல்வெட்டுக்குப் பின்னால் அந்தப் புலி மறைந்திருந்தது. அந்த இடத்தை நாங்கள் கடந்ததுதான் தாமதம், அது சட்டென எங்கள் பைக் மீது பாய்ந்தது. தன்னுடைய பாதங்களால் எங்களைத் தாக்கியது. நல்லவேளை அதன் வாய்க்குள் அகப்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பித்தோம். ”என அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் பீர்சிங். " திகைத்துப் போனேன்.. அது ஒரு பெரிய புலி.” என்கிறார், அதிர்ச்சியோடு. தந்தையும் பிள்ளையும் கீழே விழுந்தபோதும், பீர்சிங் ஒருவாறு சமாளித்து எழுந்தார். பைக்கை மீண்டும் இயக்கி படுகாயமடைந்திருந்த தன் மகனுடன் பத்திரமாக வீடுதிரும்பினார்.
நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சைபெற்ற இருவரும், காயங்களிலிருந்தும் பயத்திலிருந்தும் மீண்டுவந்தனர். நான் பீர்சிங்கைச் சந்தித்தபோது, அவருடைய காயங்கள் புதியதாகக் காணப்பட்டன. அவருடைய கண்கள் வீங்கியிருந்தன; காதுகளில் புலிநகங்களின் கீறல் இருந்தது. அவர் முகத்தில் இடப்பக்கத்திலும் தலையிலும் ஆழமான காயங்கள் இருந்தன. விகானுக்கு எட்டு தையல்கள் போடப்பட்டன; எப்படியோ அவன் பிழைத்தான் என்கிறார் அவரின் தாயார் சுலோச்சனா.
பெருகிவரும் ஒரு போர்
சந்திரபூர் மாவட்டத்தில் டிஏடிஆரைச் சுற்றியுள்ள சிந்தேவாகி, சிமூர் ஆகிய வட்டங்களில், ஜனவரி 2018 முதல் புலிகள் தாக்கியதால் குறைந்தது 20 பேராவது இறந்திருப்பார்கள். நிறைய பேர் காயமடைந்துள்ளனர். இவை, 2004-05 காலகட்டத்தில் நிகழ்ந்த அதிக அளவிலான மரணங்களை நினைவூட்டுகின்றன. அண்மைய புலித் தாக்குதல்களில் பெரும்பாலானவை, கிராமத்தின் காட்டுப்பகுதி ஓரத்தில் அல்லது வனத்தையொட்டிய தோட்டங்களிலேயே நடைபெற்றுள்ளன.
கோண்ட் பழங்குடி விவசாயியான 65 வயது மகாதேவ் கெதம், ஜூன் 4 ஆம் தேதியன்று, விறகு எடுப்பதற்காக தன் தோட்டத்துக்குச் சென்றார். அப்போது அவரை புலி ஒன்று தாக்கியது. அவரின் பண்ணை வனத்தின் ஒரு சிறு துண்டுப்பகுதியின் எல்லையாக இருக்கிறது. கெதம் ஒருவேளை ஒரு மரத்தில் ஏற முயன்றார் என்றாலும் பாய்ந்து அவரை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் கொண்டுபோயிருக்கக் கூடும் என்கின்றனர் ஊர் மக்கள்.
சிந்தேவாகி வட்டத்தின் முர்மடி கிராமத்தில் ஐந்து மாதங்களில் நிகழ்ந்த இரண்டாவது சாவு, இது. கீதாபாய் பெண்டம் எனும் 60 வயதுப் பெண்ணும் 2018 ஜனவரியில் விறகு எடுப்பதற்காக காட்டுக்குள் சென்றபோது, இதைப்போலவே புலி தாக்கியதில்தான் இறந்துபோனார்.
தாக்குதல் நிகழ்ந்த இடங்கள் எல்லாம், அந்த ஊரிலிருந்து வெறும் 500 - 800 மீட்டர் தொலைவில், சாலையைக் கடந்தால் அந்தப் பக்கம், புலிகளுக்கு இதமான நடைபாதை போல அமைந்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்தன.
பக்கத்து ஊரான கின்கியில் 20 வயது முகுந்தா பெந்தாரே என்பவர் காட்டுப்பகுதியில் இறந்துகிடந்தார். கெதம் இறப்பதற்கு பதினைந்து நாள்களுக்கு முன்னர் அவரின் உடலை புலி கடித்துக் குதறி வைத்திருந்தது. ஜூன் 6 ஆம் தேதி, டிஏடிஆர்-ன் வடக்கே சிமூர் வட்டத்தில், நான்கு பெண்கள் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களை ஒரு புலி தாக்கியதில் ஒருவர் இறந்தேபோனார்; மற்றவர்கள் காயத்துடன் தப்பினர்.
மர்மடிக்குச் சென்றபோது எங்களிடம் பேசிய இளம் வனக் காவலரான ஸ்வப்னில் பட்வைக், "என்னுடைய பொறுப்புப் பகுதியில் 2-3 சிறுவயது புலிகள் இருக்கின்றன. அங்குதான் அண்மையில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. மக்களைத் தாக்குவது ஒரே புலியா வெவ்வேறு புலிகளா என எங்களுக்குத் தெரியவில்லை." என்கிறார்.
புலிகளின் உமிழ்நீர் (கொல்லப்பட்ட மனிதர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்டது), மற்ற மாதிரிகள், ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, செல் உயிரியல் ஆய்வுமையத்துக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய அறிவியல் ஆய்வுக் கழகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், எத்தனை புலிகள் தாக்குதலில் ஈடுபட்டன என்பதை உறுதிசெய்துவிடும். ஒரு புலி பிரச்னையாக இருக்கிறது என்று கூறப்பட்டால், பொதுவாக அதை அங்கிருந்து அகற்ற வனத்துறையினர் முடிவுசெய்வார்கள்.
இந்த ஆண்டு வறட்சியானது நிலைமையை மோசமாக்கியது என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பொதுவாக, கோடை காலத்தில்தான் டெண்டு இலைகளைப் பறிப்பதற்காக மக்கள் காடுகளுக்குள் செல்வார்கள். அப்போது, தண்ணீரையும் இரையையும் தேடி புலிகளும் அலைந்து திரியும். பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகளுக்கு வெளியே இவை இரண்டுமே அருகிவருகின்றன. இதைத்தவிர, இரண்டுமூன்று வயதுடைய புலிகள் தங்களுக்கான பகுதியை வரையறுப்பதிலும் இறங்கும்.
டிஏடிஆர் காப்புக்காட்டுக்கு சுற்றுலா முக்கியத்துவம் பெருகிவருவது ஒருபுறம் என்றால், வனப்பகுதியில் அதிகரிக்கும் மனிதர்களால் வனவிலங்குகளுக்கு உயிர்வாழ்வதற்கான போராட்டம் ஒவ்வோர் ஆண்டும் கணிசமான அளவிலும் இரத்தக்களறியாகவும் மாறிவருகிறது.
மகாராஷ்டிரத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2018 ஜூலைவரை வனப்பகுதித் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 330 பேர் இறந்துபோயிருக்கின்றனர்; இவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் புலிகள், சிறுத்தைகளின் தாக்குதல்கள்தான்! மகாராஷ்டிர வனத்துறையின் வனவிலங்குகள் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்தத் தாக்குதல்களில் 1,234 பேர் பலத்த காயமும் 2,776 பேர் இலேசான காயமும் அடைந்தனர். இந்தத் தரவு மாநில அளவிலானதாக இருந்தாலும், பெரும்பாலான சம்பவங்கள் விதர்பாவில் உள்ள புலிகள் காப்பகங்கள், சரணாலயங்களிலேயே நிகழ்ந்துள்ளன.
அதே காலகட்டத்தில், விதர்பா வட்டாரத்தில் முறைப்படுத்தப்பட்ட கும்பல்களால் குறைந்தது 40 புலிகளாவது வேட்டையாடப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 'பிரச்சனை'க்குரிய நான்கு புலிகள் வனத்துறையினரால் கொல்லப்பட்டன. மற்ற பலவும் அவர்களால் பிடிக்கப்பட்டு உயிரியல் பூங்காக்களுக்கோ அல்லது நாக்பூர், சந்திரப்பூரில் உள்ள மீட்பு மையங்களுக்கோ அனுப்பப்பட்டன. மின்சாரம் தாக்கியதில் கணிசமான புலிகள் உயிரிழந்தன.
துண்டு துண்டான காடுகள் , கொதிக்கும் கோபம்
இரண்டு செயல்பாடுகள்தான் இந்த மோதலின் மையமாக உள்ளன என்பது மகாராஷ்டிரத்தின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனவிலங்கு) அசோக்குமார் மிஸ்ராவின் கருத்து. "ஒன்று, திட்டமிட்ட வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கிய புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அவற்றின் எண்ணிக்கை பெருகுகிறது; மற்றொன்று, காடுகளை மக்கள் சார்ந்திருப்பது அதிகரித்திருப்பதும் வனத்தில் மனிதர்களின் எண்ணிக்கை பெருகுவதுமான மானுட அழுத்தங்கள் கூடிக்கொண்டே போகிறது. " என்கிறார் அவர்.
ஆனால், "2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது, வேட்டைக்காரர்களுக்கு எதிராக வனத்துறையினர் சுற்றுக்காவலைத் தீவிரப்படுத்திய பின்னர்) திட்டமிட்டு வேட்டையாடும் கும்பலைப் பற்றி ஒரு தகவலும் எனக்குத் தெரியவில்லை என்கிறார், இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பணியாற்றும் நாக்பூரைச் சேர்ந்த புலிகள் வல்லுநர் நிதின் தேசாய். ஐந்து ஆண்டுகளில் இந்த நிலப்பரப்புகளிலிருந்து குறிப்பிடும்படியாக இயற்கைக்கு மாறாக புலிகள் கொல்லப்படவில்லை; இது புலிகளின் தொகை இயல்பாகக் கூடியதற்கு உதவியது என்றும் கூறுகிறார் நிதின்.
”அப்போது இங்கே 60 புலிகள் இருந்திருந்தால், இன்று 100 புலிகளாவது இருக்கும். அவை எங்கே போகும்? இதே பகுதியில் பெருகும் புலிகளை நாம் எப்படி கையாளப் போகிறோம்? நம்மிடம் ஒரு திட்டமும் இல்லை. "என நிதின் விளக்குகிறார்.
மனிதர் - புலிகள் மோதல் என்பது ஒரு எல்லைசார்ந்ததாகக் கையாளப்படுகிறது. உண்மையில், சாலைகள் முதலிய பல வளர்ச்சித் திட்டப்பணிகளால், ஒட்டுமொத்த மைய இந்தியாவில் விதர்பா பிரதேசத்தின் வனப்பகுதிகள் துண்டுதுண்டாக ஆக்கப்படுகின்றன.
”புலிகளின் வாழ்விடங்கள் சுருங்கிவருகின்றன; விலங்குகளின் நடமாட்டப் பாதைகள் துண்டுதுண்டாக ஆக்கப்படுகின்றன. புலிகளுடன் மற்ற வனவிலங்குகள் நடமாடுவதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. இப்படியிருக்கையில் மோதல் நடக்காமல் என்ன செய்யும் என நினைக்கிறீர்கள்? இதைத் தடுக்க நாம் முயற்சி செய்யாவிட்டால் நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும்."- இது மிஸ்ரா.
கிழக்கு விதர்பா நிலப்பகுதியில் புலிகள் காப்புக்காடுகள் துண்டாக்கப்படுவதைப் புரிந்துகொள்வதற்காக, டேராடூனில் உள்ள இந்திய வனவுயிரிகள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலிருந்து அவர் இதைக் கூறுகிறார். இது, புலிகள், பிற வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ள வனப்பகுதித் துண்டாடல் பற்றிய கடந்த கால ஆய்வுகளின் நீட்சியே ஆகும்.
மகாராஷ்டிரத்தில் கிழக்கு விதர்பா வட்டாரத்தில் துண்டுதுண்டான வனப்பகுதிகள் பற்றிய 37 பக்க அறிக்கை, 2018 ஜூலையில் வெளியிடப்பட்டது. இந்த மொத்த வட்டாரத்திலும், புலிகள் வாழ்வதற்கு உரிய பகுதிகளாக தலா 500 சதுர கிமீக்கும் மேற்பட்ட பரப்பைக் கொண்ட ஆறு துண்டான வனப்பகுதிகள் இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் இதுபோன்ற நான்கு தொடர்ச்சியான பகுதிகள் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கின்றன; இங்கு நீண்டகாலமாக மோதல்களால் புலிகளே இப்போது இல்லை.
மற்ற வனப்பகுதிகளில் கணிசமானவை சிறியவை - 5 சதுர கிமீக்கும் குறைவானவை; அவை புலிகளின் வாழ்விடங்களாக கருதப்படுவதில்லை.
நேபாளம், வங்கதேசத்தையும் உள்ளடக்கிய இந்தியத் துணைக்கண்ட உயிரிமண்டலத்தில், 3,25,575 சதுர கிமீ பரப்பைக் கொண்ட 59 புலிப் பாதுகாப்பு அலகுகள் இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டன. இதில் 54,945 சதுர கிமீ (16.87 சதவீதம்) மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்கிறது, வனவுயிரி நிறுவன அறிக்கை. மைய இந்திய நிலப்பரப்பானது 1,07,440 சதுர கிமீ புலிப்பாதுகாப்பு அலகுகளைக் கொண்டுள்ளது. அதில் 59,465 சதுர கிமீ பரப்பு, முதலாம், இரண்டாம் நிலை பு.பா.அலகுகளாக இருக்கின்றன. அதாவது, பாதுகாப்புக் கோணத்தில் வாழ்விடங்களின் வகைப்பாடு இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.
மைய இந்திய நிலப்பரப்பு, கிழக்குத் தொடர்ச்சி மலை ஆகியன உலகளாவிய புலிகள் பாதுகாப்புக்கான முன்னுரிமைப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன என்று வனவுயிரி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. 2016 உலகளாவிய புள்ளிவிவரப்படி, உலக அளவிலான புலிகளில் 18 சதவீதம் இந்த வட்டாரத்தில் இருக்கின்றன. ஆனால், மைய இந்திய வட்டாரப் புலிகளின் நடமாட்டப் பகுதி துண்டாடப்பட்டதாலும் விவசாயத்தின் காரணமாகவும் வாழ்விடங்களை இழந்து புலிகள் தவிக்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
"கிழக்கு விதர்பா வட்டாரம் 22, 508 சதுர கிமீ பரப்பைக் கொண்டது. இந்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 35 சதவீத இடத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியிலும் சேர்த்து 200 புலிகளோ அதற்கு மேலுமோ இருக்கலாம். இந்தப் பகுதியை (2016 மார்ச் நிலவரப்படி) 45,790 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், ஊரகச் சாலைகள் துண்டுகளாக்கி உள்ளன. இப்படி துண்டாடப்பட்டதன் மூலம் புதிதாக 517 துண்டுதுண்டான சிறு வனப்பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு சதுர கிமீ-க்கும் குறைவானவை. இவற்றின் மொத்தப் பரப்பளவு 246.38 சதுர கிமீ.”என்கிறது, வனவுயிரி நிறுவன அறிக்கை.
குறிப்பாக சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு பூதாகரமாக வளர்ந்துநிற்கிறது; விதர்பாவின் மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான்.
சாலைகள் அமைப்பு முதலிய விதர்பாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் வியப்பதற்கு இல்லை: மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரைச் சேர்ந்தவர்; நிதி, வனத் துறை அமைச்சர் சுதிர் முங்காந்திவார், சந்திரப்பூர்க்காரர்; மைய அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே நாக்பூர் ஊரகப் பகுதிக்காரர்; மைய தரைவழி, கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் நாக்பூரைச் சேர்ந்தவர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து வாழிடத்துக்காக புதிய பிரதேசங்களைத் தேடி அலைய புலிகளுக்கு நடமாட்டப் பகுதி தேவைப்படுகிறது. ஆனால், இந்த தலைவர்கள் யாரும், வனவிலங்குகளுக்கு குறிப்பாக புலிகளுக்கு ஏற்படும் தீங்குகள் பெருகுவதைப் பற்றி அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.
கிழக்கு-மேற்கு நான்கு வழிச் சாலை (தே.நெ.சா. 42), வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (தே.நெ.சா. 47) ஆகிய நான்கு வழி சிமென்ட் சாலைகள், நாக்பூர் வழியாகச் சென்று, விதர்பா வட்டாரத்தின் வனப்பரப்பைப் பிரிக்கின்றன. இது போதாதென சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி டிஏடிஆரின் வனப்பரப்பையும் ஊடறுக்கிறது, மகாராஷ்டிர அரசாங்கம்.
இத்துடன், கடந்த பதிற்றாண்டில் பந்தாரா மாவட்டத்தின் கோசேகர்டு அணையிலிருந்து 80 கிமீ நீளத்துக்கு வலப்பக்கத்தில் முதன்மைக் கால்வாய் அமைக்கப்பட்டது. இது டிஏடிஆரின் வனப்பரப்பிலிருந்து மேற்கில் நவேகான் - நாக்சிரா புலிகள் காப்புக்காடுவரை நீண்டிருக்கும் கிழக்கு - மேற்கு நெடுகையைத் துண்டாக்குகிறது.
"விதர்பாவில் மனிதர்களைவிட வளர்ச்சித் திட்டங்களே அதிகமாக இயற்கையான புலி நடமாட்டப் பாதைகள், பரவும் வழிகளைச் சிதைத்துவிட்டன" என்கிறார், சந்திரப்பூரில் ஈக்கோ- புரோ எனும் தன்னார்வ நிறுவனத்தை நடத்தும் சூழல்காப்பு செயற்பாட்டாளர் பந்து தோத்ரே.
மனித உயிரிழப்புகள், கால்நடைகள் கொல்லப்படுவது, புலிகளின் சாவுகள், புலிகளுடனான மோதல்கள் ஆகியவற்றைப் பற்றி ஆவணங்களில் எல்லாம் இருந்தாலும், யதார்த்த நிலைமை வேறு. இதனால், மக்களின் கடுமையான கோபத்தில் பொங்குகின்றனர்.
உதாரணமாக, புலி தாக்கி சேத்தன் கோப்ரகடே கொல்லப்பட்டதால் சுற்றியுள்ள 50 கிராமங்களில் வனத்துறையினருக்கு எதிராக மே மாதம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தெரு அளவிலான ஆர்ப்பாட்டங்கள், கிராமங்களில் பேரணிகள், வார்தா நகரத்தில் மாவட்ட வனப்பாதுகாவலர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் என பலவிதமாக போராட்டங்கள் நடைபெற்றன. ஊர்மக்களின் கோரிக்கைகளில், அவர்களை ஒட்டுமொத்தமாக அந்தக் காப்புக்காட்டுப் பகுதியிலிருந்து முழுவதுமாக குடிபெயர்க்க வேண்டும் என்பதும் அடங்கும்.
தடோபா அந்தரி புலிகள் சரணாலயத்துக்கு உள்ளேயும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்கள் நீண்ட காலமாக நடந்துவருகின்றன. மக்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான இந்த மோதலுக்கு முடிவு இல்லை என்பதாகவே தெரிகிறது.
இந்தக் கட்டுரையின் வேறு வடிவங்கள் , முதலில் மொங்காபே, பிபிசி மராத்தி ஊடகங்களில் 2018 ஜூலையில் வெளியிடப்பட்டது.
இந்தத் தொடரின் மற்ற கட்டுரைகள்:
புலிகளின் பிரதேசத்தில்: ஒரு கொலையின் கதை
'
அவர் வீடு திரும்பியதும் புலிக்கு நன்றிசொல்கிறேன்
'
புலிகள்
1- தாக்குதல்கள், பயங்கரத்தின்
பாதை
தமிழில்: தமிழ்கனல்