இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
வாழ்நாள் முழுதும் வளைந்தே பணிகள்
விஜயநகரத்தின் மதியவேளை சூரிய ஒளியில் பணிசெய்துகொண்டிருக்கும் அந்தப்பெண், பணியை இடையில் நிறுத்திவிட்டு உற்சாகமாகிறார். ஆனால் குனிந்து வேலை செய்யும் அதே நிலையில் இருந்துகொண்டு, அவர் நன்றாக பழகிய அந்த வேலையை சில நிமிடங்களில் மீண்டும் குனிந்த அதே நிலையில் தொடர வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.
அவரது கிராமத்தைச் சேர்ந்து வேறு இரு பெண்கள் குழுக்களுடன் இணைந்து அதே முந்திரி வயல்களில் அவர் வேலை செய்துகொண்டிருக்கிறார். வயலுக்கு அவர்களுக்கு தேவையான மதிய உணவு, தண்ணீர் ஆகியவற்றை ஒருவர் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வருகிறார். மற்றொருவர் அவருக்கு தலைகீழாக தெரியுமளவு குனிந்து வேலை செய்கிறார். அனைவரும் குனிந்து வேலை செய்பவர்கள்.
ஒரிசாவில் உள்ள ராயகாடாவில், ஆண்களும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அது கேமராவின் கண்கள் (லென்ஸ்) வழியாக பார்க்கும்போது கண்ணை கவர்வதாக உள்ளது. ஆண்கள் அனைவரும் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒடிஷாவில் உள்ள நுபடாவில் அனைத்து பெண்களும் குனிந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களை மழை கூட தடுக்கவில்லை. பெண்கள் இடுப்பை வளைத்து குனிந்து குடையின் கீழ் நின்று பணி செய்கிறார்கள்.
விதை விதைப்பது, நாற்று பறிப்பது, நாற்று நடுவது ஆகிய வேலைகள் கடுமையான வேலையைவிட அதிக கஷ்டமானது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் இதுபோல் குனிந்து, வளைந்த வலி நிறைந்த வேலைகளில் அவர்கள் நீண்ட நேரம் ஈடுபடுகிறார்கள்.
81 சதவீத இந்திய பெண் தொழிலாளர்கள் பயிரிடுபவர்கள், விவசாய தொழிலாளர்கள், காட்டில் விளையும் பொருட்களை சேகரிப்பவர்கள் மற்றும் கால்நடை வளர்பவர்களாக உள்ளனர். வேளாண் பணிகளில் கடுமையான பாலின பாகுபாடு உள்ளது. பெண்கள் உழுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பிரத்யேகமாக நடவு செய்தல், விதைத்தல், அறுவடை, கதிரடித்தல் போன்ற வேலைகளிலும், அறுவடைக்கு பிந்தைய வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
ஒரு ஆய்வை பொருத்தவரை:
32 சதவீத பெண்கள் பயிரிடுவதற்கு நிலத்தை தயார்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.
76 சதவீத பெண்கள் விதைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
90 சதவீத பெண்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
82 சதவீதத்தினர் வயலில் இருந்து வீடுகளுக்கு பயிர்களை எடுத்துச்செல்லும்
பணிகளை செய்கிறார்கள்.
100 சதவீதம் பேர் உணவு தயாரித்தலிலும்,
69 சதவீதத்தினர் பால் பண்ணை
சார்ந்த வேலைகளையும் செய்கிறார்கள்.
இதில் பெரும்பாலான வேலைகள் வளைந்தும், குனிந்தும் செய்ய வேண்டிய வேலைகளாக உள்ளன. இதற்கிடையில், பெண்களுக்கு தகுந்த வகையிலும், அவர்கள் பயன்படுத்த எளிதான வகையிலும் பெரும்பாலான கருவிகள் வடிவமைக்கப்படவில்லை.
வயலில் பெண்கள் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவை அவர்கள் குனிந்து, வளைந்து முன் நகர்ந்துசென்று செய்யும் வேலைகளாக உள்ளன. எனவே அவர்கள் முதுகு மற்றும் கால்களில் வலி ஏற்படுவது மிகச்சாதாரணமாக உள்ளது. அவர்கள் நடவுப்பணிகளின்போது ஆழமாக தண்ணீரில் நின்றுகொண்டு வேலை செய்வது அவர்களுக்கு தோல் வியாதிகளை ஏற்படுத்துகிறது.
ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட கருவிகள் பின்னர் பெண்களுக்காக மாற்றி வடிவமைக்கப்படவில்லை. கதிர் அரிவாள் மற்றும் வெட்டுக்கத்தி போன்ற கருவிகளால் அடிக்கடி காயங்கள் ஏற்படும். அதற்கு குறைந்தபட்ச மருத்துவம் என்பது அரிதான ஒன்று. டெட்டனஸ் நோய்தான் எப்போதும் உள்ள ஆபத்து.
வேளாண் தொழிலில் அதுபோன்ற வேலைகள் செய்யும்போது குழந்தை இறப்பு பெரிய பிரச்னையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, பெண்கள் நடவு செய்யும்போது ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் வளைந்து குனிந்து வேலை செய்ய நேரிடும். அந்த நேரத்தில்தான், மஹாராஷ்ட்ராவில் அதிகளவிலான குழந்தை மரணங்களும், கருச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரம் வயல்களில் குனிந்து, வளைந்து வேலை செய்வதால், ஏற்படும் அழுத்தத்தால் குறைமாத குழந்தை பிறப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
அவர்களின் வறுமை, பெண் தொழிலாளர்கள் போதிய உணவு உண்பதையும் தடுக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு கொடுக்கும் நமது நாட்டு பெண்களின் வழக்கமும் இதற்கு காரணமாகிறது. அவர்கள் நிச்சயம் சத்தான ஆகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருந்தும், கர்ப்பிணிகளும் சத்தான உணவை உட்கொள்வதில்லை. சத்தில்லாத தாய்மார்களுக்கு பிறக்கும் குறைமாத குழந்தைகளும் எடை குறைவுடன் இருக்கின்றன.
இதனால் பெண் தொழிலாளர்கள் மீண்டும், மீண்டும் கருவுற்று அதிக குழந்தை மரணங்களுக்கு வித்திடுவதுடன், அவர்களின் உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் குழந்தை பிறக்கும்போதும், கர்ப்ப காலத்திலும் இறக்கிறார்கள்.
தமிழில்: பிரியதர்சினி. R.