இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
பசுக்கள் வீடு திரும்பும் வரை
பீகாரில் அடுப்பெரிப்பதற்காக சாணி உருட்டும் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வியப்பூட்டும் பங்களிப்பைச் செய்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது எப்படி பிரதிபலிக்கும் என ஒருவர் நினைக்கலாம். பசுஞ்சாணத்தை எரிவாயுவாகப் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கினால் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். பெட்ரோலியம், அவை சார்ந்த பிற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா அதிகளவில் அந்நிய செலாவணிக்கு செலவிட்டு வருகிறது. 1999-2000 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.47,421 கோடி அல்லது 10.5 பில்லியின் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது.
உணவு, சமையல் எரிவாயு, மருந்துகள், மருத்துவம் சார்ந்த பொருட்கள், இரசாயனங்கள், இரும்பு, எஃகு ஆகியவற்றிற்கு செலவாகும் அந்நிய செலாவணியை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். நம் மொத்த இறக்குமதி செலவில் நான்கில் ஒரு பங்கு பெட்ரோலியம், அது சார்ந்த பொருட்களுக்கு செலவிடுகிறோம்.
1.4 பில்லியன் அமெரிக்க டாலர் உர இறக்குமதிக்கு நாம் செலவிடுகிறோம். அதாவது கிட்டதட்ட அந்நிய செலாவணியின் எட்டு மடங்கு. பயிர்களை வளர்ப்பதற்கு லட்சக்கணக்கானோர் சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இவை பன்மடங்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது. பூச்சிகளை தடுப்பதோடு, பல வகைகளிலும் இந்த இயற்கை உரம் பயன்படுகிறது. பல வகைகளிலும் செலவுகளை குறைக்கிறது. நாட்டில் சாணத்தை சேகரிக்கும் பணிகளை பெண்களே செய்து வருவதால் இது பெண்களின் பணி. இதனால் இந்தியா ஆண்டுதோறும் லட்சங்களில் அல்லது கோடிக்கணக்கில் கூட சேமிக்கிறது எனலாம். பங்கு பரிமாற்றத்தில் சாணம் பதிவு செய்யப்படவில்லை. இவற்றை சேகரிக்கும் பெண்களின் வாழ்க்கை குறித்து அவர்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கலாம். பொருளாதாரவியலாளர்கள் இக்காரணியை ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. இதுபோன்ற உழைப்பை அவர்கள் கண்டுகொள்வதில்லை அல்லது மதிப்பதில்லை.




