இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
விஷயங்களின் பிடிமானம்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெற்ற மிதிவண்டி பயிற்சி முகாமில் சைக்கிள் ஓட்டி பழகுவதற்காக சிறந்த புடவையை அணிந்து அவர் வந்திருந்தார். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் இருந்தார். ஒருகாலத்தில் கொத்தடிமைகளாக இருந்த அவரது மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 4,000 ஏழைப் பெண்கள் குவாரிகளில் வேலை செய்ய வந்திருந்தனர். அரசியல் உணர்வுள்ள கல்வியறிவு இயக்கத்துடன் இணைந்த இவர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் புதுக்கோட்டையை சிறந்த இடமாக மாற்றியுள்ளது.
இவ்வளங்களின் கட்டுப்பாடும், உரிமையும் மையப்படுத்தப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கான கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துடன், அவர்களின் உரிமையும் மேம்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தின் ஜபுவாவைச் சேர்ந்த அனைத்து மகளிர் கிராமக்குழு. உள்ளூர் நிர்வாகத் திறனால் இவர்களின் அந்தஸ்தும், சுயமரியாதையும் மேம்பட்டுள்ளது. ஆனால் சொந்த கிராமத்தில் அவர்களின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது. அவர்களுக்கான உரிமைகள் குறைவு, கட்டுப்பாடுகள் அதிகம். உதாரணத்திற்கு அவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது. சட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலான தளங்களில் அவர்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஊராட்சி மன்ற தலைவராக தலித் பெண் தேர்வு செய்யப்படும்போது அவரது நில உரிமையாளர் துணைத் தலைவர் ஆகிறார் என்றால்? பதவியில் மூத்தவர் என்பதால் அவரது பேச்சை துணைத் தலைவர் கேட்பாரா? அல்லது தனது தொழிலாளியைப் போன்று நில உரிமையாளர் கொடுமைப்படுத்துவாரா? அல்லது ஒரு ஆணாக அப்பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவாரா? பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆடைகள் களையப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பெண் ஊராட்சித் தலைவர்கள் வியக்க வைக்கும் விஷயங்களை செய்கின்றனர். நிலபிரபுத்துவம் ஒழிக்கப்பட்டால் அவர்கள் எந்தளவு சாதிப்பார்கள்?






