இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
சுத்தம் செய்தல்!
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டி தனது வீட்டையும், சுற்றுப்புறத்தை சுத்தமாக பெருக்கி வைக்கிறார். அதன் பெயர் வீட்டு வேலை - “பெண்களின் வேலை.” வீடோ, பொது இடமோ ‘சுத்தம் செய்தல்‘ எனும் அசுத்தமான பணிகளை பெண்களே செய்கின்றனர். இதில் அவர்கள் வருவாயைக் காட்டிலும் கோபத்தையே ஈட்டுகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு தலித். தனியார் வீடுகளில் உள்ள உலர் கழிவறைகளை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளராக இருக்கிறார். ராஜஸ்தானின் சிகாரில் உள்ள 25 வீடுகளில் இப்பணியை அன்றாடம் அவர் செய்கிறார்.
இதற்கான ஊதியமாக அவருக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரொட்டி வழங்கப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் மனது வைத்தால் கொஞ்சம் பணம் தருவார்கள். ஒரு வீட்டிற்கு ரூ.10 கூட கிடைக்கலாம். அதிகாரப்பூர்வமாக அவரை ‘சூத்திரர்’ என அழைக்கின்றனர், ஆனால் அவர் தன்னை ‘தோட்டி' என்று சொல்கிறார். இதுபோன்ற குழுவினர் தங்களை 'பால்மிகிஸ்' என்று அழைத்துக் கொள்கின்றனர்.
மனிதக் கழிவுகளை அவர் பெரிய சட்டியில் வைத்து தலையில் சுமந்து செல்கிறார். பண்பட்ட சமூகம் இதனை ‘மலம்‘ என்கிறது. மிக நிர்கதியான, சுரண்டப்படும் குடிமக்களில் ஒருவராக அவரும் இருக்கிறார். ராஜஸ்தானின் சிகாரில் மட்டும் இதுபோன்று நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.
இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் பணியை எத்தனைப் பேர் செய்கின்றனர்? உண்மையில் நமக்குத் தெரியாது. 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தனிப்பட்ட தொழிலாகக் கூட அவர்கள் பட்டியலிடப்படவில்லை. மலம் அள்ளும் பணியாளர்களே இல்லை என சில மாநில அரசுகள் மறுக்கின்றன. ஓரளவு கிடைக்கப் பெற்ற தரவுகளே மலம் அள்ளும் தோட்டிகளாக லட்சக்கணக்கான தலித்துகள் வேலை செய்வதாக சொல்கின்றன. இதன் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும். ‘மலம் அள்ளும்‘ பணியை பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர்.




