இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
செங்கற்கள்,நிலக்கரி மற்றும் கல்
அவர்கள் வெறுங்காலோடு வேலைப்பார்ப்பது மட்டுமல்லாமல், தலையிலும் சூடானக் கற்களை சுமந்தபடி உழைத்து கொண்டிருக்கின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள, அந்த செங்கல் சூளையில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த பகுதியின் வெளிப்புற வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் என எரிச்சலுட்டக்கூடியதாக நிலவுகிறது. இது பெண்கள் பெரும்பாலும் உழைக்கக்கூடிய சூளையின் உலைப் பகுதியில், வெப்பநிலை இன்னும் அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு கூலியாக பெண்கள் ரூ. 10 -12 வரை பெற்று வருகின்றனர். இந்த பரிதாபகரமான நிலையை விட கொஞ்சம் கூடுதலாக ஆண்கள் ரூ. 15-20 வரை பெற்று வருகின்றனர். இந்த வேலைக்கு ஒப்பந்தகாரர்கள் முன்கூட்டியே கடனாக பணம் அளித்து புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தைக் இங்கு கூட்டி வருகின்றனர். இந்தக் கடனின் காரணமாக அவர்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு அடிபணிய வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், அவர்களை கொத்தடிமைகளாகவும் ஆகக்கூடிய நிலையை உண்டாக்குகிறது. இங்கு பணிபுரியக்கூடிய 90 சதவீதமானத் தொழிலாளர்கள் நிலமற்றவர்கள் அல்லது விளிம்புநிலையிலுள்ள விவசாயிகளே ஆகும்.







