இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
மண், தாய்மார்கள், மனித நேரங்கள்
காலை 7 மணிக்கு முன்னர்தான் ஆந்திர பிரதேசம் விஜயநகரத்தில் உள்ள நிலமில்லா கூலித்தொழிலாளர்களை சந்திப்பது உறுதியானது. நாள் முழுவதும் அவர்கள் செய்யும் வேலையை பார்ப்பதுதான் அன்றைய நாளின் திட்டம். நாங்கள் தாமதமாக சென்றுவிட்டோம். அந்த நேரத்தில், மூன்று மணி நேரத்திற்கு முன்னரே பெண்கள் உள்ளே சென்றிருந்தார்கள். பனை மரக்காடுகளின் வழியாக அவர்கள் வயல்களை அடைந்தார்கள் அல்லது அவர்களின் நண்பர்கள் ஏற்கனவே வயலில் வண்டல் நிறைந்த தொட்டிகளை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
இதில் பெரும்பாலான பெண்கள் சமையல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் மற்றும் மற்ற வீட்டு வேலைகளை முடித்திருந்தனர். அவர்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு கிளப்பிவிட்டிருந்தனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவளித்திருந்தனர். வழக்கம்போல் அவர்கள் கடைசியாகவே சாப்பிட்டிருந்தனர். அரசின் வேலைவாய்ப்பு உறுதி இடங்களிலும், பெண்களுக்கு குறைந்த கூலியே வழங்கப்படுகிறது.
குறைந்தளவு கூலி உறுதி சட்டம் இங்கு ஆண், பெண் இருவருக்குமே மீறப்பட்டிருந்தது. மேற்கு வங்காளம், கேரளா தவிர நாடு முழுவதும் இதே நிலைதான். எல்லா இடங்களிலும் பெண் தொழிலாளர்களுக்கு ஆணின் கூலியில் பாதியோ அல்லது மூன்றில் ஒரு பங்கோதான் கொடுக்கப்பட்டது.







