இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
புலப்படும் வேலை, புலப்படாத பெண்கள்
அந்தப்பெண் ஒரு மலைச்சரிவுகளில் ஏறியிறங்கி கஷ்டப்பட்டு நடந்து வருகிறார். ஒரு பெருஞ்சுமை அவரது முகத்தை மறைக்கிறது. வெளியில் தெரிவது வேலை மட்டுமே, அதற்கு உள்ளே இருக்கும் பெண்களின் முகம் யாருக்கும் தெரிவதில்லை. மற்றொரு நாளின் தொழிலாளர் கண்காணிப்பு பயணத்தில் இந்த நிலமற்ற பெண்ணை ஒரிசாவின் மால்கன்கிரியில் சந்தித்தபோது கிடைத்த அனுபவங்கள். தண்ணீர் எடுப்பது, விறகு சேகரிப்பது மற்றும் கால்நடை தீவணங்கள் எடுத்து வருவது என்ற 3 வேலைக்கே பெண்கள் தங்கள் வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதியை செலவிடுகிறார்கள். நாட்டின் பல இடங்களில் பெண்கள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தங்கள் குடும்பத்தினருக்கு தண்ணீர் எடுத்துவரவும், விறகுகள் சேகரிக்கவும் செலவிடுகிறார்கள். கால்நடை தீவணங்களும் சேகரிப்பதற்கு நீண்ட நேரம் செலவாகும். கிராமப்புற இந்தியாவில் உள்ள பல மில்லியன் பெண்கள் இந்த மூன்றையும் சேகரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் பல கிலோ மீட்டர் தொலைவுகள் அலைந்து திரிகிறார்கள்.
அவை பெருஞ்சுமையாக உள்ளன. அந்த ஆதிவாசி பெண்மணியும் மால்கன்கிரியின் சறுக்கல்களில் கிட்டத்தட்ட 30 கிலோ விறகை அவரது தலையில் சுமந்து மெதுவாக நடந்து வருகிறார். அவர் தனது குடியிருப்பை அடைவதற்கு இன்னும் 3 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. பெரும்பாலான பெண்கள் இதே அளவோ அல்லது இதைவிட அதிகளவு தொலைவோ தினமும் களைப்புடன் தங்கள் தண்ணீர் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக நடந்து செல்கிறார்கள்.






