இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
சந்தைக்கு, சந்தைக்கு...
அந்த மூங்கில்கள் அனைத்தும் அதை இங்குகொண்டு வந்த பெண்களின் உயரத்தைவிட மூன்று மடங்கு அதிக உயரமாக உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட மூங்கில்களோ ஜார்கண்டின் கோடா வார சந்தைக்கு எடுத்து வருகிறார்கள். சிலர் இங்கு வருவதற்கு 12 கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து வருகிறார்கள். மூங்கில்களை தலை அல்லது தோளில் சுமந்து வருகிறார்கள். ஆமாம் நிச்சயம் அந்த பெண்கள் அந்த மூங்கிலை மரங்களிலிருந்து வெட்டுவதற்கு நீண்ட நேரம் செலவு செய்திருக்க வேண்டும்.
அவர்களின் இந்தளவு கஷ்டங்களுக்கு பலனாக, அந்நாளின் இறுதியில் அவர்களுக்கு ரூ. 20 (40 சென்ட்) கிடைக்கும். கோடாவிலே வேறு ஒரு சந்தைக்கு அவர்கள் நகர்ந்து செல்கிறார்கள். அங்கு அதைவிட குறைவாக சிலருக்கு பணம் கிடைக்கலாம். பெண்கள் தங்கள் தலையில் சுமந்து கொண்டுவரும் பெரிய இலைகளை சேகரித்து அவற்றை ஒன்றாக சேர்த்து, அதிலிருந்து மிக அருமையான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தட்டுகளை செய்கிறார்கள். டீக்கடைகள், உணவகங்கள், கேன்டீன்கள் இவற்றை நூற்றுக்கணக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். அதிலிருந்து பெண்கள் ரூ.15 முதல் 20 வரை (30 – 40 சென்ட்) பெறுகிறார்கள். அடுத்த முறை ரயில் நிலையத்தில் நீங்கள் அந்த தட்டில் உணவு உட்கொள்ள நேரிட்டால் உங்களுக்கு தெரியும் அது எங்கிருந்து வந்திருக்கும் என்று.









