இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
அவர்கள் வாழ்க்கை முறையின் கோர்வை
அந்தப்பெண்மணி காலை நாலரை மணிக்கே எழுந்துவிட்டார். ஒரு மணிநேரம் கழித்து சட்டிஸ்கரின் சர்குஜா காடுகளில் டெண்டு இலைகளை பறித்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதிவாசிப்பெண்கள் அதே வேலையை செய்துகொண்டிருப்பார்கள். குடும்பம் முழுவதும் குழுவாக இலைகளை பறிக்கும் வேலைகளை செய்கிறார்கள். அந்த இலைகள் பீடி செய்வதற்கு உதவுகிறது.
ஒரு நாளில் 6 பேர் கொண்ட அந்த குடும்பத்தினர் ரூ.90 (1.85 டாலர்) கூலி பெறுகிறார்கள். டெண்டு அதிகம் கிடைக்கும் இரண்டு வாரங்களில், அடுத்த மூன்று மாதங்களில் பெறுவதைவிட, கூடுதலான தொகையை அவர்கள் சம்பாதிப்பார்கள். எனவே அதிகம் கிடைக்கும் அந்த காலங்களில் அவர்களால் முடிந்தளவு கூடுதலாக பறிக்க முயற்சி செய்வார்கள். குறைந்தது 6 வாரங்கள் அவர்களின் வாழ்க்கை முறையே வேறு விதமாக இருக்கும். பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் காட்டில்தான் இருப்பார்கள். ஆதிவாசிகளின் பொருளாதாரத்திற்கு டெண்டு முக்கியமான ஒன்றாகும்.






