“காய்ச்சல், வலியோடு மயங்கியும் விழுந்தாள் கீதா. அடுத்த நாள் அவள் வாந்தியெடுத்ததும் எனக்கு பயம் அதிகமாகிவிட்டது” என்கிறார் சதேந்தர் சிங்.
ஞாயிற்றுக்கிழமையான அடுத்த நாள் சதேந்தருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டாடா நினைவு மருத்துவமணைக்குச் செல்வதற்காக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு உடனடியாக போன் செய்தார். அங்கு சென்றதும் கீதாவிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. திங்களன்று அவரது பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்தது.
கீதாவிற்கு வயிற்றில் புற்றுநோய் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, சதேந்தரும் கீதாவும் மத்திய மும்பையின் பரெல் பகுதியில் உள்ள டாடா நினைவு மருத்துவமணை அருகில் இருக்கும் நடைபாதையில் தங்குவதற்கு திரும்பவும் வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு வரை, மருத்துவமணையிலிருந்து 50கிமீ தொலைவிலுள்ள டோம்பிவேலியில் அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். அதுவும் பல கட்ட கெஞ்சலுக்குப் பிறகு, உணவுக்கும் வாடகைக்கும் பணம் கொடுப்பதாக உறுதி கொடுத்தப் பிறகே.
கீதா, 40, சதேந்தர், 42, இருவரும் மகராஷ்ட்ராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சல்கரஞ்சி ஊரிலிருந்து மும்பைக்கு நவம்பர் மாதம் வந்தனர். அவர்களது 16 வயது மகன் பாதல் மற்றும் 12 வயது மகள் குஷி, சதேந்தரின் மூத்த சகோதரரான சுரேந்திராவின் வீட்டில் இருக்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பு, பீகார் மாநிலத்தின் டோதாஸ் மாவட்டத்தில் உள்ள கனியாரி கிராமத்திலிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தனர். கீதாவோடு மும்பைக்கு வருவதற்கு முன்பு வரை, இச்சல்கரஞ்சியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் மாதம் 7,000 ரூபாய்-க்கு சதேந்தர் வேலை பார்த்து வந்தார்.
“விரைவிலேயே திரும்பி வருவோம் என எங்கள் குழந்தையிடம் வாக்குறுதி கொடுத்திருந்தோம். ஆனால் அவர்களின் முகங்களை இனி எப்போது பார்ப்போம் என எங்களுக்கு தெரியவில்லை” என மார்ச் மாதம் என்னிடம் கூறினார் கீதா.
நவம்பர் மாதம் இவர்கள் மும்பைக்கு வந்தபோது, கோர்ஜியான் புறநகர் பகுதியில் உள்ள சதேந்தரின் உறவினர் வீட்டில் தங்கினர். ஆனால் கொரோனா பயம் காரணமாக அவர்களை தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார். “(அதன்பிறகு) ரயில் நிலையங்களிலும் இந்த நடைபாதையிலும் நாங்கள் தங்கினோம்” என மார்ச் 20-ம் தேதி என்னிடம் இதையெல்லாம் கூறினார் கீதா. அதன்பிறகு இருவரும் டோம்பிவேலிக்குச் சென்றுவிட்டனர். (பார்க்க: ஊரடங்கு காலத்தில் மும்பை நடைபாதையில் புற்றுநோய்)
மார்ச் இறுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்திய பிறகும், மருத்துவமணைக்கு வெளியேயுள்ள நடைபாதையில்தான் நோயாளிகளும் அவர்களது குடும்பங்களும் வசித்து வருவதாக பாரி கட்டுரை வெளியிட்டதும், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் இவர்களுக்கு பண உதவி அளித்தனர். கீதாவின் கீமோதெரபி சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக டோம்பிவேலியிலிருந்து மருத்துவமணைச் செல்ல தொண்டு நிறுவனம் ஒன்று கீதாவுக்கும் சதேந்தருக்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கி உதவி செய்தது.
ஆனால் நகரில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க தொடங்கியதும், ஆம்புலன்ஸ் மற்ற வேலைகளுக்கு திருப்பி விடப்பட்டன. சதேந்தரும் கீதாவும் பேருந்தில் வரத் தொடங்கினர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கீதாவின் கீமியோதெரபி சிகிச்சைக்காக பரேலுக்கு 7-8 முறை பயணம் செய்துள்ளனர். மேலும் பரிசோதனை, சிடி ஸ்கேன் மற்றும் வேறு சோதனைகளுக்காகவும் பல முறை வந்துள்ளனர்.
மிக சிரமத்துடனேயே பயணம் செய்கிறார்கள். காலை 6.30 மணிக்கு அரசு பேருந்தில் ஏறி பரெல் வருகிறார்கள். அதன்பிறகு, மும்பை மாநகராட்சியின் பேருந்தில் ஏறி காலை 9.30 மணிக்கு மருத்துவமணை வந்து சேர்கிறார்கள்.“நடுவழியில் எங்களை இறங்குமாறு கூறுவார்கள். மருத்துவமணையிலிருந்து நான் கடிதம் பெற்றிருந்தாலும், அரசு அதிகாரிகள் கொடுக்கும் பாஸைதான் பேருந்து நடத்துனர்கள் கேட்கிறார்கள். நோயாளி பேருந்தில் வருவதை யாரும் விரும்புவதில்லை” என்கிறார் சதேந்தர். உள்ளூர் போலீசார் வழங்கும் கட்டாய ஊரடங்கு பயண பாஸ் இவர்களிடம் இல்லாததால் பல சமயங்களில் பேருந்தில் ஏறாமல் நிற்பார்கள். அடுத்த பேருந்துக்கு காத்திருக்கும் காரணத்தால்
மாலையிலும் அதேப்போன்ற நீண்ட பயணத்தை தொடர வேண்டும். மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு ஒன்பது மணிக்கு டோம்பிவேலியை சென்றடைவார்கள். பல சமயங்களில், பரெல் மற்றும் மருத்துவமணைக்கு இடையிலான குறுகிய தூரத்தை கடக்க டாக்ஸியில் ஏற்றிச் செல்ல முடியுமா என ஓட்டுனரிடம் கெஞ்சுவார் சதேந்தர். பயணம் செய்யும் நாளன்று குறைந்தது 500 ரூபாய் செலவழிப்பதாக கூறுகிறார்.
கீதாவுடைய மருத்துவ செலவின் ஒரு பகுதியை மருத்துவமணையே பார்த்துக் கொள்கிறது. மீதமுள்ள தொகையை தன்னுடைய சேமிப்பிலிருந்து செலவு செய்கிறார் சதேந்தர். இதுவரை 20,000 ரூபாய் வரை செலவாகியிருக்கும் என கணக்கிட்டுள்ளார்.
ஏப்ரல் மாத இறுதியில், வழக்கமாக சாப்பிடும் மருந்து கீதாவை மிகவும் பாதித்தது. அதை சாப்பிட முடியாமல் தூக்கி எறிந்தாள். உண்வை உட்கொள்வதற்காக மூக்கு வழியாக அவளுக்கு மருத்துவர்கள் குழாய் சொருகினர். அது எந்தவிதத்திலும் உதவவில்லை, தொடர்ந்து ஜீரணம் ஆகாமல் கீதா சிரமப்பட்டார்.இனி பயணம் செய்ய முடியாத காரணத்தால், அருகில் எதாவது தங்குவதற்கு இடம் கிடைக்குமா என மருத்துவமணை பணியாளர்களிடம் கேட்டுள்ளார் சதேந்தர். “இப்போதைக்கு எந்த அறையும் இல்லை என என்னிடம் கூறினார்” என்கிறார் சதேந்தர்
இச்சல்கரஞ்சியில் உள்ள அவரது சகோதரரின் உதவியால் மே 5 அன்று, தங்கும் விடுதிக்கான அரசாங்க அதிகாரி ஒப்புதல் வழங்கிய கடிதம் அவருக்கு கிடைத்தது. “இனியாவது எங்கள் நிலையை கேட்டறிந்து யாராவது உதவுவார்கள் என நினைத்தேன். ஆனால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…..” என்கிறார் சதேந்தர்.
“கடிதத்தை எடுத்துக்கொண்டு சில தங்குமிடங்களுக்குச் சென்றோம். புதிதாக எந்த நோயாளிகளையும் சேர்க்காதீர்கள் என பிம்சி மற்றும் போலீஸ் எச்சரித்துள்ளதாக கூறி எங்களை தங்க அனுமதிக்கவில்லை. அவர்களின் சிரமங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என தம்பதிகள் இருவருக்கும் உதவி செய்து வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான அபினய் லாத் கூறுகிறார்.
அதன்பிறகுதான் வேறு வழியின்றி, 10 நாட்களுக்கு முன்பு சதேந்தரும் கீதாவும் டாடா நினைவு மருத்துவமணைக்கு வெளியேயுள்ள நடைபாதைக்கு திரும்பினர். இவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கிய நலச்சங்கமே (ஜீவன் ஜோத் புற்றுநோய் நிவாரண மற்றும் நலச்சங்கம்) உணவும் வழங்கி வருகிறது.
பரிசோதனை முடிவில் கீதாவிற்கு கொரானா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை மருத்துவமணையில் உள்ள தனிமை அறைக்கு அழைத்துச் சென்றனர். “அவளால் நடக்க கூட முடியவில்லை. இப்போதுள்ள நிலைமையில் அவளை விட்டு நான் எங்கும் செல்ல முடியாது” என்கிறார் சதேந்தர்..
டாடா நினைவு மருத்துவமணையிலிருந்து மூன்று கிமீ தொலைவிலுள்ள கஸ்தூரிபா மருத்துவமணையில் அவரையும் சோதனை செய்யுமாறு கூறினர். ஆனால் அவரோ தன் மனைவியோடுதான் இருப்பேன் என விடாப்பிடியாக இருந்தார். மே 21 அன்று டாடா மருத்துவமணையிலேயே அவருக்கு சோதனை செய்யப்பட்டது. மே 23, சனிக்கிழமை மாலை அவருக்கும் கொரானோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது கீதாவுடன் சேர்ந்து சதேந்தரும் தனிமை வார்டில் இருக்கிறார்.
தான் பலகீனமாக உணர்வதற்கு ஓயாத அலைச்சலும் பல இரவுகள் தூங்காததுமே காரணமாக கூறுகிறார் சதேந்தர். “நான் சரியாகிவிடுவேன்” என நம்மிடம் கூறுகிறார். கொரோனா நெகட்டிவாக வந்த பிறகே கீதாவிற்கு அறுவைசிகிச்சை நடைபெறும் என சதேந்தரிடம் கூறியுள்ளனர்.
கீதாவிற்கு சிகிச்சை அளிக்கும் புற்றுநோயியல் துறையின் மூத்த அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் யோகேஷ் பன்சோத் கூறுகையில், “அவரது வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியுள்ளது. ஆனால் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டியதை விட பாதியே இருக்கிறது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வது அவருக்கு ஆபத்தில் போய் முடியும். அவருக்கு சுவாசக்குழாயில் தொர்று ஏற்படக் கூடிய வாய்ப்பும் குறைய வேண்டும். மேலும் அவருக்கு கொரோனா ஆபத்தை கொடுக்கக் கூடாது என நம்பிக் கொண்டிருக்கிறோம்”.
தனக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று குறித்து 16 வயதான பாதலிடம் கூறியுள்ளார் சதேந்தர். “என் மகளிடம் இதைக் கூறினால் அவளால் புரிந்துகொள்ள முடியது, அழுவாள். அவள் சிறியவள், ஏற்கனவே நாங்கள் அவளைப் பார்த்து மாதங்கள் ஆகிறது.நாங்கள் விரைவில் வருவோம் என கூறியுள்ளேன். நான் சொல்வது பொய்யா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை….” என்கிறார்.
அதுவரை வீட்டில் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என தனது தந்தையிடம் வாக்குறுதி கொடுத்துள்ளான் பாதல்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா