சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் வெர்சோவா படகுத்துறையில் கழிமுகத்தின் விளிம்பில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்திருந்த ராம்ஜிபாயிடம் அவர் என்ன செய்கிறார் என்று நான் கேட்டேன். "கால விரயம்" என்று அவர் பதில் கூறினார். "இதை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவேன்", என்று அவர் பிடித்து வைத்திருந்த ஒரு வகையான கெளுத்தி மீனை காண்பித்துக் கூறினார். மற்ற மீனவர்கள் முந்தைய நாள் இரவில் அவர்கள் கழிமுகத்தின் கரையில் வீசிச் சென்றிருந்த கரைவலைகளை சுத்தம் செய்து கொண்டிருப்பதை நான் கண்டேன் - அவர்கள் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களை பிடித்திருந்தனர், ஆனால் அதில் மீன்களே இல்லை.
வடக்கு மும்பையின் கே மேற்கு வார்டில் உள்ள மீன்பிடி கிராமமான வெர்சோவா கோலிவாடாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பகவான் நாம்தேவ் பான்ஜி, "இன்று, காதியில் (கழிமுகத்தில்) மீன் பிடித்தல் என்பது சாத்தியமில்லை", என்று கூறுகிறார். "நாங்கள் இளமையாக இருந்த போது, இங்குள்ள கடற்கரை மொரீசியஸ் கடற்கரையை போன்று இருந்தது. நீங்கள் ஒரு நாணயத்தை கடலுக்குள் தூக்கி எறிந்தால் அதை நீங்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்... தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருந்தது", என்று கூறுகிறார்.
பகவானின் அண்டை வீட்டில் இருப்பவர்களின் வலைகளில் சில மீன்கள் சிக்கின - ஆனால் அவை மிகச் சிறியதாக இருந்தன - இப்போதெல்லாம் கடலில் வலைகள் மிகுந்த ஆழத்தில் வீசப்படுகின்றன. "முன்னர் எல்லாம், நாங்கள் பெரிய வாவல் மீன்களை பெற்றோம், ஆனால் இப்போது நாங்கள் சிறிய மீன்களை தான் பெறுகிறோம். இது எங்களது வியாபாரத்தில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது", என்று பகவானின் மருமகளான மற்றும் கடந்த 25 வருடங்களாக மீன் விற்று வருபவருமான, 48 வயதாகும் பிரியா பான்ஜி கூறுகிறார்.
கிட்டத்தட்ட இங்கு உள்ள அனைவருமே - கோலிவாடாவில் 1072 குடும்பங்கள் அல்லது 4,943 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர் (2010 ஆம் ஆண்டு கடல் மீன் வள கணக்கெடுப்பின்படி) - இவர்கள் அனைவரிடமுமே அழிந்த அல்லது குறைந்து வரும் மீன் வரத்தினைப் பற்றி கூறுவதற்கான கதைகள் இருக்கின்றன. மேலும் அவர்கள் கூறும் காரணங்கள் உள்ளூரின் மாசுபாட்டில் இருந்து உலக அளவிலான வெப்பமயமாதல் வரை பரந்து விரிந்திருக்கிறது. இவை இரண்டும் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்நகரின் கரையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.











