நாம் காண்பதை, நம்மால் நம்ப முடியவில்லை. நெருங்கிச் சென்று அவரை பார்த்தோம். அது உண்மைதான். இப்போதும் எங்களால் நம்ப முடியவில்லை. தலா 40-45 அடி நீளத்திற்கு ஐந்து மூங்கில்கள் சமநிலையாக ரத்தன் பிஸ்வாஸ் மிதிவண்டியின் மீது கட்டப்பட்டுள்ளன. இவற்றை அவர் தனது கிராமத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிபுரா தலைநகர் அகர்தலா சந்தைக்கு சாலை வழியாக தள்ளிக் கொண்டு வருகிறார். இந்த நீண்ட முங்கில் கழிகளின் நுனிப்பகுதி ஏதேனும் கல், மேடு அல்லது வேறு பொருட்களின் மீது இடித்துவிட்டால் மிதிவண்டியுடன் மூங்கிலும், உரிமையாளரும் சேர்ந்து கீழே விழ வேண்டியது தான். மிகவும் வேதனைக்குரியது. மூங்கில்கள் பார்ப்பதற்கு லேசாக தெரிந்தாலும், உண்மை அப்படியில்லை. ஐந்து மூங்கில் கழிகளில் இரண்டு சேர்த்து கட்டப்பட்டுள்ளதால் நான்கு போன்று காணப்படுகிறது. ஐந்தும் ஒன்றாக சுமார் 200 கிலோகிராம் இருக்கும். பிஸ்வாசும் இதை அறிவார். இதுபற்றி நம்மிடம் அவர் மகிழ்ச்சியாக பேசினார். அவரது விசித்திர சரக்கு வண்டியை புகைப்படம் எடுக்கவும் அவர் அனுமதித்தார். அவற்றை நம்மால் நகர்த்த கூட முடியவில்லை. இது அவருக்கும் தெரியும்.
சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட நீங்கள் இத்தகைய நீண்ட மூங்கில் கழிகளை மிதிவண்டியில் எப்படி சமநிலைப்படுத்துகிறீர்? அவர் புன்னகைத்தபடி கட்டப்பட்டுள்ள மூங்கில் மரத்துண்டுகளை நம்மிடம் காட்டுகிறார். மிதிவண்டியின் முன்புறம் செங்குத்தாக இரண்டு மரத்துண்டுகளும், இருபக்கமும் பக்கவாட்டில் சாய்வாக தலா ஒரு மர துண்டும் கட்டப்பட்டுள்ளன. மிதிவண்டியின் பின்புறம் சுமப்பதற்காக கிடைமட்டமாக ஒரு துண்டும் கட்டப்பட்டுள்ளன.





