நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக 2017ஆம் ஆண்டு புகையிலை பயிரிடுவதை கிலாரி நாகேஸ்வர ராவ் நிறுத்தினார். இப்பயிரில் அவர் மூன்றாண்டுகளில் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் அடைந்திருந்தார். அவரால் அதற்கு மேல் இழப்பை தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அவரது புகையிலை உற்பத்திக்கான விலையும் குறைவாக கிடைத்தது, உற்பத்தி விலை மட்டும் அதிகரித்தது. பிரகாசம் மாவட்டம் பொடிலி மண்டலத்தில் உள்ள தனது முகா சிந்தலா கிராமத்தில் உள்ள 2,400 ஏக்கர் நிலத்தில் பாதிக்கும் மேல் இப்போது காலியாக உள்ளது என்று மதிப்பீடு செய்கிறார் 60 வயது நாகேஸ்வர ராவ். விவசாயிகள் புகையிலை பயிரிடுவதில்லை, என்றும், “அது இழப்பை மட்டுமே தருகிறது,” என்றும் அவர் சொல்கிறார்.
ஆந்திர பிரதேசத்தில் 2015-16 ஆண்டு வாக்கில் 3.3 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு வந்த புகையிலை 2016-17ஆண்டு 2.24 லட்சம் ஏக்கர் நிலமாக சுருங்கியது. அதே காலத்தில் அம்மாநிலத்தில் 167 மில்லியன் கிலோவிலிருந்து 110 மில்லியன் கிலோ என புகையிலை உற்பத்தி சரிந்துவிட்டதாக புகையிலை வாரியத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. வாரியத்தின் இலக்கான 13 கோடி கிலோவை விட இது மிகவும் குறைவு. மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தால் 1970களில் அமைக்கப்பட்ட இந்த வாரியம் குண்டூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. விவசாயிகள், புகையிலை நிறுவனங்களுக்கு இடையேயான சந்தைத்தரகு செய்வது உள்ளிட்ட பங்கு வகிக்கிறது.
பல வகையான காரணிகளால் புகையிலை உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறண்ட பகுதியில் மழைப்பொழிவும் குறைந்து வருகிறது. பிரகாசமில் ஆண்டிற்கு சராசரியாக 808 மிமீ என்றிருந்த மழைப்பொழிவு 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் சுமார் 560 மிமீ என்று சரிந்துவிட்டது (மாநில அரசின் தரவு). பொதுவாக வறண்ட அனந்தபூரில் கூட கடந்தாண்டு தோராயமாக 580 மிமீ மழை பெய்துள்ளது. ஆனால் அதைவிட குறைவாக இங்கு மழைப்பொழிவு இருந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சராசரியாக 880 மிமீ குறைவான மழை பெய்துள்ளது.
தண்ணீர் தேவை குறைவு என்பதால் பிரகாசமில் புகையிலை முக்கியப் பயிராக ஒரு நூற்றாண்டிற்கு மேலாக இருந்து வந்ததாக விவசாய தலைவர்கள் மதிப்பிடுகின்றனர். இப்போது மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், அளவற்ற ஆழ்துளைக் கிணறுகளால் நிலத்தடி நீர் மட்டமும் ஏற்கனவே சரிந்து வருகிறது.
ஆகஸ்டில் புகையிலை விதைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு 2017 மே மாதம் பிரகாசம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 23 மீட்டர் ஆழத்திற்குச் சென்றது. அதுவே ஆந்திர பிரதேசத்தின் எஞ்சிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 14.79 மீட்டராகும் (அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி). ஆந்திர பிரதேசத்தின் நீர், நிலம், மரங்கள் சட்டம் 2002 சொல்கிறது, 20 மீட்டருக்கு குறைவாக நிலத்தடி நீருள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது என்று. இதனால் கடந்தாண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியாக மாவட்டத்தின் 1093 கிராமங்களில் 126 ஆழ்துளை கிணறுகள் தடை செய்யப்பட்டுவிட்டன.
“நான் 11 ஆழ்துளை கிணறுகளை [2011 முதல் 2014 வரை] தோண்டினேன், ஒவ்வொரு கிணறுக்கும் [சுமார்] 2 லட்சம் ரூபாய் செலவானது. ஆனால் அவற்றில் 10 பலனளிக்கவில்லை,” என்கிறார் முகா சிந்தலாவில் 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கும், 20 ஏக்கர் நிலத்தை சொந்தமாகவும் வைத்து புகையிலை, சோளம், கம்பு பயிரிடும் ஏனுகந்தி சுப்பா ராவ். கடந்தாண்டு முக்கிய சாலைக்கு அருகே உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.15 லட்சம் ரூபாய்க்கு நல்ல விலைக்கு விற்றும் சுப்பா ராவிற்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிரிழப்புகளால் ரூ.23 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட குண்டலகம்மா நீர்த்தேக்கத்திலிருந்து வரும் பாசனமும் புகையிலை பயிருக்கான நிலத்தை குறைத்துவிட்டன. விவசாயிகள் கடனில் மூழ்கியதால் மாற்று பயிர்களுக்கு முயற்சி செய்யத் தொடங்கினர். காலப்போக்கில், நாகேஸ்வர ராவும் அவ்வப்போது பருப்பு, பட்டாணி, தானியங்களை பயிர் செய்து பரிசோதித்து சந்தையில் நல்ல விலை கிடைக்காமல் இழப்பை சந்தித்துள்ளார். கிருஷ்ணா ஆற்றில் 2005ஆம் ஆண்டு நீர்த்தேக்கத்துடன் தொடங்கப்பட்ட வெலிகொண்டா திட்டம் இப்போது கட்டப்பட்டு வருகிறது.
புகையிலை நிறுவனங்கள் மிகக் குறைந்த விலை தருவதும் விவசாயிகள் புகையிலை பயிரிடுவதை கைவிடுவதற்கு மற்றொரு காரணம். முகா சிந்தலாவில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தில், மூன்று ஏக்கரில் புகையிலை பயிரிட்டு வரும் 48 வயது தலித் விவசாயியான வேமா கொண்டையா விளக்குகையில், “ஒரு கிலோ புகையிலை உற்பத்திக்கு 120 ரூபாய் செலவாகிறது, ஆனால் சிகரெட் நிறுவனங்கள் எங்களுக்கு 90-100 ரூபாய் மட்டுமே தர முன்வருகின்றன. புகையிலை வாரியத்துடன் சேர்ந்துகொண்டு நிறுவனங்கள் மிக குறைந்த விலையை நிர்ணயிக்கின்றன.”
அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் விஜயவாடாவைச் சேர்ந்த தலைவர் நாகபொய்னா ரங்காராவ் பேசுகையில், “ஒரு கிலோ புகையிலையில் சிகரெட் நிறுவனங்கள் 1,200 - 1,400 சிகரெட்டுகள் வரை தயாரிக்கின்றன. ரூ.250க்கும் குறைவாக முதலீடு செய்து கிலோவிற்கு ரூ.20,000 வரை லாபம் பார்க்கின்றனர்.” உதாரணத்திற்கு, ஐடிசி நிறுவனத்தின் 2017ஆம் ஆண்டு அறிக்கை, லாபம் ரூ.10,000 கோடிகளை தாண்டியதை காட்டுகிறது.
புகையிலை விவசாயம் நீடிக்க முடியாததாக மாறுவதற்கு மற்றொரு காரணம் முக சிந்தலா மற்றும் மேற்குப் பிரகாசத்தின் மற்ற பகுதிகளில் குறைந்த விளைச்சல், இப்பகுதியின் தெற்கு லேசான மண் ஒரு காரணமாகும். “இங்கு ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்று குவிண்டால் புகையிலை எடுப்பதே சாதனை தான்,” என்கிறார் கொண்டையா. இங்கு ஒரு ஏக்கரில் சராசரியாக 2-2.5 குவிண்டால் விளைச்சல் கிடைக்கிறது.
மேற்கு பிரகாசம் பிராந்தியத்தின் தெற்கு கரிசல் மண்களும், கடலோரத்தை ஒட்டிய பகுதிகளிலும் அதிக அளவாக ஏக்கருக்கு 6-7 குவிண்டால் கிடைக்கிறது. ஆனால் அங்கும் கூட விவசாயிகளுக்கு விலை கட்டுப்படி ஆகாததால் புகையிலை உற்பத்தியை கைவிட்டு வருகின்றனர்.
கிழக்கு பிரகாசமின் நகுலுப்பலா படு மண்டலத்தில் உள்ள டி. அக்ரஹாரமில் ஒரே கிராமத்தில் அதிக அளவாக உள்ள 220 கொட்டகைகளில் இப்போது 60 மட்டுமே செயல்படுகின்றன. ஆந்திர பிரதேசம் முழுவதும் உள்ள 42,000 கொட்டகைகளில் 15,000 பயனின்றி போய்விட்டது என்கிறது 2015ஆம் ஆண்டு கிராமத்தில் கணக்கெடுப்பு எடுத்த அனைத்து இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அறிக்கை. கொட்டகைகள் என்பது புகையிலை விவசாயிகளின் மூலதன-தீவிர முதலீடு ஆகும், அங்கு புகையிலை உலர்த்தப்பட்டு வர்த்தகர்கள் அல்லது சிகரெட் நிறுவனங்களுக்கு விற்கப்படும்.
புகையிலை பயன்பாட்டினைக் குறைக்கும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு கூட்டமைப்பிற்கும் (FCTC) புகையிலை கொட்டகைகள் மூடப்படுதல், பயிரிடும் நிலங்கள் சுருங்குதலுக்கு தொடர்புள்ளது. 2016ஆம் ஆண்டில், இந்தியா உட்பட FCTCஇல் கையெழுத்திட்ட நாடுகள், படிப்படியாக புகையிலை உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொண்டன. இதனால் புதிய கொட்டகைகளுக்கான உரிமங்கள் கொடுப்பதை புகையிலை வாரியம் நிறுத்திவிட்டது. புகையிலையில் லாபம் குறைவதால் இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.
டி.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் 40 வயது குத்தகை விவசாயி சீனிவாச ராவ். இவர், ஆண்டு கூலியாக ஏக்கருக்கு ரூ.30,000 என்று ஒன்பது ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து புகையிலை பயிரிட்டத்தில் கடந்த விவசாய பருவத்தில் மட்டும் 1.5 லட்சம் கடன் ஏற்பட்டுவிட்டது. “நான் 2012ஆம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் கொட்டகை கட்டினேன். அதை கடந்தாண்டு ரூ.3 லட்சத்திற்கு விற்றுவிட்டேன்,” என்கிறார் அவர். “இப்போது கொட்டகையை வாங்குவதற்கு கூட யாரும் தயாராக இல்லை. ஒவ்வொரு கொட்டகைக்கும் அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசிடம் நாங்கள் கோருகிறோம். அப்படி கிடைத்தால் சில நிமிடங்களில் நாங்கள் புகையிலை பயிரிடுவதை கைவிட்டு விடுவோம். 2010ஆம் ஆண்டு தொழிலாளர் குழுவான சுமார் 33 முத்தாஸ் இங்குள்ளக் கொட்டகையில் வேலை செய்வதற்காக கிராமத்திற்கு வெளியிலிருந்து வந்தனர். இந்தாண்டு 10 முத்தாஸ் மட்டுமே இங்கு உள்ளனர்.”
இவை அனைத்தும் பிரகாசம் புகையிலை விவசாயிகளை குறைந்தத் தண்ணீரில் வளர்ந்து, லாபம் தரும் மாற்று பயிர்களுக்கு மாறுவதற்கு உந்தின. முக சிந்தலா கிராமத்திற்கு நான் வந்தபோது, சுப்பாராவ் தனது ஸ்மார்ட் போனில் லக்கர் பயிர்கள் குறித்த யூடியூப் சேனல் வீடியோவை மற்ற விவசாயிகளிடம் காட்டிக் கொண்டிருந்தார். “எங்கள் கிராமத்திலும் இப்பயிரை நாங்கள் முயற்சிக்க வேண்டும்,” என்கிறார். அவர்கள் தலையசைத்துவிட்டு அதுபற்றி மேலும் கூறுமாறு கேட்கின்றனர். “இது ஒரு பணப்பயிர். இது ஸ்ரீகாகுலம் மாவட்டத்திலும், ஒடிசாவின் சில பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது, இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை,” என்று அவர் விளக்குகிறார்.
‘எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்‘ என்று விவசாயிகள் கூறும் சுவரொட்டிகள் டெல்லியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோக்களில் காணப்படுகின்றன. புகையிலை வியாபாரிகளுக்கான தேசிய அமைப்பான அகில பாரதிய பான் விக்ரேதா சங்கதனின் இலச்சினை மற்றும் பெயரை அது கொண்டுள்ளது. இந்த பிரச்சாரம் குறித்து விவசாயிகளிடம் நான் கேட்டபோது அவர்கள் புகையிலை நிறுவனங்கள் குறித்து திட்டித் தீர்த்தனர். சுப்பா ராவ் பேசுகையில், “பாசன வசதிக்காகவோ அல்லது சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராகவோ விவசாயிகள் ஒன்றிணைந்து போராடியிருந்தால், நாம் நன்றாக இருந்திருக்கலாம்.”
இந்த கட்டுரையின் மற்றொரு பதிப்பு, இணைந்து எழுதப்பட்டு பிப்ரவரி 2, 2018 அன்று ‘தி இந்து பிசினஸ்லைனில்’ முதலில் வெளியிடப்பட்டது.
தமிழில்: சவிதா