இது பவகடாவின் அழகிய அஞ்சல் அட்டை தருணம். முதலில் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது. தெருக்கள் முழுவதும் பூகேன்வில்லா மலர் கொத்துகள், வண்ணமயமான வீடுகள், அலங்கரிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் அதன் இசை ரீங்காரம் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற நகரத்தில் நடப்பவர்களின் காதுகளை சென்றடைகிறது. இவை அழகாக தோன்றலாம், ஆனால் அப்படியல்ல. ஏனென்றால் நாம் இங்கு மலம் பற்றி பேசப் போகிறோம்.

வசதியான மத்தியதர வர்க்க உணர்விற்காக இந்த வார்த்தையை மறைக்க வேண்டியுள்ளது. ஆனால் ரமனஞனப்பாவிற்கு அத்தகைய வசதி இல்லை. “வெறுங்கையால்தான் மலத்தை கழுவுவேன்” என்கிறார். துப்புரவு தொழிலாளியான இவர், பவகடா தாலுகாவிலுள்ள கன்னமெடி கிராமத்தைச் சேர்ந்தவர். இதுவே மோசமானதில்லை என்றால், இந்த மனிததன்மையற்ற வேலையை குறைக்கும் ஒரே காரணியும் வரைபடத்தில் இல்லாமல் போகும்: அது, ரமனஞனப்பாவிற்கு கடைசியாக சம்பளம் கொடுக்கப்பட்டது எப்போது தெரியுமா? அக்டோபர், 2017.

கழிவை எப்படி பிரித்து வைக்க வேண்டும் போன்ற சுவரோவியங்கள் நகரத்தின் சுவர்களை அலங்கரிக்கின்றன. ஆனால் இது அரசால் அணுமதிக்கப்பட்ட முகப்பில் ஒன்று மட்டுமே. நமக்கு தெரிந்தவரை, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் 20 பேர், அனைவரும் மடிகா சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள், சுவரோவியங்கள் வரையப்பட்ட அரங்கத்திலிருந்து 10மீ தூரத்திலுள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு மாதமும் ரமனஞ்னப்பாவிற்கு கிடைக்கும் 3,400 ரூபாய், ஐந்து நபர்கள் கொண்ட அவரது குடும்பத்திற்கு – அவரது மனைவி மற்றும் பள்ளி செல்லும் மூன்று குழந்தைகள் – 30 நாட்களுக்கு போதுமானதாக இல்லை. அந்த சம்பளமும் இவருக்கு கடந்த ஒன்பது மாதங்களாக கொடுக்கப்படவில்லை.

சிலர் தங்கள் ஊதியத்தை இன்னும் பெறவில்லை, மற்றவர்களோ சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை இன்னும் பெறாமல் உள்ளனர்.

Pavagada's deceptively picturesque landscape
PHOTO • Vishaka George
painting on sanitation
PHOTO • Vishaka George

பவகடாவின் கண்ணை கவரும் அழகான நிலப்பரப்பு, நகரில் உள்ள சுகாதார தொழிலாளர்களின் கொடூர யதார்த்த நிலையை திரையிட்டு மூடுகிறது. போலவே நகரில் உள்ள ஸ்வாச் பாரத் சுவரோவியங்களும்

“சாலைகளை பெருக்குவது, பொது கழிப்பறை மற்றும் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்வது, தினமும் வடிகாலை திறந்துவிடுவது இதுவே என் வேலை. இந்த வேலைக்கு மாதம்தோறும் 13,400 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என நான்கு மாதங்களுக்கு முன் என்னிடம் கூறினர். ஆனால் என்னுடைய 3,400 சம்பளம் இன்னும் மாறவில்லை” என்கிறார் கொடமடகு கிராமத்தைச் சேர்ந்த நாராயனப்பா. இவர் ரமனஜனப்பாவை விட கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறார். ஏனென்றால் அவருடைய பஞ்சாயத்தில் இன்றும் துப்புரவு பணியாளர்கள் குறைவான ஊதியமே பெறுகிறார்கள்.

தென் இந்தியாவில் கர்நாடகாவில்தான் அதிக எண்ணிக்கையில் கையால் மலம் எள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாக 2011 சமூக பொருளாதார மற்றும் சாதிய கணக்கெடுப்பு கூறுகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் தும்கூர்தான் முன்னனியில் இருப்பதாக துப்புரவு தொழிலாளர்கள் சம்மந்தமாக கர்நாடகா மாநில ஆணையம் நடத்திய புதிய ஆய்வு கூறுகிறது.

வெறும் தடையை மட்டுமே கவனம் செலுத்திய 1993-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக, கையால் மலம் அள்ளுவதற்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற வேலைகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக  வழக்கு பதிவு செய்து இரண்டு வருடம் வரை சிறைத்தண்டனை பெற்று தரலாம் என 2013 சட்டம் கூறுகிறது. மேலும், பஞ்சாயத்து, நகராட்சி, காவல்துறை மற்றும் சட்டசபை உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைக்க கூறியுள்ளது.

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நபர்களே, ரமனஜனப்பா போன்ற பணியாளர்களை முறைகேடான வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

“பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்குள்ளேயும் படிநிலைகள் நிலவுகிறது” என்கிறார் பெங்களூரில் உள்ள ராமையா பொது கொள்கை மையத்தின் துணை இயக்குனர் சேத்தன் சிங்காய். அவர் கூறுகையில், “குடும்பத்தில் யாராவது செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது மதுபானம் அல்லது போதை அடிமைகளையோ அடையாளம் கண்டு, அவர்களை கையால் மலம் அள்ளும் வேலையில் அமர்த்துகிறார்கள்” என்று கூறுகிறார். துப்புரவு தொழிலாளர்களுக்கான கர்நாடக மாநில ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் மொத்தம் எத்தனை மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர் ஆய்வு செய்து வருகிறார்.

 manual scavengers At a meeting in Ambedkar Bhavan
PHOTO • Vishaka George
painting on the wall of a man throwing garbage
PHOTO • Vishaka George

அம்பேத்கர் பவனில் நடைபெற்ற கூட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட மலம் அள்ளும் தொழிலாளர்கள் தங்கள் வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தினர்; அரங்கத்திற்கு வெளியே, நகரின் சுவர்கள் வேறுவிதமான சித்திரத்தை நமக்கு காண்பிக்கின்றன

எத்தனை முறை முயற்சி செய்தும், முறைகேடான வேலைவாய்ப்பு மற்றும் போதிய வருமானம் கொடுக்கப்படாதது குறித்து கொடமடகு பஞ்சாயத்து அலுவலகம் பதிலளிக்கவில்லை. கன்னமெடி பஞ்சாயத்து அலுவலகத்தின் பதில் முரட்டுதனமாகவும் விரோதமாகவும் இருந்தது.

நகராட்சி போல் அல்லாது பஞ்சாயத்துகளில் பணியாற்றுபவர்கள் ‘நிரந்தர’ ஊழியர்களாக கருதப்படுகிறார்கள். ஆனாலும் அதற்கேற்ற பலன்களை அவர்கள் யாரும் பெறுவதில்லை – குறிப்பாக வருங்கால வைப்பு நிதி அல்லது காப்பீடு.

நகராட்சி போல் அல்லாது பஞ்சாயத்துகளில் பணியாற்றுபவர்கள் ‘நிரந்தர’ ஊழியர்களாக கருதப்படுகிறார்கள். ஆனாலும் அதற்கேற்ற பலன்களை அவர்கள் யாரும் பெறுவதில்லை – குறிப்பாக வருங்கால வைப்பு நிதி அல்லது காப்பீடு.

கிராம பஞ்சாயத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்களில் நிலை இப்படியிருக்கிறது என நீங்கள் நினைத்தால், நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் நிலையை கொஞ்சம் பாருங்கள். இவர்களின் அவலநிலை, விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும்.

கர்நாடகாவில் சுகாதார பணிகளை ஒழுங்குபடுத்தும் முயற்சியின் விளைவாக, 700 மக்களுக்கு ஒரு துப்புரவு பணியாளர் என்ற விகிதாச்சாரத்தை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. ஒழுங்குப்படுத்தப்பட்ட பணிகள் அல்லது நிரந்தர வேலைவாய்ப்பு காரணமாக பணியாளர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்க வேண்டும். இதனால் பணியிலிருந்து நீக்கப்படுவதோடு மறுவாழ்வும் நிவாரணமும் வழங்கப்படுவதில்லை.

நியாமற்ற எண்ணிக்கை (1:700) காரணமாக, இதுவரை பவகடாவில் மட்டும் 30 நபர்கள் தங்கள் பணியை இழந்துள்ளதாக கூறுகிறார் ஒப்லேஷ்.

sanitation worker cleaning the gutter
PHOTO • Vishaka George
sanitation worker cleaning the gutter
PHOTO • Vishaka George

கடந்த 10 வருடங்களில், கர்நாடகாவில் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும்போது 69 பேர் இறந்ததாக கூறப்படுகிறது

மணி என்பவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒப்பந்த தொழிலாளரான அவருடைய கணவரும் நீக்கப்பட்டுள்ளார். “என் குழந்தைகளை எப்படி கவனித்து கொள்வது? எப்படி நான் வாடகை செலுத்துவேன்?” என அவர் கேட்கிறார்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள தொகைக்காக ஜூன் 11-ம் தேதி 27 கோடி ரூபாயை ஒதுக்கியது ப்ரூகத் பெங்களூரு மகாநகர பலிக்கே (BBMP). ஏழு மாதங்களாக எந்த ஊதியமும் பெறாததையடுத்து, ஒப்பந்த தொழிலாளரான 40 வயது சுப்ரமனி தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு பிறகே நிலுவை தொகையை கொடுக்க முன்வந்தது அரசு. BBMP-ல் சுகாதார கூடுதல் ஆணையர் சர்ஃபராஸ் கான் என்னிடம் கூறுகையில், “பெங்களூரில் 18,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுத்துவிட்டோம். தொழிலாளர்களுக்கு பயோமெட்ரிக் சோதனை செய்த பிறகே சம்பளத்தை கொடுத்தோம்”.

ஆனால், “BBMP 27 கோடியை ஒதுக்கியபோது, தங்களுக்கு நீண்டநாள் தரப்படாத ஊதியத்தை பெங்களூரில் உள்ள 50 சதவிகித ஒப்பந்த தொழிலாளர்களே பெற்றனர்” என கூறுகிறார் ஒப்லேஷ். பெங்களூரில் மட்டும் 32,000 ஓப்பந்த தொழிலாளர்கள் இருப்பதாகவும், ஆனால் பயோமெட்ரிக் சோதனை வந்த பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

“நிதி தடைகள்” இருப்பதாலும் வேலைகளை ஒழுங்குப்படுத்தும் பிரச்சனையாலும் ஊதியத்தை கொடுக்க முடியவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்பட்டுவிடும் என பவகடா நகரத்தின் சுகாதார ஆய்வாளர் எஸ். ஷம்சுதின் கூறுகிறார். இவரின் கீழ்தான் நகராட்சி பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்த பிரச்சனைகள் எதுவும் ஷம்சுதினை பாதிக்கவில்லை. தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை பெற்று வருகிறார். எப்படியும் அவருடைய பதவிக்கு மாதம்தோறும் ரூ.30,000 சம்பளமாக கிடைக்கும் என கூறுகிறார் ஒப்லேஷ்.

பவகடாவின் சாக்கடை வடிகால் பிரச்சனைக்கு பதிலளிக்கும் விதமாக 2013-ம் ஆண்டு இயந்திரமயமாக்கல் வந்தது. ஒருவழியாக தங்கள் நாடும் அரசாங்கமும் தங்களை மனிதர்களாக பார்க்க தொடங்கிவிட்டது, இனி சந்தோஷமாக வாழலாம் என நகராட்சி ஊழியர்கள் நினைத்தனர்.

Sanitation worker have gathered at one place
PHOTO • Vishaka George

கர்நாடகாவில் சுகாதார பணிகளை ஒழுங்குப்படுத்துவதன் விளைவாக, பவகடாவில் 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்

போகப் போக இயந்திரத்தால் அரை திரவ பொருளை மட்டுமே வெளியே எடுக்க முடியும் என தெரிய வந்தது. போதுமானளவு திரவமாக்கப்படாவிட்டால், நபர் ஒருவர் சாக்கடை குழிக்குள் குதித்து குழாயை அடைத்து கொண்டிருக்கும் வண்டல்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். இப்போது பணியாளர் மலம் கிளறுபவராக மாறுகிறார். வாழ்வதற்கான உரிமை போராட்டத்தில் நிச்சியமாக இது எந்த வகையிலும் சேராது.

கடந்த 10 வருடங்களில் மட்டும், கர்நாடகாவில் மலம் அள்ளும் பணியில் ஈடுபடும்போது 69 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும்போது இறந்துபோனதாக கூறுகிறார் ஒப்லேஷ்.

டேங்கிற்குள் குதிப்பதற்கு முன், எங்கள் கால்சட்டையை கழற்றி விடுவோம். ஆனால் அதற்கு முன்பே 90மில்லி சாராயத்தை குடித்துவிடுவோம். அப்போதுதான் எங்களால் வேலை செய்ய முடியும் என்கிறார் நாராயனப்பா.

அன்றைய நாள் அல்லது அதற்கடுத்த நாள் சாப்பிட விரும்பினாலோ, இன்னும் கொஞ்சம் அதிகமாக சாராயத்தை குடிப்பார்கள்.

“துர்நாற்றத்தை போக்க எதையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என தோன்றும்” என்கிறார் ராமஞ்சப்பா.

90 மில்லி சாராயம் 50 ரூபாக்கு கிடைகிறது. சிலர் ஒருநாளைக்கு சாராயத்திற்காக 200 ரூபாய் கூட செலவு செய்கின்றனர். இவ்வுளவு குறைவான ஊதியத்தில் இதை வழக்கமாக்கி கொள்ள முடியாது.

Sanitation worker in a meeting
PHOTO • Vishaka George
Sanitation worker putting their problems in a meeting
PHOTO • Vishaka George
Sanitation worker in a meeting
PHOTO • Vishaka George

“நீங்கள் இதைதான் செய்தாக வேண்டும் என மக்கள் எங்களிடம் கூறுகின்றனர். எங்களுக்கு சமூக கடமை உள்ளது” என கூறுகிறார் கங்கம்மா (இடது). நாராயனப்பா (நடுவில் இருப்பவர்) மற்றும் ரமனஜப்பாவும் (வலது) தங்கள் துயரத்தை பகிர்ந்து கொள்கின்றனர்

குடும்பத்திடமும் அருகில் உள்ளோர்களிடமும் கடன் வாங்கியே அவர்கள் உயிர் வாழ்கிறார்கள். கடைசியாக வேறு வழியின்று கடன் வாங்குவதற்கு வட்டி வசூலிப்பவர்களிடம் செல்வார்கள். நிலமும், அடமானம் வைக்க எதுவும் இல்லாததால் எங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை என்கிறார் ரமனஞ்னப்பா.

சம்பளம் தரக்கூடிய வேறு நல்ல வேலை இவர்களுக்கு இல்லையா? “இதை செய்வதற்குதான் நீங்கள் இருக்கிறீர்கள் என மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள். எங்களுக்கு சமூக கடமை இருக்கிறது. நாங்கள் செய்யாவிட்டால், வேறு யார் இதை செய்வது? பல தலைமுறைகளாக இதைதான் எங்கள் குடும்பங்கள் செய்து வருகின்றன” என கூறுகிறார் பவகடாவில் உள்ள தொம்மதமாரி பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருக்கும் கங்கம்மா.

“இது சாதியால் நேர்ந்த ஆபத்து. இதை செய்வதற்காகதான் நாம் பிறந்துள்ளோம் என இது உங்களை நம்ப வைக்கிறது. இவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை, ஆனால் அதிக வேலை செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என இவர்களுக்கு அதிகாரிகள் வாக்குறுதி கொடுப்பார்கள். இது அவர்களுக்கான வலை” என கூறுகிறார் ஒப்லேஷ்..

1989-ம் ஆண்டு மரண தண்டனை பெற்றதும், அமெரிக்க தொடர் கொலையாளி ரிச்சர்ட் ரமிரெஸ் கூறியது: “பெரிய விஷயம். இதோடு சேர்த்து இறப்பு வருமென்று தெரியும்”. பவகடா தாலுகாவிலும் இதுதான் நடக்கிறது. இங்கு இறப்பு என்பது பெரிய விஷயமல்ல. அவர்களுக்கு அது இயல்பாக இருக்கிறது, ஆனால் இங்கு துப்புரவு தொழிலாளர்களே தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். குறைந்தளவு பாதுகாப்பு கவசம், அதிகப்பட்ச ஆபத்து, விடுமுறை கிடையாது மற்றும் ஊதியம் கிடையாது. வாருங்கள், அஞ்சல் அட்டைக்கு பின்னால் உள்ள உலகத்திற்கு செல்வோம்.

இந்த கட்டுரைக்காக நேர்கண்ட சுகாதார பணியாளர்கள், தங்கள் முதல் பெயரை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த கட்டுரைக்காக தனது நேரத்தையும் பெரும் உதவியையும் தந்த ஆய்வாளர் நோயல் பென்னோவிற்கு கட்டுரையாளர் நன்றி கூறிக்கொள்கிறார்.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Vishaka George

ਵਿਸ਼ਾਕਾ ਜਾਰਜ ਪਾਰੀ ਵਿਖੇ ਸੀਨੀਅਰ ਸੰਪਾਦਕ ਹੈ। ਉਹ ਰੋਜ਼ੀ-ਰੋਟੀ ਅਤੇ ਵਾਤਾਵਰਣ ਦੇ ਮੁੱਦਿਆਂ ਬਾਰੇ ਰਿਪੋਰਟ ਕਰਦੀ ਹੈ। ਵਿਸ਼ਾਕਾ ਪਾਰੀ ਦੇ ਸੋਸ਼ਲ ਮੀਡੀਆ ਫੰਕਸ਼ਨਾਂ ਦੀ ਮੁਖੀ ਹੈ ਅਤੇ ਪਾਰੀ ਦੀਆਂ ਕਹਾਣੀਆਂ ਨੂੰ ਕਲਾਸਰੂਮ ਵਿੱਚ ਲਿਜਾਣ ਅਤੇ ਵਿਦਿਆਰਥੀਆਂ ਨੂੰ ਆਪਣੇ ਆਲੇ-ਦੁਆਲੇ ਦੇ ਮੁੱਦਿਆਂ ਨੂੰ ਦਸਤਾਵੇਜ਼ਬੱਧ ਕਰਨ ਲਈ ਐਜੁਕੇਸ਼ਨ ਟੀਮ ਵਿੱਚ ਕੰਮ ਕਰਦੀ ਹੈ।

Other stories by Vishaka George
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja