கணேஷும் அருண் முகானேவும் 9ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தானே மாவட்டத்தின் மும்பை நகருக்கு அருகே இருக்கும் கொலோஷி என்கிற கிராமத்திலுள்ள வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றனர். கிடைக்கும் பொருட்களை கொண்டு கார் போன்ற பொருட்களை உருவாக்குகின்றனர். அல்லது வெறுமனே அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் பெற்றோரோ செங்கல் சூளையில் வேலை பார்க்கின்றனர்.
“அவர்கள் புத்தகங்கள் படிப்பதில்லை. இளையவன் (அருண்) மரம் மற்றும் இதரப் பொருட்களைக் கொண்டு பொம்மைகள் செய்வதில் மும்முரமாக இருக்கிறான். விளையாட்டில்தான் அவனுக்கு முழு நாளும் கழிகிறது,” என தாய் நிரா முகானே கூறுகிறார். அவர் பேசுவதை இடைமறித்து அருண், “பள்ளியில் அலுப்பாக இருக்கிறதென எத்தனை முறை சொல்வது?” எனக் கேட்கிறார். இருவருக்குமான வாக்குவாதம் நல்ல விதமாக முடியவில்லை. வீட்டைச் சுற்றிக் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சமீபத்தில் உருவாக்கியிருக்கும் காரைக் கொண்டு விளையாட அருண் வெளியே சென்று விட்டார்.
26 வயது நிரா 7ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவரது கணவரான 35 வயது விஷ்ணு இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். மகன்கள் முறையான கல்வி பெற வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். அப்போதுதான் தங்களைப் போல் செங்கல் சூளை வேலைகளை அவர்கள் பார்க்க வேண்டியிருக்காது என இருவரும் நினைக்கின்றனர். பல பழங்குடி குடும்பங்கள் ஷாஹாப்பூர் கல்யாண் பகுதிக்கு செங்கல் சூளை வேலைக்காக இடம்பெயர்கின்றனர்.
“என்னால் அதிகம் படிக்க முடியவில்லை. ஆனால் என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமென விரும்புகிறேன்,” என்கிறார் கட்கரி சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு. மகாராஷ்டிராவில் கட்கரி சமூகம் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடிக் குழுவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் கட்கரி சமூகம் 41 சதவிகித படிப்பறிவு கொண்டிருப்பதாக பழங்குடித்துறை அமைச்சகத்தின் 2013ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன் போதுமான மாணவர்கள் இல்லாமல் உள்ளூர் அரசாங்கப் பள்ளி மூடப்படவிருந்தபோது விஷ்ணுவும் அவரது மனைவியும் மகன்களை மட் கிராமத்திலுள்ள (மட ஆசிரம சாலை என உள்ளூரில் அழைக்கப்படுகிறது) அரசு ஆசிரமப் பள்ளியில் சேர்த்தனர். அரசாங்கத்தால் நடத்தப்படு 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகள் கொண்ட இந்த விடுதிப் பள்ளி தானே மாவட்டத்தின் முர்பாதிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 379 மாணவர்களில் 125 மாணவர்கள் அவர்களின் மகன்களைப் போல விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். “பள்ளியிலேயே தங்கி, உண்டு அவர்கள் படிக்க முடிவதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனினும் அவர்கள் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் விஷ்ணு.







