“ஹுர்…
ஹிஹிஹிஹி...ஹோ…ஹிஹிஹிஹி…ஹோ...”
பழத்தோட்டத்துக்கு மேலுள்ள வானில் திடீரென எண்ணற்ற பறவைகள் தோன்றின. அவற்றை விரட்ட சுராஜ் எழுப்பிய சத்தங்களால் பயந்து அவை பறந்தன. பேரிக்காய் பழத் தோட்டத்தை பராமரிப்பவராக அவருக்கு, பழுக்கும் பழங்களிலிருந்து பசி கொண்ட பறவைகளை விரட்டுவதுதான் வேலை. அவற்றை பயமுறுத்தி விரட்ட அவர் சத்தமாக கத்துகிறார். உண்டிவில்லில் களிமண் உருண்டைகள் எறிகிறார்.
வட மேற்கு பஞ்சாபின் தர்ன் தரான் மாவட்டத்தின் ஓரங்களில் அமைந்திருக்கும் பட்டி பழத் தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. புலம்பெயர் தொழிலாளர்கள் வருடந்தோறும் பேரிக்காய்களையும் பேரிக்காய் பழங்களையும் பராமரிக்க வருவார்கள். பழங்களை கொத்தவும் பறிக்கவும் எந்த நேரமும் இறங்கும் பறவைகளை விரட்டுவதுதான் அவர்களது வேலை. இப்பழத்தோட்டங்களை காக்கும் சுராஜ் போன்றவர்கள் ரக்கேகள் என அழைக்கப்படுகின்றனர்.
சுராஜ் பகர்தர் பார்த்துக் கொள்ளும் பழத்தோட்டத்தில் கிட்டத்தட்ட 144 பேரிக்காய் மரங்கள் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில் இருக்கின்றன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான பழம் பழுக்கும் காலம் மொத்தத்துக்கும் 15 வயது இளைஞர்தான் ஒரே காவலர். உரிமையாளர்களால் மாதந்தோறும் 8,000 ரூபாய் ஊதியம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.
“மரங்கள் பூக்க ஆரம்பித்ததும் நிலவுரிமையாளர்கள் பழத் தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்து விடுவார்கள். குத்தகைக்கு எடுப்பவர்கள் ரக்கேகளை நியமிப்பார்கள்,” என்கிறார் சுராஜ். பெரும்பாலான ரக்கேகள் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.









