சீதாப்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது கூட ரிதேஷ் மிஷ்ராவின் செல்போன் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2ம் தேதி, ரிதேஷ் வரக் கேட்டு வரும் அழைப்புகள் அவை.
“போன் அடிப்பது நிற்கவேயில்லை,” என்கிறார் அவரின் மனைவி அபர்ணா. ”அழைப்பை ஏற்று, ரிதேஷ் மருத்துவமனையில் இருப்பதால் பணிக்கு வர முடியாது என நான் சொன்னபோதும் அவர்கள் ஏற்கவில்லை. மருத்துவமனை படுக்கையில் அவர் இருக்கும் புகைப்படத்தை நிரூபிப்பதற்காக அனுப்பக் கேட்டனர். நானும் அனுப்பினேன். உங்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்புகிறேன்,” என்றவர் அனுப்பவும் செய்தார்.
தேர்தல் பணிக்கு செல்ல வேண்டாம் என கணவரை எவ்வளவு வலியுறுத்தினார் என்பதையே அதிகமாக சொல்லிக் கொண்டிருந்தார் 34 வயது அபர்ணா மிஷ்ரா. “அவருக்கான வேலை அறிவிப்பு வந்த நேரத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். “ஆனால் தேர்தல் பணியை ரத்து செய்ய முடியாது என திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார். பணிக்கு செல்லவில்லை எனில் அதிகாரிகள் அவர் மீது வழக்கு கூட பதிவு செய்யலாம் என்றார்.”
ஏப்ரல் 29ம் தேதி கோவிட்டால் ரிதேஷ் இறந்தார். பஞ்சாயத்து தேர்தல்களின் பணிக்கு போய் இறந்த 700 உத்தரப்பிரதேச பள்ளி ஆசிரியர்களில் அவரும் ஒருவர். பாரியிடம் மொத்த பட்டியலும் இருக்கிறது. மொத்தமாக 713 பேர். 540 ஆண்கள். 173 பெண்கள். பட்டியல் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் மாநிலம் இது. அவர்களில் லட்சக்கணக்கானோர் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.
ரிதேஷ் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். சீதாப்பூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்தவர், லக்னோவின் கோசைகஞ்ச் ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணிபுரிந்தார். ஏப்ரல் 15,19,26 மற்றும் 29ம் தேதிகளில் நான்கு கட்டமாக நடந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான பணி அவருக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.












