வயல்களில் ஆண்டிற்கான நெற்பயிர்கள் தயாராகின்றன. அக்டோபர் இறுதியில் வயல்களில் விளைந்தவற்றை மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வருகின்றனர். மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டம், பர்கிதி கிராமத்தின் ஏழ்மையான சண்டால் பழங்குடியினரின் வீடுகளில் நீண்ட காலத்திற்குப் பிறகு கூடுதலான தானியங்கள் குவிந்துள்ளன.
பர்கிதியில் இளைஞர்கள், பெற்றோர், தாத்தா பாட்டிகள் என சுமார் 400 பேருக்கு குறுகிய கடுமையான பருவகால வயல் வேலைகளுக்குப் பிறகு இப்போது ஓய்வெடுக்க கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது. குளிர்காலம் நெருங்குகிறது. சோட்டா நாக்பூர் பீட பூமியின் கஜபுரு குன்றுகளின் வனங்களில் உள்ள மரங்களின் வண்ணங்கள் மாறி வருகின்றன. வடக்கிலிருந்து வீசும் குளிர் காற்றினால் சுட்டெரித்த வெயில் குறைந்து வருகிறது.
ஆனால் இந்த ஓய்வும் சிறிது காலம்தான். தங்கள் கால்நடைகளுக்கு நன்றித் தெரிவிக்க இதுவே சண்டால்களுக்கு சரியான நேரம். உலகின் இப்பகுதியில் பசுக்களே இப்போதும் வேளாண் துறையின் முதுகெலும்பாக உள்ளன. பசுக்களுக்கு பதிலாக டிராக்டர்கள் அங்கு வரவில்லை.
அறுவடைக்கு பிறகான கோ- ப்நத்னா கொண்டாட்டம் அல்லது பசுக்களின் பண்டிகை தீபாவளியுடன் வருகிறது. (வங்காளத்தில் ‘கோ’ என்றால் பசு, ‘ப்நத்னா’ என்றால் வழிபாடு.) அங்கு ஓவியங்கள், நடனங்கள், இசை, உணவு, விளையாட்டுகள் உண்டு.
சுவரோவியங்களுக்கான தேவைப்படும் பல்வேறு வண்ணங்களைத் தரும் கற்கள், மண் வகைகளை அருகில் உள்ள கஜபுரு, தோல்புரு குன்றுகளில் சேகரிக்கும் பணிகளில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர். வீட்டு முற்றத்தில் வெள்ளை நிறத்தில் கோலமிட உதவும் முக்கிய பொருளான கோங் கொடியை தேடி சிலர் இன்னும் சில தூரம் செல்கின்றனர்.
பர்கிதியில் உள்ள குயவர்கள் அல்லது கும்பகார் குடும்பத்தின் உறுப்பினர்கள் ‘பாலி மாத்திர் நோக்ஷா’ எனும் ஓவிய பாணியில் (வண்டல் மண்களில் இருந்து செய்யப்படும் வடிவங்கள்) வல்லவர்கள். கிராமத்தின் பிறருக்கும் தாங்கள் தயாரித்த சிறப்பு கணிமண்ணை விநியோகம் செய்கின்றனர். இப்பண்டிகையின் ஓர் அங்கமாக கும்பகார்கள் திகழ்கின்றனர்.
பண்டிகைக்குத் தயாராகும் வகையில் மாடு மேய்ப்பவர்கள் காடுகளில் உள்ள ஏரியில் கிராமத்தின் பசுக்கள் அனைத்தையும் குளிப்பாட்டுகின்றனர். விலங்குகளும் இந்த சிறப்பு குளியலில் மகிழ்கின்றன. அதே நேரம் சிலர் தங்கள் ஏர் கலப்பைகளையும், விவசாயத்திற்கு உதவும் பிற கருவிகளையும் அருகில் உள்ள குளங்களில் கழுவுவதில் பரபரப்பாக உள்ளனர்.
சுமார் 65 வயதாகும் பகு முடி கிராமத்தின் முன்னோடி இசைக் கலைஞர். இசை கருவிகளுக்கு தோல் கட்டுவதிலும் வல்லுநர். வங்காளத்தில் டோம் சமூக மக்கள் தான் பொதுவாக இந்த வேலையைச் செய்கின்றனர். தனது டோல், மடோல் (ஒவ்வொரு சண்டால் குடும்பத்தின் அங்கமாக உள்ள இந்த கை டோலக்கு தாள ஒழுங்கை காக்கிறது) போன்ற கருவிகளின் தோல் பகுதிகளை பகு முடி சரிசெய்கிறார். பண்டிகையின் போது டோலக் வாசிப்பதற்காக பர்கிதியின் இளைஞர்களை அவர் தயார் செய்கிறார். கோ-ப்நத்னாவின் முதல்நாள் இரவில், கிராமத்தின் ஒவ்வொரு பசுக்கொட்டகைக்கும் தனது இசைக் குழுவை வழிநடத்தி சென்று கோ- ஜகானியா பாடல்களை பாடுவதே அவரது பணி. இரவின் தீய சக்திகளில் இருந்து தங்கள் கால்நடைகளை இப்பாடல்கள் பாதுகாக்கும் என கிராமத்தினர் நம்புகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கூலி வேலை செய்து வருபவர்களும் அவர்களின் உறவினர்களும் இப்பண்டிகையில் பங்கேற்க பர்கிதியில் உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்புகின்றனர். இலுப்பை மரப் பூவிலிருந்து உள்ளூர் சாராயம் தயாரிக்கும் ஒற்றைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் இரவு பகலாக வேலை செய்கின்றனர்.
2014ஆம் ஆண்டு இக்கிராமத்திற்கு நான் வந்தபோது இப்பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளின் இருப்பு காணாமல் போயிருந்தது. துணை இராணுவப் படைகளும் இல்லை. மழையும் அதிகமாக இருந்தது. இந்த சிறிதளவு வளமை கிராமத்தினரை பள்ளி வளாகத்திற்குள் பண்டிகையின் இரண்டாவது நாள் இரவில் சாவ் நடனக் குழுவை அழைத்து ஆட வைக்க அனுமதித்தது.
த்னேகி எனப்படும் மாவு இடிக்கும் கருவியில் பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அரிசி இடிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்டது இக்கருவி. இதில் கிடைக்கும் அரிசி மாவினைக் கொண்டு வண்ணங்களும், பண்டிகைக்குத் தேவையான பல்வேறு உணவுப் பொருட்களுக்கான முதன்மை உட்பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். ஏரிகளில் குளித்துவிட்டு வரும் பசுக்களை வரவேற்க ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது நான்கு கிலோ அரிசி மாவில் தங்கள் வீட்டு முற்றத்தில் கோலமிடுகின்றனர். இந்தியாவின் ஏழ்மையான மாவட்டமாக கருதப்படும் புருலியாவில் இப்பண்டிகை ஆண்டு முழுவதுமான துன்பங்கள், துயரங்களை மறக்க உதவுகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக கூடுதல் தானியங்கள் கொண்டு அலங்காரமும் செய்யப்படுகிறது.
கோ-ப்நத்னாவின் இறுதியான மூன்றாவது நாளில், எங்கும் கேளிக்கைகளும், விளையாட்டுகளும் நிறைந்துள்ளன. அனைத்து சடங்குகளும் அச்சமூகத்தின் கால்நடைகளை குறிப்பாக பசுக்களை மையப்படுத்தியே உள்ளன. கிராமத்தினர் தங்களின் கால்நடைகளுக்கு வண்ணம் பூசி வழிபட்டு, நெற்கதிர்களில் தலையணிகளைச் செய்கின்றனர். பசுத் தொழுவங்களுக்கும் புதிதாக வண்ணம் பூசப்படுகிறது.
முக்கிய நிகழ்வான கோருக்நுடா விளையாட்டு மாலையில் நடக்கிறது. 35-40 கிராமப் பசுக்கள் மூங்கில் குச்சிகளில் கயிறுகளால் கட்டப்படுகின்றன. இசைக் குழுவின் தலைவர் பகு முடி தனது குழுவுடன் ஒவ்வொரு விலங்கின் முன் சென்று டோலக் வாசித்தபடி பாடல்களைப் பாடுகிறார். சில பசுக்கள் குதூகலமடைந்து குதிக்கின்றன. மக்கள் கைதட்டுகின்றனர். பண்டிகை அதிகாரப்பூர்வமாக முடிவுற்றது.
விவசாயத்திற்கு பசுக்களை பயன்படுத்தும் சண்டால்கள் அவற்றைப் பாதுகாத்து அறுவடையின் போது முக்கியப் பங்காற்றும் தங்களின் பசுக்கள் மீதான நம்பிக்கை, பக்தியை வழிபாட்டின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவின் பிற பகுதிகளில் புனிதமான உயிரினமாகவும், அரசியல் கருவியாகவும் மாறியுள்ள மாட்டிறைச்சிக்கு எதிரான கருத்து எதுவும் அவர்களிடையே இல்லை. வயதான விலங்குகளை அவர்கள் உண்கின்றனர்.
காண்க: பர்கிதியில் பசுக்கள் வீடு திரும்பும்போது
புகைப்படங்கள்: அருணவா பத்ரா மற்றும் உஜ்ஜால் பால்
தமிழில்: சவிதா