பனிமாராவின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பல்வேறு முனைகளில் போராட வேண்டியிருந்தது. இவற்றில் சில சொந்த ஊரிலேயே நடைபெற்றன.
காந்தியடிகளின் தீண்டாமை எதிர்ப்பு குரலுக்குச் செவிமடுத்துக் களம் புகுந்தார்கள்.
"எங்கள் கிராமத்தில் உள்ள ஜெகன்நாத் ஆலயத்திற்குள் நானூறு தலித்துகளுடன் நுழைந்தோம். அது பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. எனினும், சிலர் ஆதரவு தந்தார்கள். அப்படி ஆதரவு தரும் கட்டாயத்தில் அவர்கள் இருந்திருக்கலாம். அது தான் அப்போது நிலைமை. கிராமத் தலைவர் தான் கோயிலின் அறங்காவலர். அவர் பெருங்கோபம் கொண்டு ஊரை விட்டே வெளியேறினார். அவரின் செயலை நிராகரித்து, கிராமத் தலைவரின் சொந்த மகனே எங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.” என்கிறார் சமரு.
"ஆங்கிலேய பொருட்களுக்கு எதிரான இயக்கம் தீவிரமாக இயங்கியது. நாங்கள் காதி மட்டுமே அணிந்தோம். அதிலும் கையிலேயே நூற்பு செய்தோம். அதற்குக் கொள்கையும் காரணம். அதைவிட நாங்கள் ஏழைகள், அவ்வாறு நாங்களே நெய்து அணிவதே வசதியாக இருந்தது.”
அதையே விடுதலைப்போராட்ட வீரர்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள். இதை விரல்கள் ராட்டையைச் சுற்றவோ, நூல் நூற்கவோ முடியாது என்கிற நிலை வந்ததுமே நிறுத்தியிருக்கிறார்கள். “நான் 90 வயதானதும் தான் போதும் என்று நிறுத்தினேன்” என்கிறார் சமரு.
1930-களில் காங்கிரஸ் கட்சியின் தாக்கத்தில் சம்பல்பூரில் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. “அந்தப் பயிற்சிக்கு ‘சேவை’ என்று பெயர். எனினும், அந்த முகாமில் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அங்கே எப்படிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது, மோசமான உணவோடு எப்படி வாழ்வது என்று கற்பிக்கப்பட்டது. எங்கள் கிராமத்தில் இருந்து 9 பேர் அந்த முகாமின் உண்மை நோக்கம் தெரிந்தே கலந்து கொண்டோம்.” என்கிறார் சமரு.
“அந்த முகாமுக்கு ஒட்டுமொத்த கிராமமே வழியனுப்பி வைத்தது. மாலைகள், திலகம், பழங்கள் என்று தடபுடலாக இருந்தது. விடுதலை வேட்கையும், முக்கியத்துவமும் பரவியிருந்ததை உணர முடிந்தது.”
இதற்குப் பின்னால் எல்லாம் மகாத்மாவின் மாயம் இருந்தது. அவர் மக்களைச் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்து எழுதிய கடிதம் எங்களுக்குள் விடுதலைக்கனலை எழுப்பியது. எங்களைப்போன்ற ஏழைகள், படிக்காதவர்கள் தீரத்தோடு போராடி உலகை மாற்றமுடியும் என்கிற நம்பிக்கையை அக்கடிதம் தந்தது.” இந்த நம்பிக்கை பனிமாராவின் போராளிகளின் வாழ்க்கையின் வழிகாட்டி ஆனது.
காந்தியடிகளை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அவரின் குரலுக்குக் கட்டுண்டு களம் புகுந்தார்கள். “இங்கே இருந்த காங்கிரஸ் தலைவர்களான மன்மோகன் சௌத்ரி, தயானந்த் சத்பதி ஆகியோரால் உத்வேகம் பெற்றோம்.” வெள்ளையனே வெளியேறு இயக்கம் நிகழ்ந்த ஆகஸ்ட் 1942-க்கு முன்னரே சிறை புகுந்தார்கள். “நாங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். உலகப்போருக்குப் பணம், ஆள் சேர்ப்பு என்று எப்படி உதவி செய்தாலும் அது துரோகம் என அறிவித்தோம். போரை வன்முறையற்ற வழியிலேயே எதிர்கொள்ள வேண்டும். இதைக் கிராமத்து மக்கள் அனைவரும் ஆதரித்தார்கள்.” .
“ஆறு வாரங்கள் நாங்கள் சிறையிலிருந்தோம். பிரிட்டிஷ் மக்களை அதிக நாட்களுக்கு சிறையில் இருக்க வைப்பதில்லை. ஆயிரக்கணக்கில் மக்கள் சிறைகளுக்கு வந்து கொண்டிருந்தே முக்கிய காரணம். சிறையில் அடைபட அதிகமான மக்கள் விரும்பினர்.”




