“பதோஹி மாவட்டம் என்றாலே கம்பளங்கள்தான். அதைத்தவிர இங்கு வேறு வேலை இல்லை,” என்கிறார் 40 வயதாகும் நெசவாளரான அக்தர் அலி. “நான் சிறுவயதில் இங்கு நெசவு கற்றுக் கொண்டே தான் வளர்ந்தேன்.” ஆனால், கம்பளத் தயாரிப்பில் வருமானம் குறைவதால் அலி தற்போது தையல் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மண்டலத்தில் உள்ள பதோஹி மாவட்டம் நாட்டிலேயே மிகப் பெரிய கம்பள நெசவுத் தொழிலின் தலைமையகமாகச் செயல்படுகிறது. மிர்சாபூர், வாரணாசி, காஸிபூர், சோன்பத்ரா, கெளஷம்பி, அலகாபத், ஜான்பூர், சந்தவ்லி ஆகியற்றை உள்ளடக்கியது இந்த நெசவுத் தொழில் மையம். பெருமளவில் பெண்களை உள்ளடக்கிய, கிட்டத்தட்ட இருபது லட்சம் கிராமப்புறக் கலைஞர்களுக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பை வழங்குகிறது.
ஒரு சதுர அங்குலத்திற்கு 30 முதல் 300 முடிச்சுகள் வரை கைகளாலேயே போடப்பட்டு, நேர் வரிசையில் செய்யப்படும் நெசவு முறையே இப்பகுதி கம்பளத் தொழிலை வேறுபடுத்திக் காட்டுகிறது. கம்பளி, பருத்தி, பட்டு நூல் ஆகிய மூலப் பொருட்களும், இவற்றைக் கொண்டு நெசவு செய்யும் முறையும் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக மாறவே இல்லை. நெசவுக் கலைஞர்கள் இந்த கை நெசவுத் தொழில்நுட்பத்தை தங்களின் குழந்தைகளுக்கும் கடத்துகிறார்கள்.
தனித்துவம் வாய்ந்த நெசவு முறையை அங்கீகரிக்கும் விதத்தில், 2010-ம் ஆண்டில் பதோஹி கம்பளங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம், இந்த தொழிற்சாலை மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
உதாரணமாக, முபாரக் அலியும் அவரது மகன்களும் 1935-ம் ஆண்டில் தொழிலைத் தொடங்கியது முதல் 2016-ம் ஆண்டில் ஆர்டர்கள் குறையும் வரைக்கும், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். 67 வயதாகும் முபாரக்கின் பேரன் காலித் கான் தான் ஏற்றுமதி மையத்தின் முன்னாள் உரிமையாளர் ஆவார். “என் தாத்தாவும், தந்தையும் இந்தத் தொழிலை மட்டுமே செய்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொழிலைத் தொடங்கியதால், ‘மேட் இன் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற குறிப்புடன் கார்ப்பெட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.”


