புலி கர்ஜிக்கிறது. நாய் குரைக்கிறது. பல மனிதக் குரல்கள் காற்றை நிரம்புகின்றன.
சந்திராப்பூரின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து (TATR) 100 கிலோமீட்டர் தொலைவில் எதுவும் அசாதாரணமாக இல்லை.
அசாதாரணமான விஷயமென்பது என்னவென்றால் அந்த விலங்கு மற்றும் மனித ஒலிகள் பதிவு செய்யப்பட்ட ஒலிகள். மங்கி கிராமத்தின் ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலிகள். பருத்தி மற்றும் துவரை விதைக்கப்பட்ட விதர்பா நிலத்தின் நடுவே ஒரு கம்பின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி, பேட்டரியால் இயக்கப்படும் பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே பம்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
“இரவில் நான் அலாரத்தை அடிக்கவில்லை எனில், காட்டுப் பன்றிகளும் நீலான்களும் (இரவுப் பிராணிகள்) என் பயிர்களை உண்டு விடும்,” என்கிறார் 48 வயது சுரேஷ் ரெங்கே வனவிலங்குகளை அச்சுறுத்த அவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் திட்டத்தை விளக்கி. “குறிப்பாக அவை துவரையையும் உளுந்தையும் அழித்துவிடும்,” என்கிறார்.
வேலிகளை அடைத்தும் பிரயோஜனமில்லாததால், அவர் அக்கருவியின் இரண்டு பின் ப்ளக்கை, பேட்டரியில் இயங்கும் ஸ்ப்ரே பம்ப்பில் செருகுகிறார். உடனே விலங்கு மற்றும் மனித சத்தங்கள் காற்றை நிறைக்கின்றன.
பருத்தி, உளுந்து, துவரை, பச்சைமிளகாய், பச்சைப்பயறு, சோயாபீன்ஸ், கடலை போன்ற பல பயிர்களை ரெங்கே விளைவிக்கும் 17 ஏக்கர் நிலம் பற்றிதான் அவரது கவலை.
இந்த விவசாய நில அலாரங்கள் விதர்பாவின் நூற்றுக்கணக்கான கிராமங்களில், வனவிலங்குகளை கையாளும் பொருட்டு நிறுவப்படுகின்றன.
ஆனால் அலாரம்களால் பதற்றத்துக்குள்ளாவது வனவிலங்குகள் மட்டுமல்ல. “பைக்கில் அந்த வழியாக செல்பவர்களும் பயணிகளும் காலியான சாலையில் சத்தங்களை கேட்டு பயந்து போன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன,” என ரெங்கே சொல்ல, சுற்றி நிற்கும் விவசாயிகள் சிரிக்கின்றனர்.
மங்கி கிராமத்தை சுற்றி புதர் மற்றும் தேக்கு மரக் காடுகள் இருக்கின்றன. யாவத்மாலின் ரலேகாவோன் தாலுகாவிலுள்ள நாக்பூர் - பந்தர்காவ்டா நெடுஞ்சாலையைத் தாண்டி கிராமம் இருக்கிரது. அதன் கிழக்கு முனையில் இருக்கும் TATR-ல் மகாராஷ்டிராவின் 315 புலிகள் இருக்கின்றன. மேற்கில் யாவத்மால் மாவட்டத்தில் திபேஷ்வர் வன உயிர் சரணாலயம் இருக்கிறது. இங்கு புலிகள் மட்டுமின்றி சிறுத்தைப் புலிகளும் தேன் கரடிகளும் எருதுகளும் மான்களும் கூட இருக்கின்றன. அவை யாவும் பயிருக்கு ஆபத்தானவையே.
850 பேர் கொண்ட கிராமம் இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. புதர்க்காடுகளுக்கு இடையே இருக்கும் விவசாய நிலங்களை கொண்ட கிராமங்களின் பிரச்சினைகள்தான் மங்கி கிராமத்துக்கும். காடுகள் அடர்த்தியாக இருந்தால் விலங்குகளுக்கு நீரும் உணவும் உள்ளேயே இருக்கும். இல்லையெனில் ரெங்கேவின் விளையும் பயிர்தான் அவற்றுக்கான வேட்டை உணவுகள்.
“அவற்றை அவர்கள் அகற்ற வேண்டும் அல்லது வன விலங்குகளை கொல்ல எங்களுக்கு அனுமதி தர வேண்டும்,” என்கின்றனர் பிரச்சினைக்கு வனத்துறையே காரணமென குற்றஞ்சாட்டும் விவசாயிகள். “இவை யாவும் அவர்களின் (வனத்துறையின்) விலங்குகள்,” என்பதே பொதுவான பேச்சாக அங்கு இருக்கிறது.
வன உயிர் பாதுகாப்பு சட்டம், 1972 -ன்படி வனவிலங்குகளை கொல்லுவதோ பிடிப்பதோ “ஒரு வருடத்திலிருந்து ஏழு வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனையையும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறையாமல் அபராதமும்” கொண்ட குற்றமாகும். வன விலங்குகளால் சேதமாக்கப்படும் பயிர் பற்றி எந்தக் குறிப்பும்கொண்டிராத சட்டம் நிறைய சிக்கல்களை கொண்டது. நிவாரணமாக வழங்கப்படும் தொகையும் போதுமான அளவுக்கு இல்லை. வாசிக்க: ’இது புதுவகையான பஞ்சம்’ .
வழக்கமாக காட்டுப்பன்றிகளும் மான்களும் நீலான்களும் பெருங்குழுக்களாக வரும். “நீங்கள் இல்லாதபோது அவை நிலத்துக்குள் அடியெடுத்து வைத்துவிட்டால், பெரும் சேதம்தான்,” என்கிறார் ரெங்கே.
மனித நடமாட்டம் அவற்றுக்கு தடையாக இருக்கும். ஆனால் மங்கி விவசாயிகள் இரவு ரோந்து பார்ப்பதில்லை. அது அவர்களின் உடல்நலத்துக்கு பாதிப்பையும் ஆபத்தையும் விளைவிப்பதாக அவர்கள் சொல்கின்றனர். மாற்றாக இந்த சிறு கருவிகள் கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
“ஆரோக்கிய காரணங்களால் நான் வயலில் இரவுகளில் தங்க முடியாது,” என்கிறார் ரெங்கே. “இதுதான் மாற்று. இயக்க சுலபமாக இருக்கிறது. செலவும் குறைவு. மனித நடமாட்டம் இருப்பதற்கான தோற்றத்தை அலாரம்கள் கொடுக்கும். ஆனால் அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அது இருக்கும்போதும் வனவிலங்குகள் படையெடுத்து எங்கள் பயிறை சூறையாடுவதுண்டு,” என சுட்டிக் காட்டுகிறார் ரெங்கே.
ஆனால் ஒன்றுமில்லாததற்கு இந்த உத்தி மேலாக இருக்கிறது.
*****
யாதவத்மால் மட்டுமின்றி, கிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி முழுக்க பருத்தி நாடு என பெயர்பெற்று, மானாவாரி நிலப்பகுதிகள் கொண்ட இடமாகும். ஆனால், மங்கி கிராமத்துக்கு அருகே இருக்கும் பபுல்காவோனில் கட்டப்படும் பெம்ப்லா அணை முடிவுறுகையில் நிலைமை இங்கு மாறும். நீர் இந்த கிராமத்துக்கு கால்வாய்கள் மூலம் பாய்ந்து வருமானத்தை அதிகரிக்கும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கும்.
“பல பயிர் விளைவிக்கும் சூழல் என்பது இந்த வன விலங்குகளுக்கு தொடர்ந்து உணவு கிடைக்கும் சாத்தியத்தை உருவாக்குகிறது,” என்கிரார் ரெங்கே. “விலங்குகள் புத்திக்கூர்மை கொண்டவை. இந்த வயல்களுக்கு திரும்ப திரும்ப வரலாம் என புரிந்து கொள்லும்.”
பருத்தியும் சோயாபீனும் அதிகமாக விளைவிக்கும் யாவத்மாலின் இப்பகுதி, விவசாயத் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதி ஆகும். இருபது வருடங்களாக தொடரும் விவசாய நெருக்கடியில் உழன்று கொண்டிருக்கும் பகுதியும் ஆகும். முறையான கடன் பெற முடியாதது, அதிகரிக்கும் கடன், மானாவாரி விவசாயம், விலை ஊசலாட்டம், குறையும் வருமானம், அதிகரிக்கும் இடுசெலவு போன்றவை தீவிரமான பிரச்சினைகள். அச்சுறுத்தும் வன விலங்குகளின் ஊடுருவலை விவசாயிகள் "விரும்பாத பூச்சிகளுக்கு" ஒப்பிடுகின்றனர்.
ஜனவரி 2021-ல் இக்கட்டுரையாளர் மங்கி கிராமத்துக்கு செல்லும்போது பருத்தியின் முதல் அறுவடை முடிந்து, துவரை செடிகளில் காய்த்திருக்கிறது. ரெங்கேவின் நிலத்தின் ஒரு பகுதியில் விதைக்கப்பட்டிருக்கும் மிளகாய் ஒரு மாதத்தில் காய்த்துவிடும்.
அறுவடைக்கான நேரம் வந்ததும் பெரும்பகுதியை வன விலங்குகளின் சூறையாடலில் இழந்துவிட்டதாக அவர் சொல்கிறார். ஜனவரி 2021 தொடங்கி பிப்ரவரி 2023 வரையிலான இரு வருடங்களில் பாரி, பல முறை ரெங்கேவை சந்தித்திருக்கிறது. அவர் பலமுறை வனவிலங்குகளுக்கு பயிரை இழந்திருக்கிறார்.
வேறு வழியின்றிஅவர் ஒலிபெருக்கியுடன் கூடிய சிறு எலெக்ட்ரானிக் பெட்டிக்கு செலவு செய்தார். உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு சூரிய ஆற்றலால் இயங்கும் கருவி சமீபமாய் சந்தைக்கு வந்திருக்கிறது. சீன உற்பத்தி வகைகளும் மலிவாக கிடைக்கின்றன. உள்ளூர் கடைகளில் கிடைக்குமிக் கருவிகள் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தரம், பொருள், பேட்டரி காலம் ஆகியவற்றை பொறுத்து விலை மாறுகிறது.
யாவத்மாலின் இப்பகுதி, விவசாயத் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதி ஆகும். அச்சுறுத்தும் வன விலங்குகளின் ஊடுருவலை விவசாயிகள் "விரும்பாத பூச்சிகளுக்கு" ஒப்பிடுகின்றனர்
கடந்த வருடத்தில், இக்கட்டுரையாளர் விதர்பா பகுதிகளில் இரவு நேரம் சத்தங்களாக வெடிக்கும் வித்தியாசமான அலாரம் வகையை கண்டறிந்தார்.
“இந்த அலாரம்களை சில வருடங்களுக்கு முன் பயன்படுத்தத் தொடங்கினோம்,” என்கிறார் மங்கியின் நான்கு ஏக்கர் விவசாயியான ரமேஷ் சரோட். பயிரைக் காப்பாற்றவென பல சோளக்காட்டு பொம்மைகளை நிறுத்தி வைத்த பிறகும் இக்கருவியை அவர் நிறுவினார். “நாள் முழுக்க நாங்கள் பட்டாசுகள் கூட வெடித்து பார்த்தோம். ஆனால் செலவு அதிகமாகவும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் இருந்தது. இந்த அலாரம் பெரும்பாலான எலக்டரானிக் கடைகளில் கிடைக்கிறது,” என்கிறார் அவர்.
மாலையில் வீடு திரும்பும் முன் எல்லா விவசாயிகளும் இந்த கருவிகளை இயக்கி வைத்துவிட்டு செல்கின்றனர். வயல்களிலிருந்து எழும்பும் விலங்குகளின் எலெக்ட்ரானிக் சத்தம், சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தின் அவரது வீட்டிலிருந்தே கேட்கும். ஆனால் அதுவும் சில விலங்குகளுக்கு போதாது என்பதால், கிடைமட்டமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு ஸ்டீல் தட்டை காற்றின் ஆற்றலில் சுற்றி அடிக்கும் ஒரு சுழல் கருவியை ரெங்கே கண்டுபிடித்தார். எல்லா பக்கங்களிலும் அது இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதை மறுமுனையிலுள்ள ஒரு மரக் கம்பத்திலும் அவர் கட்டி வைத்திருக்கிறஅர்.
“எங்களின்
திருப்திக்காக இதை செய்கிறோம்,” என்கிறார் ரெங்கே விரக்தியுடன். “வேறென்ன செய்வது!”
சூட்சுமம் என்னவென்றால், அலாரம்களில் சத்தம் இருந்தாலும், “மனிதர்கள் மற்றும் காவல் நாய்கள்” மணம் இருப்பதில்லை என்பதுதான். எனவே அவை வனவிலங்குகளுக்கு தடையாக இருப்பதில்லை.
*****
“அறுவடைக் காலத்தில் நாம் எச்சரிக்கையாக இல்லையென்றால் 50லிருந்து 100 சதவிகிதம் வரை பயிரிழப்பு நேரும்,” என்கிறார் ரெங்கே.
மராத்தி மொழியின் வட்டார வழக்கில், “அஜி த்யே சப்பா சாஃப் கர்தே (விலங்குகள் மொத்த வயலையும் அழித்து விடும்)” என்கிறார்.
அவரின் வீட்டிலிருந்து அதிக தொலைவிலில்லாத அவரின் வயலில் நாங்கள் 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் நடுவே சென்று பார்த்தோம். அவரின் குறுவை சாகுபடி பயிரான கோதுமையை காட்டுப்பன்றிகள் சூறையாடியதற்கான தடம் இருந்தது.
மிளகாய்ச் செடிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. “மயில்கள் மிளகாய்கள் உண்ணும்,” என்கிறார் ரெங்கே, முழுமையாக வளர்ந்த பச்சை மற்றும் சிவப்பு மிளகாய் செடிகளினூடாக நடந்து கொண்டிருக்கும்போது. “அவற்றின் (மயில்கள்) அழகில் மயங்கி விடாதீர்கள். அவையும் அழிவை ஏற்படுத்தவல்லவை,” என்கிறார் அவர். கடலைப் பயிரை அவர் ஓரிரண்டு ஏக்கரில் பயிரிடுகிறார். ஏப்ரல் மாதத்தின் நடுவே அவை அறுவடை செய்யப்பட காத்திருக்கின்றன. காட்டுப்பன்றிகளுக்கு நிலக்கடலை பிடிக்கும்.
பயிரிழப்பால் ஏற்படும் நஷ்டங்களை தாண்டி, அலாரம்களும் பேட்டரிகளும் வேலிகளை சுற்றி போடப்பட்டிருக்கும் நைலான் புடவைகளும் கூடுதல் செலவு. செடிகளுக்கு அடியில் சிறு பொட்டலங்களில் கட்டப்பட்டிருக்கும் அந்துருண்டைகளை காட்டுகிறார் ரெங்கே. அவை விலங்குகளை விரட்டும் மணம் கொண்டவை என யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய உத்திகள் பயன்படாமல் போனாலும் அவர் புது உத்தி எதையும் முயல தயாராகவே இருக்கிறார்.
“இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை,” என்னும் சரோட், அவரது நிலத்தின் ஒரு பகுதியை தரிசாக விட்டிருக்கிறார். “இரவு முழுக்க விழித்து ரோந்து பார்த்தால் ஆரோக்கியம் நலிவுறும். நாங்கள் தூங்கி விட்டால், எங்களின் பயிரை இழந்துவிடுவோம். நாங்கள் என்ன செய்வது!”
விதர்பாவில் காடுகளுக்கு இடையே நிலங்கள் வைத்திருப்பவர்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகளின் தன்மை இது. சில சிறு விவசாயிகள் அவர்களின் நிலங்களை தரிசாக விட்டிருக்கின்றனர். திடீர் இழப்பு, நேரம் மற்றும் ஆற்றல் விரயம், பயிரை விளைவிக்கும் பண விரயம், இரவு ரோந்து சென்று நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
வனவிலங்குகளை நீங்கள் ஜெயிக்க முடியாது என்கிற துயரத்தில் இருக்கும் விவசாயிகள், அவர்களின் விளைச்சலில் ஒரு பகுதியை விலங்குகளுக்கு இழப்பதென்பதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர்.
ஒவ்வொரு காலையும் கெட்டது நடந்திருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையுடன் வயலுக்கு செல்கிறார் ரெங்கே.
தமிழில் : ராஜசங்கீதன்