பிரவீன்குமார் ஒரு ஸ்கூட்டரில் தனது ஊன்றுகோலுடன் உட்கார்ந்து இருக்கும் இடத்திற்கு அருகில், ஒரு கையில் தூரிகையுடன், தன்னைச் சுற்றியிருக்கும் நபர்களுடன் பேசிக்கொண்டே, 18 அடி நீளமுள்ள பெரிய கேன்வாஸில் சிங்குவில் நடைபெற்று வரும் விவசாய போராட்டத்தின் காட்சிகளை சித்திரமாக்கிக் கொண்டிருக்கிறார்.
சிங்குவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள லூதியானாவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளார் பிரவீன். இவர் ஒரு ஓவியர் மற்றும் ஓவிய ஆசிரியராவார். ஜனவரி 10 ஆம் தேதி ஹரியானா - தில்லி எல்லையிலுள்ள போராட்ட களத்தை அடைந்தவர் தனது பங்களிப்பை அளிக்க விரும்பினார்.
"இதை நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை, கடவுள் எனக்கு மிகுதியாகவே தந்துள்ளார், அது குறித்து எனக்கு எந்த பதற்றமும் இல்லை. இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன் என்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.
"நான் 70% மாற்றுத்திறன் உடையவன்", என்று அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது போலியோ நோயின் தாக்கத்தினால் முடங்கிய அவரது கால்களை காண்பித்துக் கூறுகிறார். இந்தக் குறைபாடோ அல்லது அவரது குடும்பத்தினரின் தொடக்ககால அதிருப்தியோ அவர் சிங்குவிற்கு பயணம் செய்வதை தடுக்கவில்லை.
43 வயதாகும் பிரவீன், லூதியானாவில் தான் வரையத் தொடங்கிய பெரிய கேன்வாஸ் ஓவியத்தை சிங்குவிற்கு கொண்டு வந்தார். அங்கும் அவர் தொடர்ந்து வரைந்து வந்தார், போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தெருவில் அமர்ந்து கொண்டு அந்த வேலையை அவர் தொடர்ந்து செய்து வந்தார் - அது தயாராகும் வரை.



