மென்மையான வெள்ளைத் தோலுடன் கூடிய இனிப்பு பழத்தை கிருஷ்ணன் கண்டு பிடிக்கும் போது அதிக உற்சாகத்துடன் இருக்கிறார். அவர் அதைத் திறந்து அதன் பிரகாசமான இளஞ்சிவப்பு நிற உள் பகுதிகளை காண்பிக்கிறார். 12 வயதாகும் ராஜ்குமார் ஆவலுடன் அதைத் தின்ற போது அவரது உதடுகளும் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறியது – அதனால்தான் அவரும் மற்ற குழந்தைகளும் தப்பாட்டிகள்ளிக்கு 'லிப்ஸ்டிக் பழம்' என்று பெயரிட்டுள்ளனர். மற்ற குழந்தைகள் அவரைப் பின்பற்றி பழத்தைத் தின்ற போது அவர்கள் வாய் முழுவதுமே சிவப்பாக மாறியது. இதைப் போல காடுகளுக்குச் செல்வது அவர்களுக்கு மிகவும் உற்சாகமான ஒன்றாக இருக்கிறது.

டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஒரு காலை வேளையில் 35 வயதாகும் மணிகண்டன் மற்றும் 50 வயதாகும் கிருஷ்ணன் ஆகியோர் அவர்களை காட்டுக்குள் வழி நடத்திச் செல்கின்றனர். அவர்கள் செருக்கானூர் கிராமத்திற்கு அருகிலுள்ள புதர் காடுகளுக்குள் தூரமாக நடந்து செல்கின்றனர், செல்கையிலேயே செடிகொடிகளை விலக்கிக் கொண்டு செல்கின்றனர். ஒரு கடப்பாரையை கொண்டு கொடி கிழங்குகளை அகழ்கின்றனர். ஒன்றரை வயது சிறு குழந்தை முதல் 12 வயது வரை உள்ள ஐந்து குழந்தைகளை அவர்கள் வழி நடத்திச் செல்கின்றனர், அவர்கள் அனைவருமே இருளர்கள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் படரக்கூடிய காட்டு வள்ளிக்கிழங்கை தேடிக் கொண்டிருந்தனர். "நீங்கள் அதனை குறிப்பிட்ட மாதங்களில் (டிசம்பர் -  ஜனவரியில்) மட்டுமே உண்ண முடியும். அது மிருதுவாக இருக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும்", என்று மணிகண்டன் விளக்குகிறார். முதலில் நீங்கள் மற்ற புதர்களில் இருந்து அதன் தண்டினை அடையாளம் காண வேண்டும். தண்டின் பருமன் நமக்கு எத்தகைய கிழங்கு கிடைக்கப்போகிறது என்பதையும் மற்றும் அக்கிழங்கை முழுவதுமாக அகழ்வதற்கு எவ்வளவு ஆழமாக குழி தோண்ட வேண்டும் என்பதையும் கூறிவிடும்", என்று கூறுகிறார். இந்தக் கிழங்கை தேடிக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்கள் லிப்ஸ்டிக் பழத்தை (உள்ளூரில் இதனை நாதெல்லிப்பழம் என்று அழைக்கின்றனர்) கண்டிருக்கிறார்கள்.

பின்னர் சில நிமிடங்களுக்கு சுற்றி விட்டு அவர்கள் சரியான காட்டு வள்ளிக்கிழங்கு கொடியை கண்டுபிடித்து மென்மையான அதன் கிழங்கை அகழ்ந்து எடுத்தனர். அவர்களை கூர்ந்து கவனித்து பின்தொடர்ந்து வந்த குழந்தைகள் ஆர்வத்துடன் அதன் தோலை உரித்து அதனை சாப்பிடத் துவங்கினர்.

காலை 9 மணிக்கு கிளம்பிய குழு மதியத்திற்கு உள்ளாகவே பங்களாமேட்டிற்கு திரும்பியது. தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செருக்கானூர் கிராமத்தின் இருளர் குடியிருப்பு பகுதி தான் பங்களாமேடு.

Top row: Manigandan and Krishnan find a kuttikizhangu climber in the forest; Krishnan's teeth turn red from the 'lipstick fruit'. Bottom: For the Irula children of Bangalamedu, the red-staining fruit is a delight
PHOTO • Smitha Tumuluru

மேல் வரிசை: மணிகண்டனும் கிருஷ்ணனும் காட்டில் ஒரு குட்டிக் கிழங்கு கொடியினை கண்டுபிடித்தனர்; 'லிப்ஸ்டிக் பழத்தை' உண்ட பின்னர் கிருஷ்ணாவின் பற்கள் சிவப்பாக மாறியது. கீழே: பங்களாமேடு இருளர் குழந்தைகள் உதட்டில் சிவப்பு சாயம் தரும் பழத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

மணிகண்டனும் அவரது நண்பரும் காட்டில் இருந்து சேகரித்த காய்கறிகளையும் பழங்களையும் எனக்கு காட்டுகின்றனர். காட்டு வள்ளிக்கிழங்கு தவிர அவர்கள் நொறுக்குத் தீனியாக தின்னப்படும் குட்டிக் கிழங்கு; தித்திப்பான கொங்கி பழம்; குளத்தில் இருந்து பறிக்கப்பட்ட தாமரைக்கிழங்கு அது காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது; மாட்டு களிமுலாம், அதை உண்டு தண்ணீரைக் குடித்தால் இனிப்புச் சுவையை உணர முடியும்; கோழி களிமுலாம், இதை உண்டால் வயிறு நிறைவாக இருக்கும். இவற்றில் சில கிழங்குகள் மற்றும் காய்கறிகள் பிரத்யேகமாக இருளர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

காலை 7 மணிக்கு எந்த உணவையும் எடுக்காமல் காட்டுக்குச் சென்றுவிட்டு இரவு மாலை 5 அல்லது 6 மணிக்கு திரும்புபவர்களுக்கு கோழி களிமுலாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "இதை பச்சையாகவே உண்ணலாம் நன்றாக வயிறு நிறையும். பல மணி நேரங்களுக்கு பிறகும் கூட உங்களுக்கு பசிக்காது", என்று மணிகண்டன் கூறுகிறார்.

இந்த உண்ணக்கூடிய வேர்கள், பழங்கள், கிழங்குகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை தேடி எடுப்பதற்காக பலர் தவறாமல் காட்டுக்கு பயணம் செய்கின்றனர், இவை நீண்டகாலமாக இச்சமூகத்தின் பாரம்பரிய உணவு மற்றும் மருந்தின் மூலாதாரமாக இருந்து வருகிறது. மூலிகைகள் வேர்கள், பூக்கள் மற்றும் மரப் பட்டைகள் ஆகியவை பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயனுள்ளதாக இருக்கும் என்று மணிகண்டன் விளக்குகிறார். உதாரணமாக, அல்லி தாமரை, அது ஒரு நீர் அல்லி, தாமரை கிழங்கு என்கிற தாமரை வேரை வேக வைத்து உண்ணும் பொழுது வயிற்றுப்புண் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை அது குணப்படுத்தும் மேலும் சின்ன இலை என்ற இலை பூச்சிக் கடியால் ஏற்பட்ட தடுப்புகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

Left: A kaattu vellikizhangu tuber dug out from the forest. Right: The thamarai kizhangu, or lotus roots, help treat stomach ulcers
PHOTO • Smitha Tumuluru
Left: A kaattu vellikizhangu tuber dug out from the forest. Right: The thamarai kizhangu, or lotus roots, help treat stomach ulcers
PHOTO • Smitha Tumuluru

இடது: காட்டிலிருந்து அகழப்பட்ட காட்டு வள்ளிக்கிழங்கு வலது: தாமரை வேர் அல்லது தாமரைக்கிழங்கு வயிற்றுப் புண்ணுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது

பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தால் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி இனக் குழுவாக (PVTG) இருளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர், இது நாட்டில் உள்ள 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவில் ஒன்றாகும் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆறு PVTG களில் ஒன்றாகும். நீலகிரி மலைகள் மற்றும் சமவெளிகளில் உள்ள குடியேற்றங்கள் உட்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் அவர்கள் வாழ்கின்றனர், பெரும்பாலும் கிராமங்களில் பழங்குடியினர் அல்லாத பகுதிகளில் இருந்து தனித்தே வசிக்கின்றனர்.

2007 ஆம் ஆண்டில் சுமார் 15 இருளர் குடும்பங்கள் செருக்கானூர் கிராமத்தில் இருந்து பங்களாமேடு குக்கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர் (காலப்போக்கில் 35 குடும்பங்கள் இங்கு வந்துவிட்டன) மற்ற கிராமங்களுடன் ஏற்பட்ட தகராறிற்கு பின்னர் இங்கு வந்து தங்கியிருக்கின்றனர் என்று கூறுகிறார் மணிகண்டன், இவர் தான் இந்த குடியிருப்பில் இருக்கும் பள்ளிக்கு பின்னான கல்வி மையத்தை நிர்வகித்து வருகிறார், இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் சிறிய மண் குடிசைகளாகத் தான் இருக்கின்றன. ஆனால் 2015 மற்றும் 2016 ஆண்டில் பெய்த கனமழையின் போது பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் இங்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்ட 12 கல் வீடுகளும் இக்கிராமத்தில் இப்போது இருக்கின்றன.

பங்களாமேட்டில் உள்ள யாருமே 10 ஆம் வகுப்புக்கு பிறகு பள்ளி கல்வியை தொடரவில்லை. கல்வி மையத்தில் இருக்கும் மற்றொரு ஆசிரியரான சுமதி ராஜூவும், மணிகண்டனை போலவே செருக்கானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கிருஷ்ணா பள்ளிக்கூடத்திற்கே சென்றதில்லை. இன்னும் பலர் எட்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு இடை நின்றுவிட்டனர் ஏனெனில் அரசு நடத்தும் உயர்நிலைப்பள்ளி ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேறொரு கிராமத்தில் உள்ளது. ஒரு புதிய பள்ளிக்கு செல்வது என்பது பல மாணவர்களுக்கு கடினமான செயல், மேலும் குழந்தைகள் தனியாக இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று ஆட்டோ அல்லது பஸ் பிடித்து செல்ல வேண்டும் அதற்கான பணத்தையும் குடும்பத்தினரால் கொடுக்க முடியாது.

சிறிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு மற்றும் உண்ணக்கூடிய செடிகளை தேடுவதற்கு கூர்மையான உற்றுநோக்கும் திறனும் விலங்குகள் மற்றும் பருவங்களை பற்றிய புரிதலும் வேண்டும்

காணொளியில் காண்க: 'எங்களது மக்கள் இதனையே உண்டு வாழ்ந்து வந்தனர்'

குறைந்த கல்வித் தகுதியுடைய இருளர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. பொதுவாக அவர்கள் செருக்கானூரில் அல்லது பக்கத்து பஞ்சாயத்துகளில்  நடைபெறும் அல்லது பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருத்தணியில் நடைபெறும் சிறிய கட்டட வேலைகளில் தினக்கூலியாக வேலை செய்கின்றனர். அவர்கள் நெல் மற்றும் கரும்பு, மூங்கில் ஆகியவற்றை அறுவடை செய்கின்றனர், நீர் பழ தோட்டங்களிலும் வேலை செய்கின்றனர். சிலர் கட்டுமான பணிகளுக்கு தேவையான சவுக்கு மரங்களை வெட்டுகின்றனர். இன்னும் பலர் திருத்தணி தாலுகாவை சுற்றியுள்ள செங்கல் சூளையில் அல்லது கரிமூட்டங்களில் வேலை செய்கின்றனர். இந்த வேலைகள் அனைத்துமே பருவம் சார்ந்தது மற்றும் கணிக்க முடியாதது மேலும் அவர்கள் இத்தகைய வேலையின் மூலம் மாதத்தில் 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். சில நேரங்களில் இச்சமூகத்தில் உள்ள பெண்கள் அரசால் நடத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்து நாள் ஒன்றுக்கு 170 ரூபாய் சம்பாதிக்கின்றனர், இங்கு மரம் நடுவது, கால்வாய் வெட்டுவது மற்றும் புதர்களை அகற்றுவது ஆகியவை வேலையாக தரப்படும்.

இச்சமூகத்தில் உள்ள ஒரு சில குடும்பங்கள் பாலுக்காக ஆடுகளை வளர்க்க துவங்கியுள்ளன அவை அருகிலுள்ள சந்தைகளில் விற்கப்படுகின்றது. சிலர் அருகில் உள்ள ஏரிகளில் மீன் பிடித்து வருகின்றனர். சில நேரங்களில் பண்ணையார்கள் தங்களது பயிரை நாசம் செய்யும் எலிகளை வேட்டையாடுவதற்கு இருளர்கள் பணியமர்த்துகின்றனர். இருளர்கள் புகை போட்டு எலிவளைகளை விட்டு எலிகளை விரட்டி வலைகளை கொண்டு பிடிக்கின்றனர். அதன் கறியை சாம்பாரில் பயன்படுத்துகின்றனர் மேலும் எலி வளையில் இருந்து கைப்பற்றப்பட்ட நெல்லையும் அவர்களே வைத்துக் கொள்கின்றனர்.

இந்த குறைந்த வருமானத்தை கணக்கில் கொள்ளும்போது காய்கறிகள் மற்றும் மாமிசத்திற்கு மூலமாக காடுகளே இருளர்களுக்கு இருக்கின்றது. "நாங்கள் வேலையின்றி இருக்கும் போது உணவு தேடி காடுகளுக்கு செல்வோம். சிறு விலங்குகளையும் வேட்டையாடுவோம்", என்று கூறுகிறார் மணிகண்டன். "நாங்கள் முயல்கள், நத்தைகள், அணில்கள் மற்றும் சில பறவை இனங்களை தேடுவோம்". சிலர் முயல் கறியை 250 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் என்று அவர் கூறுகிறார். "முயலைப் பிடிப்பதற்கு ஒருவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். ஒரு முயலை பிடிக்க ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கூட ஆகலாம். சில நேரத்தில் ஒரே நாளில் 2 அல்லது 3 முயல்களைக் கூட நாங்கள் பிடிப்போம். முயல்கள் திறந்தவெளியில் உலவாது. நீளமான கம்புகளைக் கொண்டு புதர்களை சுற்றி அடித்து முயல்களை பொறியினை நோக்கி விரட்ட வேண்டும்.ஆனால் நிலவொளியில் கூட முயல்களால் நன்றாக பார்க்க முடியும். அதனால் பொறியில் உள்ள மெல்லிய உலோக கம்பியை கவனித்து அதற்குள் செல்வதை அது தவிர்த்துவிடும். எனவே நாங்கள் அமாவாசை நாளில் அவற்றைப் பிடிக்கப் புறப்படுவோம்", என்று கூறுகிறார்.

Left: Krishnan and companions with a rat they caught from its tunnel in a paddy field; at times farm owners engage the Irulas to rid their fields of rats. Centre: M. Radha with a dead rabbit she and her husband Maari caught after a full day's effort. Right: The learning centre for children run by G. Manigandan
PHOTO • Smitha Tumuluru
Left: Krishnan and companions with a rat they caught from its tunnel in a paddy field; at times farm owners engage the Irulas to rid their fields of rats. Centre: M. Radha with a dead rabbit she and her husband Maari caught after a full day's effort. Right: The learning centre for children run by G. Manigandan
PHOTO • Smitha Tumuluru
Left: Krishnan and companions with a rat they caught from its tunnel in a paddy field; at times farm owners engage the Irulas to rid their fields of rats. Centre: M. Radha with a dead rabbit she and her husband Maari caught after a full day's effort. Right: The learning centre for children run by G. Manigandan
PHOTO • Smitha Tumuluru

இடது: கிருஷ்ணனும் அவரது தோழர்களும் நெல் வயலில் பிடிபட்ட எலியுடன்; சில நேரங்களில் பண்ணையார்கள் தங்களது வயல்களிலிருந்து எலியை விரட்டுவதற்கு இருளர்களை பணி அமர்த்துகின்றனர். நடுவில்: ஒரு நாள் முழுவதும் ராதாவும் அவரது கணவரும் முயன்று பிடித்த இறந்த முயலுடன் ராதா. வலது: மணிகண்டனால் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வரும் கல்வி மையம்

சிறிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு மற்றும் உண்ணக்கூடிய செடிகளை தேடுவதற்கு கூர்மையான உற்றுநோக்கும் திறனும் விலங்குகள் மற்றும் உள்ளூர் பருவங்களைப் பற்றிய ஆழமான புரிதலும் வேண்டும். இந்த அறிவு பல தலைமுறைகளாக இருளர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது -  அந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் அவர்களுடன் வந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்ததைப் போல. "நாங்கள் வார இறுதிக்கும் பள்ளி விடுமுறைக்காகவும் காத்திருப்போம். அப்போது தான் எங்களது பெற்றோர்கள் அவர்களுடன் காடுகளுக்குச் செல்ல எங்களை அனுமதிப்பார்கள்", என்று செருக்கானூரில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 13 வயதாகும் அனுஷா கூறுகிறார்.

ஆனால் அடர்த்தியான புதர்கள் ஒரு காலத்தில் விறகு, உணவு, மருந்து மற்றும் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருளர்களுக்கு இருந்து வந்தது - கடந்த பல தசாப்தங்களாக அது சுருங்கி வருகிறது. சில இடங்களில் பண்ணைகள் அல்லது மாம்பழத் தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டுள்ளது, இன்னும் சில பகுதிகளில் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது, வேறு சில இடங்களில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் அல்லாதவர்கள் நில உரிமை கோரி வேலியடைத்து அந்த பகுதியில் இருளர்கள் நுழைவதற்கு தடை செய்துள்ளனர்.

காடுகள் அழிந்து வருவது மற்றும் நிச்சயமற்ற வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் கல்வி மட்டுமே அவர்களுக்கு சிறந்த நாட்களை கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகின்றனர். உயர்நிலைப் பள்ளிக்கு செல்வதில் சிரமங்கள் இருந்தாலும் பங்களாமேட்டில் உள்ள இருளர் சமூகத்தினர் பலர் மேலும் பள்ளிக்கு செல்ல முயற்சிக்கின்றனர். மணிகண்டனுடைய கற்றல் மையத்திற்கு அவரது 36 வயதான சகோதரி கண்ணியம்மா தனது பேரக் குழந்தையுடன் வருகை தந்திருக்கிறார், "எங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் போல சம்பாதிப்பதற்கும், வாழ்வதற்கும் அவர்கள் சிரமப்படக் கூடாது ", என்று கூறினார்.

தமிழில்: சோனியா போஸ்

Smitha Tumuluru

ਬੰਗਲੁਰੂ ਦੀ ਰਹਿਣ ਵਾਲ਼ੀ ਸਮਿਤਾ ਤੁਮੂਲੁਰੂ ਡਾਕਿਊਮੈਂਟਰੀ ਫ਼ੋਟੋਗ੍ਰਾਫ਼ਰ ਹਨ। ਤਮਿਲਨਾਡੂ ਵਿਕਾਸ ਪ੍ਰੋਜੈਕਟਾਂ ਨੂੰ ਲੈ ਕੇ ਉਨ੍ਹਾਂ ਦਾ ਪਹਿਲਾਂ ਵਾਲ਼ਾ ਕੰਮ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਪੇਂਡੂ ਜੀਵਨ ਦੀ ਰਿਪੋਰਟਿੰਗ ਅਤੇ ਦਸਤਾਵੇਜ਼ਾਂ ਬਾਰੇ ਸੂਚਿਤ ਕਰਦਾ ਹੈ।

Other stories by Smitha Tumuluru
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose