“100 நாட்கள் இல்லை, இதுவரை வெறும் 50 நாட்களே இந்த ஆண்டு. அவ்வளவுதான்“ என்று ஆர். வனஜா கூறுகிறார். பங்களாமேடு குடியிருப்பில் உள்ள வெள்ளிக்காத்தான் மரத்தடியின் நிழலில் அமர்ந்து 18 பெண்களும், 2-3 ஆண்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நூறு நாள் வேலை குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தைதான் நூறு நாள் வேலை என்று கூறுகிறார்கள். 2019ந் ஒரு டிசம்பர் காலையில் அவர்களது கூலி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். வனஜா 20 வயதானவர். அந்த காலனியில் வசிக்கும் 35 இருளர் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான பெரியவர்கள் அவரைப் போல தினக்கூலிகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டத்தில் உள்ள செருக்கானூர் பஞ்சாயத்தில் உள்ள இந்த குடியிருப்பில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஊரக வேலை உறுதி திட்டம் இல்லாத வேலைகளை தேடிக்கொள்கின்றனர். விளை நிலங்களுக்கு வாய்க்கால் வெட்டுவது, மாம்பழத்தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, கட்டுமான பணிகளில் கூலி வேலை செய்வது, சாரம் கட்டுவதற்கு, விறகுக்கு. காகித கூழ் தயாரிப்பதற்கு மற்றும் பல்வேறு வேலைகளுக்குப் பயன்படக்கூடிய சவுக்கு மரங்கள் வெட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.300ஐ கூலியாகப் பெறுகின்றனர்.
இந்த வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் கணிக்க முடியாதவையாகும். பருவமழைக்காலங்களில், வேலை கிடைக்காத காலங்களில் இருளர்களை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களாக தமிழகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வருமானமின்றியே குடும்பம் நடத்துகின்றனர். அருகில் உள்ள காடுகளில் சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்கின்றனர். பழங்கள் மற்றும் கிழங்குகளை எடுத்து தங்கள் உணவுகளில் கூடுதலாக சேர்த்துக்கொள்கின்றனர். (பார்க்க பங்களாமேட்டின் புதையல்கள் மற்றும் பங்களாமேடுவில் எலிகளுடன் வேறொரு வாழ்க்கை )
பெண்களுக்கு, அந்த வேலைகளும் அரிதாகவே கிடைக்கின்றன. சில நேரங்களில் அவர்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து அருகில் உள்ள செங்கல் சூளையில் ஜனவரி – பிப்ரவரி முதல் மே – ஜீன் வரை பணி செய்கின்றனர். ஆனால் வேலை தொடர்ந்து அல்லாமல் விட்டுவிட்டுதான் கிடைக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ரூ.6 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கின்றனர்.














