சில மாதங்களுக்கு முன் ஒரு மாலை வேளையில், வீட்டுக்கு வெளியே மண் தரையில் அமர்ந்து எலிக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார் சக்திவேல். எலிக்குட்டியின் வயிற்றில் லேசாக அழுத்தி ஓட விடுவார். அது ஓடும்போது வாலை பிடித்து பின்னால் இழுப்பார். ஒரு வயதே ஆகும் சிறு குழந்தை சக்திவேலின் ஒரே விளையாட்டு பொருள் அந்த எலிக்குட்டிதான்.
குழந்தையும் அதன் தாயான 19 வயது வனஜாவும் தந்தையான 22 வயது ஆர்.ஜான்சனும் பங்களாமேடு கிராமத்தில் ஒரு சிறு குடிசை வீட்டில் வாழ்கின்றனர். “பொம்மைகள் நாங்கள் வாங்குவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கென (எப்போதாவது) ஆரவார பொம்மை வாங்குவோம். கிராமத்தில் இருக்கும் யாரிடமும் அதிக பொம்மைகள் இருக்காது,” என்கிறார் வனஜா. கிராமப்புற வேலைத்திட்ட வேலைகளை வனஜா பார்க்கிறார். ஜான்சன் கட்டுமான வேலைகளையும் அவ்வப்போது செங்கல் சூளை வேலைகளையும் பார்க்கிறார். திருத்தணி ஒன்றியத்தின் செருக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் மரங்கள் வெட்டும் வேலைகளும் செய்கிறார்.
“எங்கள் குழந்தைகள் வளர்ப்பு பிராணிகளோடு விளையாடும். முயல்கள், எலிகள், அணில்கள் போன்றவற்றை வளர்ப்பு பிராணிகளாக நாங்கள் வளர்க்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு எலிகள்தான் பிடிக்கிறது. அவற்றை கண்டுபிடிப்பதும் சுலபம். எனக்கு முயல்களை பிடிக்கும். ரொம்ப மென்மையானவை. ஆனால் முயல்குட்டிகளை அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது,” என்கிறார் 28 வயதாகும் எஸ்.சுமதி. கிராமத்தில் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி கற்று கொடுக்கிறார். செங்கல்சூளைகளிலும் நூறு நாள் வேலைத்திட்டத்திலும் கூட வேலை செய்கிறார்.
35 இருளர் குடும்பங்கள் வசிக்கும் திருவள்ளூரின் இக்கிராமத்தில் எலிக்குட்டிகள்தான் குழந்தைகளின் விருப்பத்துக்குரிய வளர்ப்புப் பிராணிகள். ( பங்களாமேட்டின் புதையல்கள் என்ற கட்டுரையை பார்க்கவும்). சிறு விலங்குகள் கடிப்பதில்லை. எந்தவொரு வளர்ப்புப் பிராணியையும் போல குடும்பங்களுடன் தங்கி விடும். (ஒருமுறை ஒரு சந்திப்புக்கு கூடையில் வளர்ப்பு எலியை கொண்டு வந்த பெண்ணை சந்தித்தேன்).தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட பழங்குடி இனமென வரையறுக்கப்பட்டிருக்கும் ஆறு இனங்களில் ஒன்று இருளர் இனம். அவர்களுக்கு எலிக்கறி மிகவும் பிடிக்கும். நெல்வயல்களில் கிடைக்கும் சுண்டெலிகளை சமைத்து உண்பார்கள். வாரத்துக்கு 2-3 தடவை உணவு வேட்டைக்கு செல்வார்கள். வேலை ஏதும் இல்லையெனில் தினமும் கூட செல்வார்கள். முயல்கள், எலிகள், அணில்கள், நத்தைகள், நண்டுகள் மற்றும் பலவித பறவைகள் போன்றவை அவர்களுக்கு உணவாகின்றன. பங்களாமேடுக்கு அருகே இருக்கும் நிலங்கள் மற்றும் மூலிகைக் காடுகளில் இவற்றை பிடிக்கிறார்கள்.
“கிட்டத்தட்ட எல்லா நாட்களும் நாங்கள் கறி உண்கிறோம்,” என்கிறார் 35 வயதான ஜி.மணிகண்டன். வனஜாவின் மாமாவான அவர் கிராமத்து மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பின் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். சமயங்களில் இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி செல்கிறார். அருகே இருக்கும் கட்டுமான தளங்களில் மின்னிணைப்பு வேலைகளும் செய்கிறார். மணிகண்டனும் கிராமத்தில் இருக்கும் மற்றோரும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருப்பதாக நம்புகிறார்கள். “பூனைக்கறி இளைப்பு நோய்க்கும் அணில் கறி குரலுக்கும் நண்டு சளிக்கும் நல்லது. அதனால்தான் எங்கள் மக்கள் அத்தனை எளிதாக நோய்வாய்ப்படுவதில்லை.” என்கிறார் அவர்.
(இருளர்கள் பாம்பு பிடிப்பவர்கள் என்கிற பார்வை முன் வைக்கப்பட்டாலும் பங்களாமேட்டில் இருக்கும் குடும்பங்கள் பாம்பை பிடிப்பதில்லை என்கிறார்கள். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னால் அப்பாவின் காலத்தில் சிலர் விற்பதற்காக பாம்புகளை பிடித்ததுண்டு என நினைவுகூருகிறார் மணிகண்டன். அந்த பழக்கம் நாளடைவில் மறைந்துவிட்டது. தற்போதைய சூழலில் கிராமத்தில் இருப்பவர்கள் பிற எவரையும் போலவே பாம்பு என்றால் எச்சரிக்கையுடனே இருக்கிறார்கள்.)
பக்கத்து கிராமங்களில் உள்ள நிலவுடைமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருக்கும் சிறு விலங்குகளை பிடிக்க கூப்பிடுகையில்தான் பங்களாமேடு மக்களுக்கு சாப்பிடுவதற்கான எலிகள் கிடைக்கின்றன. நிலத்தில் விளையும் நெல்லையும், கேழ்வரகையும் வேர்க்கடலையையும் எலிகள் எடுத்து தங்களின் வளைகளில் சேமித்துக் கொள்ளும்.
“சரியான இடத்தில் தோண்டி பார்த்தால் கிட்டத்தட்ட 6-7 படி (8லிருந்து 10 கிலோ வரை) நெல் அவற்றின் வளைகளிலிருந்து எடுக்கலாம்,” என்கிறார் மணிகண்டன். “ஒரு மூன்று கிலோ வரை அரிசியை அதிலிருந்து எடுத்துவிடுவோம். நிலவுடமையாளர்கள் அந்த நெல்லை நாங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிப்பார்கள். எலிக்கறி வைத்து குழம்பு செய்வோம்.”மரம் வெட்டவும் கால்வாய்கள் தோண்டவும் நிலம் உழவும் நிலவுடைமையாளர்கள் இருளர்களை அழைப்பதுண்டு. நாளுக்கு 350 ரூபாய் கிடைக்கும். எலிப் பிடிக்கும் வேலைக்கு 50லிருந்து 100 ரூபாய் வரை கிடைக்கும். “இதற்கு என நிலையான தொகை கிடையாது,” என்கிறார் மணிகண்டன். “ஒவ்வொரு நபரையும் சார்ந்த விஷயம் அது. எவ்வளவு கொடுக்க வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அதை கொடுப்பார். சிலர் எதையும் கொடுக்காமல், ‘அரசியும் கறியும் கிடைத்துவிட்டதே, நான் உனக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?’ என்றும் கேட்பார்கள்.”
”சில வருடங்களுக்கு முன் வரை, எலிகளை பிடிக்கவென்றே எங்களை கூப்பிடுவார்கள்,” என்கிறார் சுமதியின் கணவரான கே.ஸ்ரீராமுலு. 36 வயதாகும் அவர் நெல்வயல்களில் வேலை பார்க்கும்போது எலிகளையும் வேட்டையாடுவார். “இப்போதெல்லாம் நாங்கள் நில வேலைக்கு சென்றாலோ வாய்க்கால் தோண்ட சென்றாலோ, அவர்கள் எலி வளைகளையும் கவனிக்கச் சொல்லி விடுகிறார்கள். உரிமையாளர் கேட்கவில்லை என்றாலும் வளைகளை நாங்கள் பார்த்தால் எலிகளை பிடித்துவிடுவோம்.”
சமூகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த எலி பிடிக்கும் வேலைகள் பிடிப்பதில்லை. “யாராவது அவர்களை பார்த்து ‘ஏன் இன்னும் பழைய மாதிரியே எலி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என கேட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு அசிங்கமாகி விடுகிறது.”
வெளியே இருப்போருக்கு எலி உணவு என்பது ஏற்க முடியாத விஷயமாக இருக்கலாம். பலருக்கு அருவருப்பை கூட தரலாம். இருளர்களால் உண்ணப்படும் எலிகள் நாற்றமடிக்கும் சுண்டெலிகள். அவை வலிமையானவை. வயல்களை சேர்ந்தவை. “அவை ஆரோக்கியமான எலிகள்,” என்கிறார் சுமதி. “அவை நெல்லை மட்டுமே சாப்பிடும். சுத்தமானவை. இல்லையென்றால் நாங்கள் சாப்பிடமாட்டோம்.”
நிலங்களில் வளைகள் தோண்டுவது இல்லாமல், ஒரு வாரத்தில் பலமுறை எலிகளையும் நத்தைகளையும் தேடி இருளர்கள் செல்வதுண்டு. பிற்பகலில் அன்றாட வேலை முடித்து திரும்பும்போது வயல்களின் பக்கம் நின்று சிறு விலங்குகள் கிடைக்கிறதா என பார்ப்பார்கள். நிலவேலைக்கு வழக்கமாக எடுத்துச் செல்லும் கடப்பாரை அவர்களுக்கு உதவும். “பல காய்கறிகளை நாங்கள் உண்பதில்லை,” என்கிறார் மணிகண்டன். “எங்களுக்கு கறி என்பது உணவில் இருந்தே ஆக வேண்டும். அதனால்தான் கிட்டத்தட்ட எல்லா நாட்களும் நாங்கள் வேட்டையாடுகிறோம். அதிர்ஷ்டம் இருந்தால், 10 எலிகள் கூட கிடைக்கும். சில நேரம் வெறும் நான்கோடு நின்றுவிடும். அதே நாளில் அவற்றை சமைத்துவிடுவோம். அடுத்த நாளுக்கென சேமிக்க மாட்டோம்.”
எலி பிடிப்பவர்கள் வழக்கமாக ஜோடியாக வேலை பார்ப்பவர்கள். சில நேரங்களில் தனியாகவும் எலி வேட்டைக்கு செல்வார்கள். இன்னும் சில நேரம் மூன்று பேர் அணிகளாக தேடுவார்கள். ஒருமுறை அத்தகைய வேலைக்கு மணிகண்டனும் அவரின் உறவினர் கே.கிருஷ்ணனும் சவுக்குத்தோப்புக்கு அருகே இருந்த நெல் வயலுக்கு சென்றனர். 45 வயதான கிருஷ்ணன் நிலத்தின் ஓரத்தில் இருந்த வளைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். “இந்த துளைகளை பார்த்தாயா? இவைதான் எலி வளைகள். இவற்றை பார்த்து எப்படி எலிகளை பிடிப்பதென நாங்கள் திட்டமிடுவோம்.” ஒருநாள் விட்டு ஒரு நாள் வேட்டைக்கு செல்லும் கிருஷ்ணன், “என்ன கிடைக்கிறதோ அதை வீட்டுக்கு கொண்டு வருவோம். எலிகள்தான் பிடிப்பதற்கு சுலபம். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை எலி சமைத்துவிடுவோம்” என்கிறார்.
”எலி வளைகள் மிகவும் சிக்கலானவை. நகர சாலைகள் வெவ்வேறு திசைகளுக்கு செல்வதை போல் இருக்கும். மேலும் கீழுமாக கூட இருக்கும்,” என்கிறார் மணிகண்டன். “அவை புத்திசாலித்தனம் நிறைந்தவை. அவற்றின் வளைகளை மண் கொண்டு மூடிக் கொள்ளும். சுலபமாக அடையாளம் காண முடியாது. உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டால், வளை வாசலை கல் கொண்டு அடைத்துவிட்டு மறுபக்கத்திலிருந்து நாங்கள் தோண்ட ஆரம்பிப்போம். எலி தப்பிப்பதற்கென வழியே இருக்காது. நாங்களும் பிடித்து விடுவோம். நிலம் கடினமாக இருந்து தோண்ட முடியவில்லை என்றால், நாங்கள் மாட்டுச்சாணத்தை எரித்து வளைகளுக்குள் புகை போடுவோம். எலிகள் மூச்சுத்திணறி இறந்துவிடும்.”
மணிகண்டன், கிருஷ்ணன் மற்றும் சிலர் எலி பிடிக்க வலைகளை கூட பயன்படுத்துகின்றனர். “வளைகளை கண்டுபிடிக்க முடியவில்லையெனில், மொத்த பகுதியையும் சுற்றி நாங்கள் வலை போட்டுவிடுவோம்,” என்கிறார் மணிகண்டன். வளைகள் இருக்கும் பகுதியில் புகை போட்டுவிடுவோம். எலி தப்பிக்க முயற்சிக்கும்போது நேராக எங்களின் வலைகளுக்கு வந்து சிக்கிக் கொள்ளும்.” இதற்கென்றே பங்களாமேட்டில் இருக்கும் சில குடும்பங்கள் சொந்தமாக வலை பின்னிக் கொள்கிறார்கள். பிறர் அருகே இருக்கும் சந்தைகளில் வாங்கிக் கொள்கிறார்கள்.
நெல்வயலில் கிருஷ்ணன் ஒரு வளையை தோண்டத் தொடங்கியபோது அந்த வழியே சென்ற 20 வயது ஜி.சுரேஷ்ஷும் வந்து இணைந்து கொண்டார். அவரும் அவரின் பெற்றோரும் மரக்கரி செய்து விற்று வாழ்க்கை ஓட்டுகிறார்கள். அவர் எலி இருப்பதை சொல்லி கிருஷ்ணனை எச்சரிக்கிறார். எலி குழம்பிப் போய் தப்பிக்க முயற்சித்த போது, வேகமாக செயல்பட்டு கைகளில் அதை பிடித்துக் கொண்டார் கிருஷ்ணன். உடனடியாக அதன் பற்களையும் கால்களையும் பிடுங்கிப் போட்டார். “இது ரொம்ப முக்கியம். இல்லையெனில் நம்மை கடித்து தப்பி விடும். அவை ரொம்ப வேகமானவை,” என்கிறார் அவர். எலிகள் மாட்டியபிறகு கிருஷ்ணனும் அவரின் அணியும் வளைகளில் இருக்கும் நெல்லை எடுக்க எச்சரிக்கையுடன் தோண்டினார்கள்.
சில நேரங்களில் வளைகளில் எலிக்குட்டிகள் மாட்டுவதுண்டு. பங்களாமேட்டின் இருளர் குடும்பங்கள் அவற்றை வளர்ப்புப் பிராணிகளாக எடுத்துக் கொள்கின்றனர். 15 வயதாகும் ஆர்.தனலஷ்மி மணிகண்டனின் பள்ளிக்கு பிறகான படிப்பு கற்க வருகிறார். ஏழாம் வகுப்பு படிக்கும் அவர் தன் பத்தாவது வயதில் வளர்த்த கீதா என்கிற வளர்ப்பு எலியை நினைவுகூருகிறார். ”என்னுடைய எலியை எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் அவர். “அது மிகவும் சிறியதாக இருக்கிறது. விளையாட சந்தோஷமாகவும் இருக்கிறது.”
எலி பிடிப்பது வழக்கமான வேலையாக இருந்தாலும் பங்களாமேட்டில் வசிக்கும் பலருக்கு வளைகளிலிருந்து நெல் எடுக்கும் வேலையில் விருப்பமில்லை. “எங்கள் மக்களுக்கு நியாயவிலைக் கடையில் கிடைக்கும் அரிசி பழகிவிட்டது,” என்கிறார் மணிகண்டன். “வளையில் கிடைக்கும் நெல்லை விட அதையே அவர்கள் விரும்புகிறார்கள். எலி பிடிக்கும் பலர் நெல்லை அப்படியே வளைக்குள் விட்டு வருவதையோ அல்லது அவற்றை கோழிகளுக்கு போடுவதையோ நான் பார்த்திருக்கிறேன்.”
எலி வளை நெல்லை காட்டிலும் நியாயவிலைக் கடை அரிசியை மக்கள் பயன்படுத்துவதை கிருஷ்ணனும் ஒப்புக் கொள்கிறார். “முன்னர் கிடைத்ததுபோல் அதிக நெல் தற்போது வளைகளில் கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். “மழை குறைவாக இருக்கிறது. அதனால் நெல் விளைச்சலும் குறைவாக இருக்கிறது. மேலும் நிலங்களின் மேலே கட்டடங்கள் கட்டுகிறார்கள். விவசாயம் கூட முன் போல் இப்போது நடப்பதில்லை.”
நியாயவிலைக் கடை அரிசி தினசரி உணவு சமைக்க பயன்படுகிறது என்கிறார். “எலி வளைகளில் கிடைக்கும் அரிசியை கொண்டு இனிப்பாக எதையேனும் செய்து கொள்கிறோம். அந்த அரிசியின் மணம் வித்தியாசமாக இருக்கிறது. சிலருக்கு பிடிக்காது. எங்களுக்கு பிடிக்கிறது…”எலி வளைகளில் கிடைக்கும் வேர்க்கடலைகளுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறது. “எலிகள் முதிர்ந்த வேர்க்கடலைகளைதான் ஒளித்து வைக்கும். அவை நல்ல இனிப்பாக இருக்கும். அதிலிருந்து எண்ணெய் கூட எடுக்கலாம். நெல் கிடைக்கிறதோ இல்லையோ, வேர்க்கடலை விதைக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்துக்கு நிச்சயமாக நாங்கள் எலி வேட்டையாட செல்வோம்,” என்கின்றனர் மணிகண்டனும் சுமதியும் கிருஷ்ணனும் ஒன்றாக.
ஒரு மழை நாளை நினைவுகூருகிறார் மணிகண்டன். வீட்டில் அப்போது உணவு இல்லை. தற்போது 60 வயதாகும் அவரது தாய் ஜி.எல்லம்மா அப்போது குழந்தைகளுக்கு எதாவது சாப்பிட கண்டுபிடித்துவிட வேண்டும் என தீர்மானித்திருந்தார். ஒரு பாத்திரம் நிறைய, வளைகளில் தோண்டி எடுத்த வேர்க்கடலைகளுடன் வீடு திரும்பியிருக்கிறார்.
ஆனால் சுமதி இப்போதும் வளைகளிலிருந்து நெல்லை சேகரிக்கிறார். “வளைகளில் கிடைக்கும் அரிசியில் பூமியின் வாசனை இருக்கிறது. அதற்கு இனிப்பும் ருசியும் இருக்கிறது. என் நண்பர்கள் அவற்றை வைத்து சமீபத்தில் கொழுக்கட்டை செய்தார்கள்.”
“வீட்டில் சமைக்க எதுவுமில்லை என்றாலும் எலிகளை சுலபமாக கண்டுபிடித்து விடுவோம். அவற்றை நெருப்பில் வாட்டி, கறியுடன் கொஞ்சம் கத்தரிக்காயும், தக்காளியும், வெங்காயமும் போட்டு குழம்பு செய்துவிடுவோம். அரிசியுடன் கலந்து சாப்பிடுவோம். ருசியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.”
தமிழில்: ராஜசங்கீதன்