அனைவரிலும் மூத்த மாணவருக்கு 13 வயது. மீதமுள்ளோர் 10 - 12 வயதிற்கு இடைப்பட்டோர். ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் குழு விவாதங்கள், பள்ளி விவாதங்களில் ஒருசில தவிர மீதமுள்ளவை சலிப்பை தருவனவாகவே இருக்கும். உதாரணமாக பள்ளிகளில் நடைபெறும் விவாதங்களுக்குச் சென்றால் அங்கு தெளிவாக ஆங்கிலம் பேசுவோர் 14 - 16 வயதிற்குள் இருப்பர். மேலும் ‘‘ காந்தியம் இன்னும் பொருத்தமானதா?'' போன்ற கேட்டுக்கேட்டு புளித்துப்போன கருத்துக்களையே சொல் அலங்காரங்களோடு மனப்பாடமாக கூறுவர். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கச்சென்றாலோ இன்னும் தர்மசங்கடமான நிலைமைதான். எப்போது முடிப்பார்களோ என்று காத்திருக்க வேண்டும்.

ஆனால் இங்கோ, நான் என் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டேன்! 10 - 13 வயது மாணவர்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்து விவாதிக்கின்றனர்?! இரு புறமும் மிகத்திறமையான அணிகள். ஒவ்வொரு பேச்சாளரும் தலைப்பு குறித்த ஆழ்ந்த அறிவும், கருத்துச் செறிவும், உறுதியான பேச்சும் கொண்டிருந்தனர் என்பதை உணர முடிந்தது. பேச்சின் உட்பொருள்... தரம்... உணர்ச்சிமையமாக வெளிப்படுத்திய முறை... - இதை கண்டு கேட்டாலே அக்கருத்துக்களை நம்பத்தூண்டும். நீங்களே இந்த காணொலி மூலம் கண்டு அவர்கள் பேச்சைக் கேளுங்கள். கருத்துப் பரிமாற்றங்கள் மிக கூரியதாக, பெரிய தர்க்கத்தை ஏற்படுத்துவதாக, ஆனால் எப்போதும் நாகரிகமானதாக இருந்தன.

தங்க அரிசி, ஊட்டச்சத்து பற்றாக்குறை, பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், புழுக்கள், இயற்கை வேளாண்மை, பி.டி ரக விதைகள், விபரீதமான மகரந்த சேர்க்கைகள், மாசுபடுத்தப்பட்ட விதைகள் என நீங்கள் எந்தப் பெயரை உச்சரித்தாலும், அவர்கள் அது பற்றி அக்குவேர், ஆணிவேராக விவாதிப்பார்கள். அதுவும் எப்படி புரிந்துகொண்டு பேசுகிறார்கள்!


வித்யாவன பள்ளி மாணவர்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்த தங்கள் விவாதத்தை துவங்குகின்றனர். இப்பள்ளியில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்


நடுவராக அமர்ந்திருந்த மாணவி உண்மையாகவே 'நடுநிலை' வகித்தார். அவர் ஒரு நிறுத்துகடிகாரத்துடன் அமர்ந்துகொண்டு, பேச்சின், ஒரு வாக்கியத்தின் இடையில்கூட குறுக்கிட்டு நேரம் முடிந்ததை சுட்டிக்காட்டினார். அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் அம்மாணவர்களைக் கொண்டு சில தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கக் கேட்கலாம் என்றுகூட நினைத்தோம்.


பேச்சாளர் தீவிரமாக வாதிட்டுக்கொண்டிருக்கும் போதும், நடுவர் தன் நிறுத்து கடிகாரத்தைப் பார்க்கிறார், அதைப் பயன்படுத்துகிறார்


அதில் பெரும்பாலான பேச்சாளர்கள் முதல் தலைமுறையினராக ஆங்கிலம் பேசுபவர்கள். அவர்களின் மொழிநடை மிக சரளமாக இருந்தது! (அந்த பேச்சுகளின் எழுத்துவடிவம் இங்கே …)

தமிழ்நாட்டில் உள்ள வித்யாவனம் எனும் அப்பள்ளியின் செயல்திட்டத் தலைப்பு 'அரிசி'!
அரிசி பற்றி இதுவரை நான் அறிந்திராத கருத்துச்செறிவை 8 - 13 வயதுடைய மாணவர் கூட்டத்திடமிருந்து அறிந்துகொண்டேன். Toyota என்பதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அது ஏதோ எந்திர கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவது என்றே நினைத்தேன். ஆனால் உண்மையில் அது வேளாண் கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவது! Toyota என்பதற்கு உண்மையான அர்த்தம் பசுமையான அல்லது அழகான வயல்வெளிகள் என்பதாம்! நிறுவனங்களின் முதலாளிகள் தான் d என்பதை t.. ஆக்கி இருப்பார்களோ? அவர்கள் ஒரு விவசாயத் தொடர்புள்ள பெயரையா வைப்பார்கள்?!


டொயோட்டா: டொயோட்டாவின் உண்மை அர்த்தம் என்னவென்று ஒரு மாணவர் சுவரொட்டி தயாரித்திருந்தார். இது அவர்களின் செயல்திட்ட கண்காட்சியின் ஒரு பகுதி


ஹோண்டா: மற்றுமொரு விளக்க அட்டை ஹோண்டாவின் அடிச்சுவடியை தேடுவதாக இருந்தது


அதேபோல் ‘ஹோண்டா' என்றால் ‘அசல் வயல்வெளி' அல்லது ‘அரிசி விளைவிக்கும் நிலம்' என்றும் இதுநாள் வரை எனக்குத் தெரியாது. உங்களால் ‘நகசோன்' என்றால் ‘மைய வேர்', ‘ஃபுகுடா' என்றால் 'செழிப்பான வயல்' என்று மிக உறுதியாக யாரையாவது நம்பவைக்க முடியுமா? ஆனால் அவர்கள் எனக்கு கற்பித்துவிட்டுத்தான் விடுவித்தார்கள். என்னால் இதைச் செய்ய முடியாது. ஆனால் அக்குழந்தைகள் இதைச் செய்தார்கள்!. தங்கள் செயல்திட்ட கண்காட்சிக்காக படங்கள், கருத்து அட்டைகள் போன்றவற்றையும் செய்து வைத்திருந்தனர்.


நகசோன்: இதன் பொருள் ‘‘மைய வேர்’’ என்று யாருக்குத் தெரியும்?


தாங்கள் பயிரிட்ட ஐந்து குட்டிக்குட்டி வயல்களுக்கு, குட்டி வழிகாட்டிகள் எங்களை அழைத்துச்சென்றனர். அந்நெல் வகைகள், அவற்றை பயிரிடும் முறைகள் பற்றி கூறினர். எந்த ஆசிரியர்களின் தூண்டுதலோ, துணையோ இன்றி விளக்கினர். அதில் சிலர் குறுவிவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்.



பல வகைகளாக அவர்கள் பயிரிட்டிருந்த குட்டி வயல்களுக்கு, இரு மாணவ வழிகாட்டிகள் எங்களை அழைத்துச் சென்றனர்


அங்கு செயல்திட்ட நாள் மிகச்சிறப்பு வாய்ந்தது. பெரும்பாலான ஏழை மற்றும் சில எழுத்தறிவில்லா பெற்றோர்களே பார்வையாளர்கள். பாடப்புத்தகங்களைப் பின்பற்றாத அப்பள்ளியில் தங்கள் குழந்தைகள் என்ன கற்கிறார்கள் என்று காணவருகிறார்கள். "வித்யாவனம்" என்றால் "கல்விச் சோலை!" இங்கும் அத்தகைய செறிவான கல்வி அளிக்கப்படுகிறது. இருளர் பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச்சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இப்பள்ளி கோயம்புத்தூரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில், தமிழக கேரள எல்லையோர மலைகிராமமான ஆனைகட்டியில் அமைந்துள்ளது. பேருந்து, மிதிவண்டி, பேருந்து செல்லமுடியாத இடத்திலிருந்து நடைபயணமாக... என மாணவர்கள் வருகிறார்கள். வித்யாவனத்தைப் பற்றி அறிந்து கொண்டு, படிப்பிற்காகவே சிலர் தங்கள் வீடுகளை பள்ளிக்கு அருகில் மாற்றிக்கொண்டும் உள்ளனர்.


நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் தங்கள் முறைக்காக காத்திருக்கின்றனர்


பிரேமா ரங்காச்சாரி அவர்களால் 9 வருடங்களுக்கு முன் இப்பள்ளி தொடங்கப்பட்டது. மழலையர் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை தற்போது செயல்படுகிறது. இருமொழிக் கல்வி வழங்கப்படுகிறது. இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘மாணவர்கள் 8 வயது வரை தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி வாயிலாக கற்கிறார்கள். 8 வயதிற்குப் பிறகு ஆங்கிலத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இப்பழங்குடியினப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளும் வசதிபடைத்த குழந்தைகள் போல ஆங்கிலம் பேசவேண்டும், அப்போது தான் எங்களுக்கிருக்கும் சில பின்னடைவுகள் மாறும், என்று நான் இங்கு ஒரு பள்ளியைத் துவங்கும் எண்ணத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோதே கூறியிருந்தனர். அதுமட்டுமல்ல அப்படிப்பட்ட வசதிபடைத்த பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. இங்கோ பழங்குடியினர்/ ஆதிதிராவிடர்களுக்கு இலவசக்கல்வி. பிறர்க்கு மாதம் ரூ.200. (அதுவும் பெற்றோர்களே நிர்ணயித்தது)" என்றார்.

பிரேமா ரங்காச்சாரி (73) இப்பள்ளியின் நிறுவனர், முதல்வர் மற்றும் இயக்குனர். பிள்ளைகள் இவரை ‘‘பாட்டி" என்றே அழைக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள இவரது தங்கும் இடத்தில் "பாட்டி வீடு" என்றே எளிமையாக பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது.

செயல்திட்ட தினத்திற்கு அவர் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். மாணவர்கள், பெற்றோர்களிடம் பேசிவிட்டு பிறகு கண்காட்சியை சுற்றிப்பாக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நல்லவேளையாக கண்காட்சியை கண்டுவிட்டு பிறகு பேசவேண்டும் என எனக்குத் தோன்றியதால் தப்பித்தேன்!. இல்லாவிட்டால் அவர்கள் ஏற்கனவே எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் பேசி முட்டாளாகி இருப்பேன்.

கண்காட்சி அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி, சுமார் 15 - 20 பிரிவுகளாக இருந்தது. அனைத்தையும் கண்டபிறகே என்னை விடுவித்தனர். ஒவ்வொரு மேசையும், ஒவ்வொரு சுவரும், அறிவை வெளிப்படுத்தும் (வெறும் தகவல்களால் அல்ல), ஆர்வம் மிக்க மாணவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஒரு நீண்ட மேசையில் பார்வையாளர்கள் சுவைப்பதற்காக உணவு மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது. அவர்களால் சமைக்கப்பட்ட வித்யாசமான அரிசி உணவுகள். ( ஆம்! அனைத்தும் குழந்தைகளால் சமைக்கப்பட்டவை!)


செயல்திட்ட சுவரொட்டிகளில் இது எனது தேர்வு! மிக இளைய குழந்தைகளால் தயாரிக்கப்பட்டது


ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். பெரும்பாலானோர் உள்ளூர் வாசிகள். சிலர் இருளர் பழங்குடியினத்தவர். ஓவியம், கலைகளை கற்பிக்க மேற்குவங்கத்தின் "சாந்தி நிகேதனில்" இருந்து இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் சில தன்னார்வ ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் ஓராண்டுவரை இங்கு தங்கி இருந்து கற்பிக்கின்றனர். இதுவே பல்வேறு கலாச்சாரங்களை இம்மாணவர்கள் கற்க வாய்ப்பளிக்கிறது. பார்வையாளர்களான, தங்கள் ஒருநாள் கூலியை விட்டுவரும் பெற்றோர்களுக்காக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பெரும்பாலும் கோயம்புத்தூரைத் தாண்டியிராத இம்மாணவர்கள், இந்தியாவின் பல்வேறு மாறுபட்ட கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் ஆடல், பாடல், நாடகங்களை நிகழ்த்துகிறார்கள்!


செயல்திட்ட தினத்தின் ஒரு நடனநிகழ்ச்சி


வேடிக்கை என்னவென்றால் இப்பள்ளிக்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை!? மத்திய அரசு பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ) பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன!. 9-வது கல்வியாண்டை எட்டியும், அரசு இப்பள்ளிக்கு தடையில்லாச் சான்று வழங்க மறுக்கிறது. காரணத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!

தமிழகத்தின் காடுகளுக்குள் இருந்து வெளிவர இவர்களுக்கு வழி பிறந்தாலும், அதிகாரமையங்கள் எனும் காடுகளில் இருந்து வெளிவர இதுவரை வழி பிறக்கவில்லை!


கூடவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாடல்களும்!


ਪੀ ਸਾਈਨਾਥ People’s Archive of Rural India ਦੇ ਮੋਢੀ-ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਕਈ ਦਹਾਕਿਆਂ ਤੋਂ ਦਿਹਾਤੀ ਭਾਰਤ ਨੂੰ ਪਾਠਕਾਂ ਦੇ ਰੂ-ਬ-ਰੂ ਕਰਵਾ ਰਹੇ ਹਨ। Everybody Loves a Good Drought ਉਨ੍ਹਾਂ ਦੀ ਪ੍ਰਸਿੱਧ ਕਿਤਾਬ ਹੈ। ਅਮਰਤਿਆ ਸੇਨ ਨੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕਾਲ (famine) ਅਤੇ ਭੁੱਖਮਰੀ (hunger) ਬਾਰੇ ਸੰਸਾਰ ਦੇ ਮਹਾਂ ਮਾਹਿਰਾਂ ਵਿਚ ਸ਼ੁਮਾਰ ਕੀਤਾ ਹੈ।

Other stories by P. Sainath