சத்தீஸ்கர் மாநிலத்தின் மத்தியப் பகுதியிலுள்ள, ராய்ப்பூர் மாவட்டத்தின் தாம்தாரி பகுதியிலிருந்து, சற்றேறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோஹர்ஷி கிராமத்தில் செயல்படும் பெண்களுக்கான தொடக்கப்பள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பள்ளியின் வெளிப்புற தோற்றமே அதன் வரலாற்றை சட்டென நமக்கு உணர்த்துகிறது ; அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் சுற்றளவே அந்த மரம் 80 முதல் 90 வயது கொண்டது என்பதை காட்டுகிறது. ஒரு முறை நீங்கள் பள்ளியின் உள்ளே சென்று மாணவிகளைச் சந்தித்தால் , நீங்களும் அந்த பள்ளியின் நிகழ்காலத்தையும் , நேர்மறை ஆற்றலையும் காணலாம், அதுமட்டுமல்லாது, அந்த பள்ளி உண்டாக்கும் உள்ளார்ந்த அதிர்வையும் நீங்கள் அனுபவிக்கக்கூடும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக செயல்பட்டு வந்த, இந்த பள்ளி 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இருந்து இன்று வரை உள்ள 96 ஆண்டுகளின் வருகைப்பதிவேடுகள், அங்குப் படித்த அனைத்து மாணவிகளின் பெயர்களோடும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியக்கூடிய நீலிமா நீதம், பழைய கரையான் அரித்த வருகைப்பதிவேட்டை ஒரு மரப்பெட்டியினுள் கண்டெடுத்ததாகவும், அந்தப் பதிவேட்டில் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து பயின்ற மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவேடுகளை புதிய உறைக்குள் இட்டு, பத்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அந்த பதிவேடுகள் இந்த பள்ளியின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் மிகமுக்கிய ஆவணம் என்றும் கூறியுள்ளார்.
அவர்கள் சேகரித்து வைத்திருந்த சில ஆவணங்களை குறிப்பாக மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியலை நாங்கள் பார்த்தோம், அதில் சிலப் பகுதிகளை கரையான் அரித்திருந்ததால், சில மாணவிகளின் பெயர்களும், தகவல்களும் தெளிவற்றதாக இருந்தது. ஆனால், இதரப் பகுதிகள் தெளிவாக இருந்தது. பேனாவை மை பாட்டில்களில் தொட்டு பெரிய எழுத்துக்களில், அழகான கையெழுத்தில் அதில் தகவல்கள் குறிக்கப்பட்டுள்ளது
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில பெயர்கள்- பனீன் பாய் டெலின், சோனா பாய் கோஸ்டின், துர்பத் பாய் லோஹரின், ராம்சீர் பாய் கலரின், சுகந்தீன் பாய் கோண்டின் - அதனோடு சாதி பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையால் எழுதப்பட்ட வருகைப்பதிவேடு என்பதால் ஒரே மாதிரியாக இல்லை, ஒருவருக்கு பின் மற்றொருவர் கையாண்டதின் காரணமாக இவ்வாறு இருக்கலாம். அதுமட்டுமல்லாது, பெயர், காப்பாளரின் பெயர் மற்றும் மாணவிகளின் சாதி ஆகிவற்றை குறிப்பிட அச்சிடப்பட்ட தனித்தனி அட்டவணைகளை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆவணங்களில் இந்த பள்ளியில் சில தசாப்தங்களுக்கு முன்பு பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, இலக்கியப் பாடத்தில் உரையாடல், கதை,நாடகம், உரைநடை,வெளிப்பாடுகள்,சொல்லகராதி,கவிதை,சொற்களைக் கூறி எழுதச்சொல்லல்,கையெழுத்து மற்றும் பிரதி எடுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதே போன்று, கணிதப்பாடத்தில் கூட்டல்,கணித செயல்பாடுகள், பணம் , சிறியளவிலான அளவீடுகள், எழுத்து நடை, பெருக்கல் வாய்ப்பாடு,எழுதப்பட்ட மற்றும் வாய்மொழியாக கூறப்பட்ட கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியர் ஜோதிஷ் விஷ்வாஸ் கூறுகையில்," அந்தக் காலத்தில், தொடர்ச்சியான விரிவான மதிப்பீடு செய்யப்படுவது பொதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆவணங்களில் மாணவிகள் இடைநிற்றல் காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் வழியாக எண்ணற்ற பெண்கள் பூப்பெய்திய உடன் பள்ளியை விட்டுநின்றதும் தெரியவந்துள்ளது. மேலும் புலப்பெயர்வு மற்றும் வறுமை ஆகியவையும் பள்ளியைவிட்டு நின்றதற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், லோஹர்ஷி கிராமத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது ஆம்டி மற்றும் முஜ்கஹான் ஆகிய கிராமத்தை சேர்ந்த பெண்களும் இந்த பள்ளியில் படித்துள்ளனர்.
அந்த பழைய ஆவணங்கள் வழியாக, அந்தக் காலத்தில் நிலவிய சமூகச்சூழல் குறித்த பார்வைகளையும் நமக்கு வழங்குகிறது. 1918 ஆம் ஆண்டின் பதிவேட்டின் படி, அந்த பள்ளியின் பெயர் முதலில் மகள்களின் பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது , பின்னர் அது பெண்கள் தொடக்கப்பள்ளி என்று மாற்றப்பட்டிருக்கிறது. 1918 ஆம் ஆண்டு, இந்த பள்ளியில் 64 மாணவிகள் பயின்றுள்ளனர், தற்போது 74 மாணவிகள் பயின்று வருகின்றனர் , அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு மாணவியும்,12 பழங்குடியின மாணவிகளும், 21 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர். மேலும் , மூன்று ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த ஆவணங்களின் வழியாக எண்ணற்ற பெண்கள் பூப்பெய்திய உடன் பள்ளியை விட்டுநின்றதும் தெரியவந்துள்ளது. மேலும், புலப்பெயர்வு மற்றும் வறுமை ஆகியவையும் பள்ளியைவிட்டு நின்றதற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பள்ளியின் கடந்த காலத்தைப் போலவே ,நிகழ்காலமும் மிகுந்த பிரகாசமாக, நம்பிக்கை மிகுந்ததாக உள்ளது. மதிய உணவு இடைவேளையின் போது, ஆசிரியர்களும் மாணவிகளும் ஒன்றாய் அமர்ந்து எண்ணற்ற நிகழ்வுகளைக் குறித்து உரையாடுகிறார்கள்; மாணவிகள் ஆசிரியருடன் மிகவும் இணக்கமாக, நட்புணர்வுடன் பழகுகிறார்கள். ஹிந்தி அதே போன்று சத்தீஸ்கரி ஆகிய மொழியில் எண்ணற்ற குழுப்பாடல்களை கற்றுக்கொள்கிறார்கள், அதை ஒன்றிணைந்து பாடுகிறார்கள். வண்ணம் அடிக்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் படங்கள் வகுப்பறையை அலங்கரிக்கின்றன. அவை ஆசிரியர் ஜோதிஷ் விஷ்வாஸ் வரையப்பட்டவை. அதுகுறித்து அவர் கூறுகையில்," இந்த படங்கள் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை,இது மாணவர்கள் எழுத,படிக்க,கற்க மற்றும் சிந்திக்க உதவும் . மிகமுக்கியமாக, மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து இந்த படங்களில் வண்ணம் தீட்டியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
சுனில் குமார் யாது, தற்போது இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் கூறியுள்ளதாவது, இந்த பள்ளியில் படித்த எண்ணற்ற மாணவர்கள் நவோதயா பள்ளியில் சேர்ந்து வருவதாகவும், அவர்களை ஆசிரியர்கள், இத்தகைய ஒரு படி முன்னேற்றத்திற்கு தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளியில் உள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது அல்லது இங்குள்ள பெரிய திறந்தவெளிப்பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படவேண்டும். இப்போது கூட இந்த பள்ளியின் வரலாற்றை நினைத்து பார்க்கும் போது, மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் உற்சாகத்தை ப் பார்க்கும் போது மனதைக் மனநிறைவாக உள்ளது. எண்ணற்ற மாணவிகள் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள் , அவர்கள் காலில் செருப்பு கூட அணியவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடு நம்பிக்கைத்தரக்கூடியதாய் உள்ளது, ஒரு நாள் அவர்கள் இந்த பள்ளியின் பெயரை உலகறிய செய்வார்கள்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்