“இன்று நீங்கள் கடைகளில் எதை வேண்டுமானாலும் வாங்கி வரலாம். ஆனால், எங்களுடைய பழங்குடி சமூகத்தில் மத சடங்குகளின் போது நாங்கள் பயன்படுத்துகின்ற மண்பாண்டங்களை எங்களுடைய கோடா பழங்குடி இனத்தின் பெண்கள் மட்டுமே செய்வார்கள்.” என்கிறார் 63 வயதான சுகி ராதாகிருஷ்ணன். திருச்சிகாடி என்பது அவரின் மலைக்கிராமம். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரத்துக்கு அருகே உதகமண்டலம் தாலுகாவில் இந்தக் கிராமம் இருக்கிறது. பழங்குடி மக்கள் அவர்களின் குடியிருப்புகளுக்கு சிறிது வேறுபட்ட பெயர்களை வைத்திருக்கிறார்கள்.. கிராமத்தின் பெயரை அவர்கள்‘ ட்டிருச்காத்’ என்று உச்சரிக்கிறார்கள்.
வீட்டில் இருக்கும்போது சுகி வழக்கமாக கோடா பழங்குடி பெண்களின் அடையாளமாக இருக்கின்ற ஆடைகளை அணிகிறார். கனமான, வெள்ளைத்துண்டைச் சுற்றியது போல அது இருக்கிறது. ‘துப்பிட்’ என்று அதனை அழைக்கிறார்கள். அதோடு அவர்கள் அணிகிற வெள்ளை நிற சால்வை என்பது ‘வாரத்’ என்று அழைக்கப்படுகிறது. கோத்தகிரியிலும் மற்ற நகரங்களுக்கும் வேலைக்கும் போகும்போது அவர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிவதில்லை. ஆனால், வீட்டுக்குத் திரும்பியபிறகு அவர்களின் பாரம்பரிய உடைகளைத் தான் அணிகிறார்கள்.. சுகியின் எண்ணெய் தடவப்பட்ட தலைமுடி அவர்களின் பழங்குடி இனப் பெண்களுக்கே உரிய வகையில் பக்கவாட்டில் தனித்துவமான முறையில் முடிந்து வைக்கப்படுகிறது. அவரது வீட்டிற்கு அடுத்ததாக சின்னதாக உள்ள பானைகள் செய்யும் அறையில் எங்களை வரவேற்கிறார்.
“இந்தப் பானையை எப்படி செய்றது என்பதற்கான சொல்லிக்கொடுக்கிற முறை எதுவும் கிடையாது. நான் என்னோட பாட்டிங்க எப்படி பானைகளை செய்றாங்கன்னு அவுங்களோட கைகளைப் பார்த்துத் தான் கத்துக்கிட்டேன்” பானையைச் செய்யும்போது அவுங்க கையி எப்படியெல்லாம் அசையுதுன்னு பாப்போம். வட்டமான ஒன்னுல இருந்து எப்படி பானை மாதிரியா எப்படி கொண்டுவர்றதுன்னு அவுங்க கையிதான் சொல்லிக்கொடுக்கும். ஒருத்தருக்கு அதுக்கே பல மணிநேரம் ஆகும். பானையோட வெளிப்புறத்துல மரத்தால் செஞ்ச ஒன்னை வெச்சுக்கிட்டு மென்மையானதா, மெதுவாக அதை மாத்துற அதே நேரத்தில் பானைக்கு உள்ளே மெதுவான, வட்ட வடிவமான கல்லை வைச்சுக்கிட்டு அதையும் மெதுவானதாக மென்மையானதாக மாத்துவாங்க. வெளிப்புறத்துலயும் உள்புறத்திலயும் செய்ற வேலை ஒன்னோடு ஒன்னு இணைந்து இணக்கமாக நடக்கும். கீறலுங்க வரக்கூடாது. பானை தண்ணி ஒழுகக் கூடாது. இரண்டு பக்கமும் ஒன்னுபோல செஞ்சாத்தான் அப்படி வரும். அப்படிப்பட்ட பானையில சமைச்சா ரொம்ப ருசியாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக வந்து சாப்ட்டு பார்க்கனும். சாம்பார் வைக்கிறதுக்கு நாங்க சின்ன வாயோடு இருக்கின்ற இன்னொரு பானையையும் தயார் செய்வோம்.” என்கிறார் அவர்.









