“ஏழரை நில ஆவணம் இல்லாமல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,” என்கிறார் தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் அமர்ந்திருக்கும் 55 வயது சசிகலா கெய்க்வாட்.
அவருக்கு அருகே காவி மற்றும் சிவப்பு கம்பளங்கள் மீது 65 வயது அருணாபாய் சோனாவானே அமர்ந்திருக்கிறார். மகாராஷ்ட்ராவின் அவுரங்கபாத் மாவட்டத்தின் சிம்னப்பூர் கிராமத்திலிருந்து இருவரும் ஜனவரி 25-26 தேதிகளில் சம்யுக்தா ஷெத்கரி கம்கர் மோர்ச்சா மும்பையில் ஒருங்கிணைக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றனர்.
இருவரும் அவர்களுக்கான நிலவுரிமையை 2006 வனவுரிமை சட்ட த்தின்படி கேட்கவும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காகவும் அவர்கள் வந்திருக்கின்றனர். கன்னட் தாலுகாவில் இருக்கும் அவர்களின் ஊரில் விவசாயக் கூலி வேலைதான் வருமானத்துக்கான முதன்மையான வழி. அருணாபாய்யும் சசிகலாவும் பில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள். வேலை இருக்கும் நாட்களில் நாட்கூலியாக 150லிருந்து 200 ரூபாய் வரை அவர்களுக்கு கிடைக்கும். “உங்களை போல, மாதத்துக்கு என்ன வருமானம் வருமென எனக்கு தெரியாது” என்றார் அருணாபாய்.
இருவரும் வைத்திருக்கிற மூன்று ஏக்கர் நிலங்களில் இரு வகை சோளம் விளைவிக்கின்றனர். ஒரு வகையின் 10-12 குவிண்டால்களை ஒரு குவிண்டால் 1000 ரூபாய் என்கிற விலைக்கு விற்கின்றனர். இன்னொரு வகையை குடும்ப உணவுக்கு வைத்துக் கொள்கின்றனர். வேலிகள் போட்டிருந்தாலும் அவர்களின் பயிரை அவ்வப்போது காட்டுப் பன்றிகளும் குரங்குகளும் வந்து அழித்து விடுகிறது. “இரவு நேரத்தில் ஒருவர் விழித்திருந்து காவல் காக்க வேண்டும்,” என்கிறார் அருணாபாய்.
சசிகலாவும் அருணாபாயும் விளைவிக்கும் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. “ஏழரை ஆவணம் (நிலவுரிமைக்கான ஆவணம்) இல்லாமல் எங்களுக்கு எந்த வசதியும் (விவசாயத்துக்கு) கிடைக்காது,” என்கிறார் சசிகலா. “வனத்துறை ஆட்களும் எங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ‘இங்கு விவசாயம் செய்யாதே, வீட்டை கட்டாதே, ட்ராக்டர் எடுத்து வந்தால் அபராதம் விதிப்போம்’ என்றெல்லாம் சொல்கின்றனர்.
சசிகலாவும் அருணாபாய்யும் விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை எதிர்த்து தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஆசாத் மைதானத்துக்கு வந்திருக்கின்றனர். 2020 ஜூன் 5 அன்று ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அம்மாத 20ம் தேதி சட்டமான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
சசிகலாவுக்கும் அருணாபாய்க்கும் பிற கவலைகளும் இருக்கின்றன. இருவருமே அவர்களின் கணவன்மார்களை பத்தாண்டுகளுக்கு முன் காசநோய்க்கு இழந்துவிட்டனர். ஆனால் விதவை உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை. சசிகலா, இரண்டு மகன்கள் அவர்களின் மனைவிகள் மற்றும் மூன்று பேரக் குழந்தைகளுடன் வாழ்கிறார். குடும்பத்தில் இருக்கும் ஐந்து பெரியவர்கள் விவசாயக் கூலிகளாக நிலங்களில் வேலை பார்க்கின்றனர்.
“நாங்கள் ஒரு ஆறேழு பேர் (கணவரை இழந்தவர்கள்) தாசில்தார் அலுவலகத்துக்கு உதவித்தொகை படிவங்களுடன் சென்றோம்,” என இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வை நினைவுகூர்கிறார் அருணாபாய். “எனக்கு இரண்டு வளர்ந்த மகன்கள் இருப்பதால் உதவித்தொகை கிடைக்காது என அவர் சொல்லிவிட்டார்.”
அருணாபாயின் குடும்பத்தில் 13 பேர் இருக்கின்றனர். அவரின் இரு மகன்கள், அவர்களின் மனைவிமார்கள் மற்றும் எட்டு பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் ஐந்து பெரியவர்கள் விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர். அவ்வப்போது சிம்னப்பூரில் இருக்கும் சிறு குளத்தில் மீன் பிடித்து உண்பார்கள்.
“நாளை என் அண்ணன் மகனுக்கு திருமணம் என்பதால் வந்திருக்கிறேன். என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்,” என உறுதியாக பேசுகிறார் அருணாபாய் மும்பையின் ஆசாத் மைதானத்திலிருந்தது. “நாங்கள் அதிக பேர் வந்தால் இன்னும் அழுத்தம் கிடைக்கும். அதனால்தான் இங்கு வந்திருக்கிறோம்.”
தமிழில்: ராஜசங்கீதன்