எனது உயர் நிலை தேர்வு முடிவுகள் வெளியான அந்த நாளில் எனது நிலை கிரிக்கெட் பந்தைப்போல இருந்தது. பந்து எல்லைக்கோட்டை தொட்டதும் அது 4 ரன்கள் ஓட்டமா அல்லது 6 ரன்கள் ஓட்டமா? என எல்லோரும் அந்த பந்தைப்போலவே பார்த்தனர். நான் தோல்வியடைந்திருந்தால் என்னவாகியிருக்கும்? எனது தந்தை எனக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்திருப்பார்.
2020ம் ஆண்டு ஜீலை 29ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நான் 79.06 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ஒரு புள்ளியில் எனது பள்ளியின் மூன்றாவது இடத்தை தவற விட்டிருந்தேன். எங்கள் நாத்ஜோகி நாடோடி குழுவில் ஒரு பெண் கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதில்லை.
நான் நவ்கேவில் வசிக்கிறேன். (ஜல்கோன் ஜமோத் செடசில், புல்தானா மாவட்டம்) அது ஒரு சிறிய கிராமம். அங்கு எங்கள் சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் மட்டும் வசிக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலானோர் புனே, மும்பை மற்றும் நாக்பூருக்கு பிச்சை எடுக்கச் செல்கின்றனர். எஞ்சிய எனது தந்தையைப்போன்ற ஒரு சிலர் இங்கு கூலித்தொழிலாளர்களாக எங்கள் கிராமத்தைச் சுற்றி பணியாற்றுகின்றனர்.
எனது பெற்றோர், பாபுலால் சஹேப்ராவோ சோலாங்கி (45) மற்றும் திரவுபதா சோலாங்கி (36) ஆவார்கள். அவர்கள் கோதுமை, சோளம், மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி வயல்களில் கூலி வேலை செய்வார்கள். நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு அவர்கள் தலா ரூ.200 கூலி பெறுவார்கள். அவர்களுக்கு மாதத்தில் 10 முதல் 12 நாட்களுக்கு தொடர் வேலை கிடைப்பதே அரிதான ஒன்றாகும். பெரும்பாலானோருக்கு வேலை தேவையிருக்கிறது. ஆனால் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை.
எனது தந்தை ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி சென்று, பின்னர் நின்று விட்டு, வேலைகள் செய்ய துவங்கிவிட்டார். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். அதில் 24 வயதான ருக்மா பள்ளி சென்றதில்லை. 22 வயதான நினா ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். எனது இரு சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் பள்ளியைவிட்டு நின்றதில் இருந்து கூலி வேலைக்கு செல்கின்றனர். எனது சகோதரர் தேவ்லால் (20). அவரும் கூலித்தொழிலாளர். அவர் 9ம் வகுப்பில் பள்ளிப்படிப்பை விட்டார். எனக்கு 10 வயதானபோது எனது தந்தை என்னை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும், இனிமேல் படிக்கத்தேவையில்லை என்றும் கூறினார். அவர் மட்டுமல்ல, நான் பள்ளி செல்லும் வழியில் எப்போதும் சந்திக்கும் மூதாட்டி ஒருவரும், “உனது சகோதரிகள் பள்ளி செல்லவில்லை, நீ மட்டும் ஏன் படிக்கிறாய்? படித்தால் வேலை கிடைக்கும் என்று நீ நினைத்தாயோ?“ என்று என்னை திட்டினார்.









