“3 டிராக்டர்கள், 6 டிராக்டர் டிராலிகள் மற்றும் 2 முதல் 3 கார்கள் எங்கள் கிராமத்தில் இருந்து 24ம் தேதி காலை டெல்லிக்குச் செல்லும்“ என்று ஹரியானாவின் கந்த்ரவுளி கிராமத்தைச் சேர்ந்த சீக்கு தண்டா கூறினார். “28 வயது இளம் விவசாயியான அவர், “நாங்கள் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள செல்கிறோம். நான் எனது சொந்த டிராக்டரை ஓட்டிச்செல்கிறேன்“ என்று மேலும் கூறினார்.
ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்குவுக்கு செல்வது சீக்குவுக்கு இது ஆறாவது முறையாகும். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ஒவ்வொரு முறை சென்றபோதும் கலந்துகொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள கந்த்ரவுளியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறார். சாலையில் 4 மணி நேரம் பயணம் செய்து அங்கு செல்கிறார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஒவ்வொரு முறை சென்றபோதும், குறைந்தபட்சம் 3 இரவுகள் சிங்குவில் தங்கியுள்ளார்.
அவருடன் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் அவரது உறவினர் 22 வயதான மொஹிந்தர் தண்டாவும் செல்கிறார். அவர்களின் குடும்பம், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள, ஹரியானாவின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கூட்டுக்குடும்பமாக உள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர்கள் காய்கறிகள், கோதுமை மற்றும் நெல் பயிரிடுகிறார்கள்.
“எங்கள் விளைச்சலை வேளாண் விளைபொருள் சந்தை அங்காடியில் விற்பதன் மூலம் நாங்கள் ஏக்கருக்கு ஆண்டுக்கு, ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றோம்“ என்று மொஹிந்தர் கூறினார். “பயிர் விளைவிப்பதற்கான செலவு ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஆனால், குறைந்தளவு ஆதரவு விலை உயரவில்லை“ என்று அவர் மேலும் கூறினார். இந்த வருமானமே அவரின் 8 பேர் கொண்ட குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இவர்களின் குடும்பத்தைப்போல், கந்த்ரவுளி கிராமத்தில் 1,314 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் ஜனவரி மாதத்தின் மத்தியில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது, கிராமத்தில் நிறைய விவசாயிகள் தொடர்பில் உள்ள பாரதிய விவசாயிகள் யூனியன் போல் மண்டல அளவில் அல்லாமல், உள்ளூர் அளவிலான முடிவுகளில் கவனம் செலுத்துகிறது. “இந்த கிராம குழு, விவசாயிகள் போராட்டத்திற்கு சென்றுள்ளவர்களின் வயலை யார் பார்த்துக்கொள்வது என்று முடிவெடுக்கிறது“ என்று சீக்கு கூறினார். அவர்களே சிங்குவில் உள்ளவர்களுக்கான உணவு தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள்.





