”வயல்வெளிகளில் வேலையில்லாதபோது, காட்டுக்குச் சென்று கர்மடா பழங்களையும், மற்ற பொருட்களையும் சேகரிக்கப் போவேன்” என்கிறார் கங்கய். பலெங்கா பரா என்னும் அவர் வாழும் குடிசைப் பகுதியைச் சுற்றியிருக்கும் செடிகள் நிறைந்த காட்டிலும் புனித தோட்டத்திலும் உள்ள லாவூட்டைத்தான் அவர் குறிப்பிடுகிறார். அடர் சாம்பல் நிற கற்பாறைகள், கிராமக் குடிசைகள், காரின் அளவிலான குடில்கள் சமவெளி முழுவதும் நிறைந்திருக்கின்றன. நிலப்பரப்பின் மீது பழைய மரங்கள் வேர்விட்டு இருக்கின்றன. அதன் கிளைகள் அடர்ந்த கொடிகளால் நிறைந்திருக்கின்றன.
பலெங்கா பரா என்பது, பஸ்தார் பகுதியின் அமராவதி காட்டின் எல்லையில் இருக்கும் பகுதியாகும். தெற்கு சத்தீஸ்கர் பகுதியின் ராஜ்நந்தகோன் நகரில் இருந்து, எட்டு மணி நேர பேருந்து பயணமும், இரண்டு கிலோமீட்டர் நடைபாதைப் பயணத்துக்குப் பிறகு அமைந்திருக்கும் பகுதி இது. இக்குடிசைப்பகுதியில், முதன்மைத் தெரு கரிபடிந்ததாகவும், மற்ற பகுதிகளில் அழுக்கடைந்தும், மாட்டுச் சாணம் நிரம்பியும் இருக்கும். பலெங்கா பராவின் 336 (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) நபர்களும் முதன்மைத் தெருப்பகுதியைச் சுற்றி 60 ஓர் அறை வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். சில குடில்கள் பழைய, பழுப்பேறிய மண்ணாலும், செங்கலாலும் கட்டப்பட்ட வீடுகள். சில வீடுகள் கான்கீரீட்டிலும், பச்சையிலும், இளஞ்சிவப்பு வண்ணங்களாலும் பெயிண்ட் செய்யப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளாலும் ஆன வீடுகள்.
33 வயதான கங்கய் சொதி, கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஹல்பி மொழியைப் பேசுகிறார். கோண்டி மொழியும், கொஞ்சம் ஹிந்தி மொழியும் பேசுகிறார். முதலில் கொஞ்சம் வெட்கப்பட்டாலும், அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் எழுதுவதற்கு ஒப்புக்கொண்டார்.
தனது குடும்பத்தைப் பராமரித்துக்கொள்ளும் கங்கய், அவரது தந்தையின் வயல்வெளியில் பணிபுரிகிறார். வார இறுதியில் வாரச் சந்தையான ஹாட்டில் (சந்தை) விற்பனை செய்வதற்காக மஹுவா மலர்களில் இருந்து மதுவைத் தயாரிக்கிறார்.
கங்கய் சொதியின் நாள் காலை 5 மணிக்குத் தொடங்குகிறது. “ஒரு நாளின் உணவுக்காக நெல்லில் இருந்து உமியைப் பிரித்துத் தயாரித்து வைப்பேன். பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைத்துவிட்டு, அருகில் இருக்கும் பம்பில் இருந்து தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, சமையலுக்கான விறகுகளை சேகரிப்பேன். காலை உணவைத் தயாரித்து வைத்துவிட்டு, காலை 10 மணிக்கு வயல்வெளிக்கு வேலைக்குச் செல்வேன்” என்கிறார். பிற்பகலில் வீட்டுக்கு வந்து மதிய உணவுக்கான வேலைகளைச் செய்துவிட்டு மறுபடியும் வயலுக்குத் திரும்புகிறார். நான்கு மணிக்கு வேலைகளை முடிக்கிறார். “குளித்துவிட்டு, தண்ணீரைப் பிடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் விறகுகளைச் சேகரிப்பேன். தரையில் மாட்டுச் சாணத்தை மாற்றி மெழுகிய பிறகு, சோறும், கறியும் சமைப்பேன் (சைவம் மற்றும் அசைவம்). சிறப்பான சில நாட்களில் பூரியும், கீரும் (உடைத்த கோதுமையால் ஆன உணவுப்பொருள்) சாப்பிடுவோம்.
கங்கய், அவரது தாய் குமெண்டியுடனும், தந்தை மங்கல்ராமுடனும் வாழ்கிறார். ஷிவ்ராஜ், உமேஷ், சஹாந்தாய் மற்றும் ரத்னி ஆகியோர் உடன்பிறந்தவர்கள். 15 வயதான ஜித்தேஷ்வரி, 13 வயது ஜோதி மற்றும் 11 வயது ப்ரதீமா ஆகியோர் கங்கய் சொதியின் மகள்கள். அருகிலிருக்கும் தெருவின் ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் வீடு, அந்தக் கிராமத்திற்கான ஒரே நீர்வளமான தண்ணீர் பம்புக்கு அருகில் அமைந்திருக்கிறது. களிமண் டைல்களால் ஆன கூரையுடன் இருக்கும் அவரது செங்கல் வீட்டுக்கு பச்சை பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். கதவின் நுழைவில், பல வண்ணங்களால் ஆன வளையல்களால் வளையங்களாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.






