தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடனமாடிய 40 போராளிகளுக்கு நவ்ஷியா குர்வா இப்போதுதான் தும்சி எனப்படும் பறையிசைக் கருவியை வாசித்து முடித்திருந்தார். இரவு 11 மணியளவில் ஓய்வெடுக்க அமர்ந்தபோது, அவரை மூன்று பேர் அணுகினர்.
“திருமணமா? என்ன தேதியில்?” என கேட்கிறார் நவ்ஷியா. அவருடன் உரையாடிவிட்டு தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு மூவரும் நகர்ந்தனர். ஜனவரி 25ஆம் தேதி மைதானத்தில் போராட்டத்திற்கு கூடிய விவசாயிகளை பார்த்து அவர் சிரித்தபடி சொன்னார்: “ எனக்கு ஒரு வேலைவந்துவிட்டது.”
தஹானு தாலுக்கா கின்ஹவாலி கிராமத்தில் நவ்ஷியா, அவரது மனைவி பிஜ்லி இணைந்து சோளம், துவரை, அரிசி ஆகியவற்றை ஐந்து ஏக்கர் வனநிலத்தில் பயிரிட்டு வருகின்றனர். அவர் வயல் வேலை இல்லாத நேரத்தில், இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் ஈடுபடுவார். அவர் மாதம் 10-15 திருமணங்களுக்கு இலவசமாக பறை வாசிக்கிறார். அவரது பயணம், உணவு, தங்கும் செலவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.“ பெரும்பாலும் [பறை இசைக்க] நாஷிக்கிற்கு, சில சமயம் வெளியிலும் செல்கிறேன். தானே, குஜராத்திற்குக் கூட சென்றுள்ளேன்,” என்கிறார் நவ்ஷியா.
அவர் 40 ஆண்டுகளாக பறை இசைக்கிறார். “என் கிராமத்தில் மற்ற இசைக் கலைஞர்களைப் பார்த்து இசைக்க கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர்.




