ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்களில் சி.என். ராஜேஸ்வரி சாதாரணமானவர் அல்ல. வாரத்தில் ஆறு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவர் 3 முதல் 6 வயது வரை உள்ள 20 குழந்தைகளுக்கு கல்வி போதிக்கிறார், அவர்களில் பெரும்பாலோர் நகராட்சியில் துப்புரவாளர்களாகவும், தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், சுமை தூக்குபவர்களாகவும், தெருக்களில் வியாபாரம் செய்பவர்களாகவும் தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியர்களாக வேலை செய்பவர்களின் குழந்தைகள். அவர்களில் பலர் கர்நாடகாவின் பிற பகுதிகளிலிருந்தோ ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தோ வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
அந்தக் குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் அங்கு வருகிற மூன்று முதல் ஐந்து வரையான கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அவரே மதிய உணவும் சமைக்கிறார். அதே போல் வேலைக்குப் போகிற பெற்றோர்களின் குழந்தைகளையும் பராமரிக்கிறார். அந்தக் குழந்தைகளுக்கும் உணவு ஊட்டுகிறார். அந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் போடவேண்டிய நோய்த் தடுப்பு ஊசிகள் சரியான காலகட்டங்களில் போடப்பட்டுள்ளதாக என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார்.. இவை அனைத்தையும் பற்றிய விரிவான பதிவுகளையும் அவர் பராமரிக்கிறார். அங்கன்வாடிகளுக்கு வந்து போகிறவர்களின் ஏதாவது ஒரு வீட்டுக்குப்போய் அந்தத் தாயின் நல்வாழ்வையும் குழந்தையின் நல்வாழ்வையும் பரிசோதிக்கவும் அவர் நேரத்தைக் கண்டுபிடித்து ஒதுக்கிக்கொள்கிறார்.
பெங்களூரின் பரபரப்பான ஜே. சி. சாலையில் உள்ள வியாயம் ஷாலா காலனி அவரது பணிப் பொறுப்புக்கு உட்பட்ட பகுதி. அதில் உள்ள 355 குடும்பங்களுக்கு அரசுத் திட்டங்களின் பயனை அளிக்கும் வகையில் அவர் படிவங்களை நிரப்புகிறார். அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொள்கிறார். இந்தப் பணி என்பது புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சுகாதாரப் பணிகளையும் அரசாங்க திட்டங்களையும் வாங்கிக்கொடுக்க உதவுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
பலர் அவரை வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாகப் பார்க்கிறார்கள் என்கிறார் அவர். “நாங்கள் சமைப்பதையும் சுத்தம் செய்வதையும மட்டும்தான் செய்கிறோம் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை எனக்கு கல்வி போதிப்பதில் ‘அனுபவம்’ கிடையாது என்று கருதுகிறார்கள் ” என்கிறார் 40 வயதான ராஜேஸ்வரி.











