பாலாஜி ஹெட்டாகலே முதல் நாள் கரும்பு வெட்டுகிறார். அடுத்த நாள் அவர் இல்லை. அவர்கள் தங்கள் மகன் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். “இந்த அசாதாரண சூழ்நிலை எங்களை கொல்கிறது“ என்று அவரது தந்தை பாபாசாகேப் ஹெட்டாகலே கூறுகிறார். ஜீலை மாதத்தில் ஒரு மதிய வேளையில், கருமேகங்கள் சூழ்கிறது, அவர்களின் ஒற்றை அறைகொண்ட சிமெண்ட் வீட்டில் அமர்ந்திருக்கும் பாபாசாகேப் பேசுகையில், “அவர் உயிரோடு தான் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா? என்பதுதான் எங்களுக்கு தெரியவேண்டும்“ என்று கூறும்போது அவரது குரலிலே விரக்தி தெரிகிறது.
2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் பாபாசாகேப் மற்றும் அவரது மனைவி சங்கிதா இருவரும் தங்களது 22 வயது மகனை கடைசியாக பார்த்தது. மஹாராஷ்ட்ரா பீட் மாவட்டத்தில் உள்ள காடிவாட்கான் கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தின் கரும்பு வயல்களில் பணி செய்வதற்காக சென்றுவிட்டார்.
மஹாராஷ்ட்ராவின் மராத்வாதா பகுதியில் இருந்து ஆண்டுதோறும், 6 மாதங்கள் மேற்கு மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவிற்கு கரும்பு வெட்ட செல்லும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுள் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் அவர்களின் கிராமத்தில் இருந்து தீபாவளி முடிந்த நவம்பர் மாதத்தில் கிளம்புகிறார்கள், மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திரும்புவார்கள். அவ்வாறு சென்ற பாலாஜி இந்தாண்டு திரும்பி வரவில்லை.
பாலாஜியின் தாயும், தந்தையும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு புலம்பெயர்ந்து சென்று வேலை செய்து வருகிறார்கள். பாலாஜிக்கு இதுவே முதல் முறை. “நானும், எனது மனைவியும் இருபது ஆண்டுகளாக இடம்பெயர்ந்து சென்று கரும்பு வெட்டும் வேலை செய்து வந்ததோம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பருவத்தில் ரூ.60 முதல் 70 ஆயிரம் வரை சம்பாதிப்போம்“ என்று பாபாசாகேப் கூறுகிறார். “அது ஒன்று மட்டும்தான் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் வருமானம். பீட்டில் தினக்கூலி வேலை சாதாரண நாட்களில் கிடைப்பது கடினமான ஒன்று. இப்போது கோவிட் தொற்றுக்கு பின்னர், அந்த நிலையும் மோசமாகிவிட்டது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
தொற்று காலத்தில், வயல்களிலோ, கட்டிட பணிகளிலோ கூலி வேலை தேடுவது மிகவும் கடினமான ஒன்று. “மார்ச் முதல் நவம்பர் வரை எங்களுக்கு பணம் கிடைப்பது கடினமான ஒன்று“ என்று பாபாசாகேப் கூறுகிறார். கோவிட் - 19 தொற்றுக்கு முன்னர், பீட்டில் உள்ள வட்வாணி தாலுக்காவில் உள்ள அவர்களின் ஊருக்கு திரும்பிய பின்னர், பாபாசாகேபுக்கு வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். அதில் நாளொன்றுக்கு ரூ.300 கிடைக்கும்.
கடந்தாண்டு நவம்பரில் இடம்பெயர்ந்து செல்லும் காலம் வந்தபோது, பாபாசாகேபும், சங்கிதாவும் செல்லவில்லை. ஏனெனில், பாபாசாகேபின் வயதான தாய் நோயுற்றிருந்தார். அவரை நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. “எனவே நாங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் எங்களுக்கு பதிலாக எங்கள் மகன் சென்றார்“ என்று பாபாசாகேப் கூறுகிறார்.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கோவிட் – 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திடீர் ஊரடங்கால், பாபாசாகேப் மற்றும் சங்கிதா போன்ற பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளது. பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்துவிட்டனர். பெரும்பாலானோருக்கு தினக்கூலி வேலை கூட கிடைக்கவில்லை. ஜீனில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கூட, பல மாதங்களுக்கு அவர்களின் கஷ்டங்கள் தொடர்ந்தன.
ஹட்டாகலே குடும்பத்தின் சூழ்நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை. 2020ல் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த பாலாஜியும், கரும்பு வெட்டும் பருவம் துவங்கியவுடன் பீட்டிலிருந்து அங்கு சென்றுவிட்டார். அதுவரை அவர் கிராமத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வேலை செய்து வந்தார்.
புதிதாக திருமணமான அவர், தனது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன், 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேலாகவியின் பசாப்பூர் கிராமத்திற்கு கரும்பு வெட்ட சென்றார். “அவர் அங்கிருந்து தினமும் போனில் அழைத்து எங்களிடம் பேசுவார். அதனால், நாங்கள் கவலையின்றி இருந்தோம்“ என்று சங்கிதா கண்ணீருடன் கூறுகிறார்.
டிசம்பர் மாத்தில் ஒரு மாலைநேரம் சங்கிதா அவரது மகனை அழைத்தார். அவரது மாமனார் போனை எடுத்து, பாலாஜி வெளியில் சென்றிருப்பதாக கூறினார். “பின்னர் நாங்கள் அழைத்தபோது அவரது போன் அனணத்து வைக்கப்பட்டிருந்தது“ என்று அவர் கூறுகிறார்.
அடுத்த 2-3 நாட்கள் பாலாஜியின் போன் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், பாபாசாகேபும் கவலையடைந்தனர். எனவே அவர்கள் பேலாகவி சென்று அவர்களை சந்தித்து வர முடிவெடுத்தனர். ஆனால், அவர்களுக்கு அங்கு செல்வதற்கு தேவையான பணம் இல்லை. அவர்கள் குடும்பத்தினர் ஒரு நாளைக்கு இரு வேலை உணவு மட்டுமே உட்கொண்டு பணக்கஷ்டத்தை சமாளித்து வருகின்றனர். குடும்பத்தில் அவரது மகள் அல்கா(15), மற்றொரு மகன் தனாஜி(13)யும் உள்ளனர். அவர்கள் மாடாங் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அது ஒரு ஒடுக்கப்பட்ட பட்டியலின சமூகமாகும்.
பாபாசகேப், உள்ளூரில் கடன் கொடுக்கும் ஒருவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை 36 சதவீதத்திற்கு கடன் வாங்கியுள்ளார். அவர் அவரது மகனை பார்க்க வேண்டும்.
பாபாசாகேப் மற்றும் சங்கிதா இருவரும் வாடகைக்கு ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு பேலாகவி சென்றனர். “நாங்கள் அங்கு சென்றபோது, அவரின் மாமனாரும், மாமியாரும் எங்களை மரியாதை குறைவாக நடத்தினார்கள். பாலாஜி குறித்து அவர்களிடம் கேட்டபோது, அதற்கு பதில் இல்லை“ என்று பாபாசாகேப் கூறுகிறார். இது சந்தேகமாக உள்ளது. அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்துள்ளனர். அதுகுறித்து, உள்ளூர் காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
“பாலாஜியை செல்வதற்கு அனுமதித்திருக்கக்கூடாது“ என்று பாபா சாகேப் கூறுகிறார். அவரது மகன் அவரோடு இருந்திருப்பார். “என்ன செய்வது? நாங்கள் வேலைக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பணிபுரிபவர்கள். ஊரடங்குக்கு பின்னர் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலை கிடைப்பது சிரமமாகிவிட்டது. கரும்பு வெட்ட செல்லும் ஒரு வழி மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருந்தது. எங்களுக்கு அருகில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், நான் அவரை இங்கேயே தங்கியிருக்கும்படி கூறியிருப்பேன்“ என்று வருந்துகிறார்.
வேளாண் பிரச்னைகளால், வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பு குறைந்தது மற்றும் தற்போது பருவநிலை மாற்றம் ஆகியவை பீடில் உள்ள மக்களை வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்வதற்கு வற்புறுத்துகிறது. கரும்பு வயல்களுக்கு வேலை தேடி செல்வதை தவிர பெரும்பாலானவர்கள் மும்பை, புனே மற்றும் ஔரங்காபாத் போன்ற நகரங்களுக்குச் சென்று, தொழிலாளர்களாள, பாதுகாவலராக, டிரைவராக மற்றும் வீட்டு வேலை செய்பவராக பணிபுரிகின்றனர்.
கடந்தாண்டு, தேசம் முழுவதும் போடப்பட்ட ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து வெளியேறி அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியது இதற்கு முன் நாட்டில் எங்கும் நடந்திராதது. இரண்டு மாதங்களை கடந்தும் தொடர்ந்தது. பசியுடனும், பட்டினியாகவும், உடல் நலன் பாதிக்கப்பட்டும், முழுதும் சோர்ந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் வீடுகளை அடைந்தனர். வழியிலே சிலர் பசி, சோர்வு, அதிர்ச்சி போன்றவை காரணமாக இறந்தார்கள். அவர்கள் வீடுகளை கஷ்டப்பட்டு வந்தடைந்ததை பரவலாக அனைத்து ஊடகங்களும் செய்தியாக்கின. ஆனால், சில ஊடகங்கள் மட்டுமே அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டை எவ்வாறு கடத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தின.
கடந்தாண்டு மே மாதத்தில்தான் சஞ்ஜீவாணி சால்வே (50), தனது குடும்பத்தினருடன், புனேவில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் பீட் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான ராஜீரி கோட்காவை வந்தடைந்தார். “அங்கு நாங்கள் எப்படியோ ஒரு மாதத்தை சமாளித்தோம். அனைத்து பிரச்னைகளும் முடிவடைவதற்கு எப்படியும் கொஞ்ச காலம் தேவைப்படும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே ஒரு டெம்போவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்“ என்று சஞ்ஜீவாணி கூறுகிறார். அவர் புனேவில் வீடு வேலைகள் செய்து ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவரது மகன் அசோக் (30), அமர் (26) மற்றும் பாக்யஸ்ரீ (33) ஆகியோர் நகரில் தினக்கூலிகளாக பணி செய்கிறார்கள். அவர்களும் சஞ்ஜீவாணியுடன் திரும்பிவிட்டனர். அப்போது முதல் அவர்கள் வேலை கிடைக்காமல் அவதியுறுகிறார்கள். அவர்கள் நவ் பவுதா (முன்னர் பட்டியல் இனம்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்மையில், பாக்யஸ்ரீ புனே சென்றார். ஆனால், அவரது சகோதரர்கள் பீட்டிலேயே தங்கிக்கொள்ள முடிவெடுத்துவிட்டனர். “நாங்கள் நகரத்திற்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை. அவர் சில கட்டாயத்தினால் (அவரது மகனின் பள்ளி படிப்புக்காக) சென்றுவிட்டார். ஆனால் அவருக்கு வேலை எளிதாக கிடைத்துவிடவில்லை. இனியும் அதேபோல் நகரத்திலும் வேலை கிடைக்காது“ என்று அசோக் கூறுகிறார்.
ஊரடங்கு காலத்தில் புனேவில் தாங்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றி அசோக் அலுத்துக்கொள்கிறார். “கோவிட்டின் மூன்றாவது அலை வந்தால் நாங்கள் என்ன செய்வது? மீண்டும் இதே துன்பங்களை நாங்கள் அனுபவிக்க வேண்டுமா?“ என்று கேட்கிறார். “நாங்கள்தான் எங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். யாருமே எங்களிடம் நாங்கள் சாப்பிட்டோமா? தண்ணீர் குடித்தோமா என்று கேட்கவில்லை. நாங்கள் இறந்து போயிருந்தால் அதற்காக ஒருவரும் வருந்தியிருக்க மாட்டார்கள்“ என்று அவர் கூறுகிறார்.
அசோக்குக்கு கிராமப்புறச்சூழல் நம்பிக்கைகொடுக்கிறது. “இங்குள்ளவர்கள் நான் எண்ணிவிடும் அளவிலே உள்ளனர். இங்கு திறந்தவெளிகளும் உள்ளன. நகரில் ஒரு சிறு அறையில் பூட்டிக்கொண்டு இருப்பது கஷ்டமாக உள்ளது“ என்று அவர் கூறுகிறார்.
பீடில் அசோக் மற்றும் அமர் இருவருமே தச்சுத்தொழில் செய்ய விரும்புகின்றனர். “வேலை இங்கு நிலையானதில்லை. என்றாலும் இங்கு நாங்கள் சம்பாதிப்பதைவிட செலவுகளும் அதிகமில்லை. எனினும், ஏதேனும் அவசரம் என்றால், எங்களுக்கு சிக்கல்தான்“என்று அசோக் கூறுகிறார்.
கடந்த சில மாதங்களில் பெரும்பாலானோர் நகரத்தில் இருந்து திரும்பிவிட்டனர். அவர்கள் குறைந்த வேலை மற்றும் குறைந்த வருமானத்தில் இங்கேயே தங்கிவிட்டனர். மகாத்மா காந்தி ஊரக திட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நிறைய பேர் வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
2020-21ல் மஹாராட்ஷ்ட்ராவில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட அட்டை வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 57 ஆயிரம், இது கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட 2 லட்சத்து 49 ஆயிரத்தைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
எனினும், ஊரடங்குக்குப்பின்னர், அந்த திட்டம் வழங்கி வந்த 100 நாள் வேலையை வழங்குவதில் தோற்றுவிட்டது. மஹாராஷ்ட்ராவில், 2020-21ல் வேலை கேட்ட 18.84 லட்சம் வீடுகளில், 7 சதவீதம், 1.36 லட்சம் வீடுகள் மட்டுமே 100 நாள் வேலையை முடித்திருக்கிறார்கள். பீட்டிலும் இதே அளவுதான்.
கடந்த சில மாதங்களில் பெரும்பாலானோர் நகரத்தில் இருந்து திரும்பிவிட்டனர். அவர்கள் குறைந்த வேலை மற்றும் குறைந்த வருமானத்தில் இங்கேயே தங்கிவிட்டனர். மகாத்மா காந்தி ஊரக திட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நிறைய பேர் வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
வீட்டில் வாழ்வாதாரத்திற்கான வசதி குறைவு மற்றும் நகரில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தொற்று காலத்தில் அதிகமாகவே கஷ்டப்பட்டனர். “ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் நாங்கள் ஊர் திரும்பினோம்“ என்று 40 வயதான அர்சசனா மாண்ட்வே கூறுகிறார். அவர் பீட் தாலுகாவில் உள்ள மசேவாடி கிராமத்தில் மழை பெய்தால் தண்ணீர் வீட்டிற்குள் ஒழுகும் நிலையில் உள்ள தனது குடிசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினர், கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தனர். “ஒரு மோட்டார் சைக்கிளில் 5 பேர் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது? ஆனால், நாங்கள் அவ்வாறு பயணம் செய்தோம். ஊரடங்குக்குப்பின்னர் நாங்கள் வருமானமின்றி கஷ்டப்பட்டோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அர்ச்சனா, அவரது கணவர் சிந்தாமணி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் அக்ஷய் (18), விஷால் (15) மற்றும் மகேஷ் (12) ஆகிய மூன்று பேருடன் ஔரங்காபாத் நகரில் வசித்து வந்தார். சிந்தாமணி டிரக் டிரைவராக இருந்தார். அர்ச்சனா எம்ராய்டரி வேலைகள் செய்து வந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மாதமொன்றுக்கு ரூ.12 ஆயிரம் சம்பாதித்தனர். “நாங்கள் ஔரங்காபாத்தில் 5 ஆண்டுகளும், புனேவில் 10 ஆண்டுகளும் அதற்கு முன்னர் வசித்தோம். இவர் எப்போது டிரக் ஓட்டிவந்தார்“ என்று அர்ச்சனா கூறுகிறார்.
மசேவாடியில் சிந்தாமணி வேறு மாதிரி உணர்ந்திருக்கிறார். “அவர் அதற்கு முன்னர் வயல்களில் வேலை செய்தது இல்லை. அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரால் சமாளிக்க முடியவில்லை. நான் வேளாண் கூலி வேலைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவை அதிகம் கிடைக்கவில்லை“ என்று அர்ச்சனா கூறுகிறார்.
வேலையின்றி வீட்டில் உள்ள சிந்தாமணியின் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அவரின் குழந்தைகள் மற்றும் அவர்களின் கல்வி குறித்து மிகவும் வருந்தினார். “அவர் ஒன்றுக்கும் உதவாதவராக இருக்கிறோம் என்று எண்ணினார்“ என்று அர்ச்சனா கூறுகிறார். “எங்கள் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தபோது, அதற்கு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரது சுயமரியாதையும் குறைந்து, அவர் மன அழுத்தத்தில் விழுந்தார்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒரு நாள் மாலை அர்ச்சனா வீடு திரும்பியபோது அவர்கள் வீட்டின் தகரக்கூரையில் அவரது கணவர் தூக்கு மாட்டியிருந்ததை பார்த்தார். ஒராண்டாவிட்டது, அவரே சம்பாத்தித்து வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்கிறார். “நான் மிகவும் சிரமப்பட்டு, வயலில் வேலை செய்து வாரத்திற்கு ரூ.800 சம்பாதிக்கிறேன். ஆனால், மீண்டும் ஔரங்காபாத் செல்வது குறித்து நான் நினைத்து பார்க்கவில்லை“ என்று அவர் கூறுகிறார். நான் தனியாக நகரில் சமாளிக்க முடியாது. அவர் இருந்தபோது பிரச்னையின்றி இருந்தது. கிராமத்தில் எனக்கு உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அர்ச்சனாவும், அவரது குடும்பத்தினரும் அவரது குடிசையில் இருந்து சென்றுவிடவேண்டும் விரும்புகின்றனர். “நான் ஒவ்வொரு முறை அந்த இடத்தில் வரும்போது, அவரை அன்று பார்த்த நிலைதான் என் கண் முன்னே தோன்றுகிறது“ என்று வருத்தத்துடன் கூறுகிறார்.
ஆனால் அவருக்கு புதிய வீடு கிடைக்கவில்லை. உள்ளூர் பள்ளியில் படித்த அவரது குழந்தைகள் தொடர்ந்து படிக்க முடியுமா என்பது அவருக்கு தெரியவில்லை. “அவர்களுக்கு எவ்வாறு பள்ளிக்கட்டணம் செலுத்துவது என்று எனக்கு தெரியவில்லை“ என்று அவர் கூறுகிறார்.
அர்ச்சனாவின் சகோதரர் அவரின் மூன்று மகன்களும், ஆன்லைனில் படிப்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்தார். “ஆனால், ஆன்லைனில் படிப்பது சிரமமாக உள்ளது“ என்று பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மகன் அக்ஷய் கூறுகிறார். அவருக்கு இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது விருப்பம். “கிராமத்தில் ஸ்மார்ட்போனுக்கான இணைய வசதியும் நன்றாக கிடைப்பதில்லை. நான் என் நண்பர் வீட்டிற்கு சென்று அவர்களின் புத்தங்களை பயன்படுத்தி படிப்பேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டு இறந்த பின்னர் அக்ஷய் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனாஜி ஹெட்டாக்லே, பாலாஜி காணாமல் போன அதிர்ச்சியில் இருந்து மீண்டும வர முயற்சி செய்கிறார். “எனது சகோதரர் இல்லாமல் இருக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார். மேலும் பேச மறுக்கிறார்.
பாபாசாகேப் மற்றும் சங்கிதா ஆகிய இருவரும், பாலாஜியை கண்டுபிடிப்பதில் அவர்களால் முடிந்த முயற்சிகளை செய்து வருகின்றார்கள். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. “நாங்கள் பீட் மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்கள் மகன் காணாமல் போனது விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்“ என்று பாபாசாகேப் கூறுகிறார். “எங்களிடம் சிறிதளவு பணமே உள்ளது. அதனால், எங்களால் பேலாகவிக்கு அடிக்கடி செல்ல முடியாது“ என்று அவர்கள் வருத்தமாக கூறுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் மக்களுக்கு வழக்கமான நாட்களில் கூட காவல்துறை புகார்களில் நடவடிக்கை தாமதமாவேதான் இருக்கும். இந்த தொற்று, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தம் மற்றும் பணமில்லாதது எல்லாம் சேர்ந்து அதை மேலும் கடினமாக்கிவிட்டது.
முதலில் டிசம்பர் மாதத்தில் சென்று வந்த பின்னர், பாபாசாகேப் மற்றும் சங்கிதா பாலாஜியை தேடி மீண்டும் சென்றனர். அப்போது அவர்களின் ஆடுகளில் பத்தை விற்று ரூ.60 ஆயிரம் பெற்றனர். அத்தொகையை அந்த பயணத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர். “நாங்கள் மொத்தம் 1,300 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தோம்“ என்று பாபாசாகேப் கூறுகிறார். அவர்கள் சென்ற வாடகை வாகனத்தின் மீட்டரில் இருந்து இந்த கணக்கை கவனித்துள்ளார். “எங்களிடம் இன்னும் கொஞ்சம் பணம் உள்ளது. ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு வராது“ என்று அவர் கூறுகிறார்.
இந்தாண்டு கரும்பு வெட்டும் பருவ காலம் நவம்பர் மாத்தில் துவங்கும். பாபாசாகேப்பின் தாய் இப்போதும் உடல் நலன் குன்றியுள்ளார். அவரும், சங்கீதாவும் கரும்பு வெட்டுவதற்கு செல்ல வேண்டும். அவர்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும். “நாங்கள் எங்களின் மற்ற குழந்தைகளை கவனிக்க வேண்டும்“ என்று பாபாசாகேப் கூறுகிறார்.
இந்த செய்தி புலிட்சர் மையம் வழியாக நிருபருக்கு கிடைத்த சுதந்திர இதழியல் மானியத்தில் மூலம் சேகரிக்கப்பட்டது.
தமிழில்: பிரியதர்சினி R.