எதற்காக அதிகம் கவலைப்படுவது என ராஜிவ் குமார் ஓஜாவிற்குத் தெரியவில்லை: நல்ல பயிர்களை அறுவடை செய்வதா அல்லது அவற்றை விற்பதா. “உங்களுக்கு நகைப்பாக இருக்கலாம், பயிர் காலத்தில் நல்ல அறுவடை பெற்ற பிறகு தான் எனக்கு பிரச்னையே தொடங்கியது,” என்று பீகாரின் வடக்கு மத்திய கிராமமான சவுமுக்கில் தனது பாழடைந்த வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி அவர் சொன்னார்.
47 வயதாகும் ஓஜா முசாஃபர்பூர் மாவட்டம் போச்சஹா தாலுக்காவில் உள்ள கிராமத்தில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் சம்பா பருவத்தில் (ஜூன்-நவம்பர்) நெல் பயிரிடுகிறார், குறுவை காலத்தில் (டிசம்பர்-மார்ச்) கோதுமை, சோளம் பயிரிடுகிறார். “நல்ல அறுவடைக்கு பருவநிலை, நீர், உழைப்பு மற்றும் பல விஷயங்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்,” என்று என்னிடம் 2020 நவம்பரில் அவர் தெரிவித்தார். “இதற்கு பிறகும் சந்தை இல்லை. என் விளைபொருட்களை கிராமத்தில் உள்ள தரகரிடம், அவர் நிர்ணயிக்கும் விலைக்கு விற்க வேண்டி உள்ளது.” அந்த தரகர் தரகுத் தொகையைப் பெற்றுக்கொண்டு மொத்த வர்த்தகரிடம் விற்றுவிடுவார்.
2019ஆம் ஆண்டு ஓஜா ஒரு குவிண்டால் நெல்லை ரூ.1,100 விற்றுள்ளார். இது அப்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) ரூ.1,815 விடவும் 39 சதவீதம் குறைவாகும். “எனக்கு வேறு வாய்ப்பில்லை. தரகர்கள் எப்போதும் குறைந்த விலைக்கே வாங்குகின்றனர், எங்களால் [விற்பதற்கு] வேறு எங்கும் செல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே லாபம் கிடைப்பதும் கடினமாகிறது,” என்கிறார் அவர்.
பீகாரில் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட ஒரு விவசாயி ரூ.20,000 முதலீடு செய்ய வேண்டும். “ஒரு ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்து 20-25 குவிண்டால் பெறுகிறேன். குவிண்டால் 1,100 ரூபாய் என்றால், ஆறுமாத கடின உழைப்பிற்குப் பிறகு, லாபம் [ஏக்கருக்கு] 2,000-7,000 வரைதான் கிடைக்கும். இது நல்ல தொழில் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
குறிப்பாக 2006ஆம் ஆண்டு பீகார் வேளாண் உற்பத்தி சந்தை சட்டம், 1960ஐ மாநில அரசு திரும்பப் பெற்றதால் ஓஜாவைப் போன்று பீகாரில் உள்ள பல விவசாயிகளும் தங்களின் பயிர்களுக்கு நல்ல விலை பெறுவதற்கு போராடி வருகின்றனர். அதனுடன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் (ஏபிஎம்சி) மண்டி முறையும் ஒழிக்கப்பட்டுவிட்டது.








