பல பள்ளிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்த அதிகாரியிடம் இருந்து பளபளக்கும் ஒரு பைசா நாணயத்தை பரிசாக வாங்க அவர் மேடையிலிருந்தார். இது நடந்தது பஞ்சாபில், 1939ம் ஆண்டில். அவருக்கு 11 வயது. மூன்றாம் வகுப்பு படித்தார். வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். அதிகாரி அவரின் தலையில் தட்டிக் கொடுத்து, ‘பிரிட்டன் வாழ்க, ஹிட்லர் ஒழிக’ என கோஷமிட சொன்னார். இளம் பகத்சிங்காக இருந்தவர் பார்வையாளர்களை நோக்கிப் பார்த்தார். பிறகு கோஷமிட்டார்: “பிரிட்டன் ஒழிக, இந்துஸ்தான் வாழ்க.”
விளைவுகள் உடனடியாக நேர்ந்தன. அதிகாரியால் அப்போதே தாக்கப்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியிலிருந்து வெளியே எறியப்பட்டார். பிற மாணவர்கள் அதிர்ந்து போய் அமைதியாக பார்த்தனர். பின்னர் ஓடி விட்டனர். உள்ளூர் பள்ளிகளின் பொறுப்பிலிருந்த - இன்று நாம் ஒன்றிய கல்வி அதிகாரி என அழைப்பவருக்கு நிகரான - அதிகாரி, துணை ஆணையரின் ஒப்புதலோடு ஓர் அறிவிக்கையை வெளியிட்டார். அவரின் வெளியேற்றத்தை கடிதம் உறுதிபடுத்தியது. ‘ஆபத்தானவர்’, ‘புரட்சியாளர்’ என அக்கடிதம் 11 வயதிலேயே அவரை விவரித்திருந்தது.
இதன் அர்த்தம் எந்த பள்ளியும் பகத் சிங் ஜக்கியனை அனுமதிக்காது என்பதுதான். அச்சமயத்தில் அதிக பள்ளிகளும் இல்லை. பெற்றோர் மட்டுமில்லாது பலரும் முடிவை மாற்றிக் கொள்ளும்படி அதிகாரிகளிடம் கெஞ்சினர். நிறைய தொடர்புகள் கொண்ட குலாம் முஸ்தபா என்னும் ஜமீந்தார் கடுமையான முயற்சிகள் அவர் தரப்பில் எடுத்தார். ஆனால் அரசின் எடுபிடிகள் கடும் கோபத்தில் இருந்தனர். அவர்களுக்கு மேலிருந்தவரை ஒரு சிறுவன் அவமதித்துவிட்டான். பகத் சிங் ஜக்கியான் முறையான கல்விக்கு மீண்டும் திரும்பவில்லை. ஆனாலும் அவரின் வாழ்க்கை வண்ணமயமாகவும் அசாதாரணமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
அப்போதும் சரி, 93 வயதாகும் இப்போதும் சரி கடுமையான வாழ்க்கைப் பள்ளியில் நட்சத்திர மாணவராகவே அவர் இருக்கிறார்.
எந்த தடையுமில்லை என்றாலும் அவர் கவனிக்கப்படாமல் இல்லை. முதலில் அவர் குடும்ப நிலத்தில் வேலை பார்க்கச் சென்றபோது கூட அவரின் புகழ் பரவியது. பஞ்சாபின் தலைமறைவு போராளிக் குழுக்கள் அவரை தொடர்பு கொள்ள ஆரம்பித்தன. கிர்த்தி கட்சி என்கிற அமைப்பில் அவர் சேர்ந்தார். 1914-15-ல் நேர்ந்த கதார் கலகத்தை நடத்திய கதார் கட்சியின் கிளை அமைப்பு அது.
கிர்த்தி கட்சியில் புரட்சிகர ரஷியாவுக்கு சென்று ராணுவ மற்றும் கருத்தியல் பயிற்சி பெற்ற பலர் இருந்தனர். கதார் இயக்கம் முறியடிக்கப்பட்ட பஞ்சாபுக்கு அவர்கள் திரும்பிய பிறகு கிர்த்தி என்கிற பத்திரிகையை தொடங்கினர். அதில் பங்களித்த தனித்துவம் வாய்ந்த பலரில் பழம்பெரும் பகத் சிங்கும் ஒருவர். மே 27, 1927-ல் கைது செய்யப்படுவதற்கு முன்னான மூன்று மாதங்களுக்கு கிர்த்தி பத்திரிகையை பகத் சிங்தான் நடத்தினார். 1942ம் ஆண்டின் மே மாதத்தில் கிர்த்தி கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தது.
ஆனால் பகத் சிங்கை நினைவுகூறும் வகையில் பெயர் சூட்டப்படவில்லை என சொல்லும் ஜக்கியான், “அவரை பற்றிய பாடல்களை பலர் பாட கேட்டு நான் வளர்ந்திருக்கிறேன்,” என்கிறார். பகத் சிங் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட 1931ம் ஆண்டு காலகட்டத்தில் பாடப்பட்ட பாடல்களின் ஒன்றின் சில வார்த்தைகளை கூட அவர் பாடிக் காட்டுகிறார். அச்சமயத்தில் ஜக்கியனுக்கு மூன்று வயதுதான் ஆகியிருந்தது.
பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இளம் பகத் சிங் ஜக்கியான் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்களுக்கு தகவல் கொடுக்கும் தூதராக பணிபுரிந்தார். அவரின் குடும்பத்துக்கு இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் வேலை பார்த்ததை தாண்டி, “அவர்கள் என்ன கேட்டாலும் நான் செய்து கொடுத்தேன்,” என்கிறார். பதின்வயதில் இருக்கும்போது கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர்களுக்கு இருட்டில் சிறிய, பிரிக்கப்பட்ட, கொடுமையாக கனக்கும் அச்சு இயந்திரத்தை இரண்டு சாக்குகளில் புரட்சியாளர்களின் ரகசிய முகாமுக்கு கொண்டு சென்றிருக்கிறார். விடுதலைக்கான காலாட்படை வீரராக பணிபுரிந்திருக்கிறார்.
“அந்த பக்கத்திலிருந்து அவர்கள் கனமான பையில் உணவையும் பிற பொருட்களையும் அதே அளவு தூரம் நடந்து சென்று பிற போராளிகளுக்கு கொடுக்குமாறு கொடுப்பார்கள்.” அவரின் குடும்பமும் தலைமறைவு போராளிகளுக்கு அடைக்கலமும் உணவும் கொடுத்திருக்கிறது.
அவர் கொண்டு சென்ற இயந்திரத்துக்கு பெயர் ‘உதாரா அச்சு இயந்திரம்’. பிரிக்கப்பட்ட அச்சு இயந்திரமா அல்லது ஒரு இயந்திரத்தின் முக்கியமான பகுதிகளா அல்லது பிரதியெடுக்கும் இயந்திரமா என தெளிவாக தெரியவில்லை. “அதில் பெரிய கனமான வார்ப்பு இரும்பு துண்டுகள் இருந்தன” என மட்டும் நினைவுகூர்கிறார். தூது சென்ற காலத்தை பெரிய பாதிப்பு ஏதுமின்றி அவர் கடந்தார். எந்த ஆபத்துக்கும் அபாயத்துக்கும் அவர் தயங்கியதில்லை. அடுத்தடுத்த காலகட்டங்களில் “காவலர்களுக்கு நான் அஞ்சியதை விட அவர்கள் எனக்கு அஞ்சியதே அதிகம்,” எனவும் பெருமை கொள்கிறார்.
*****
பிறகு பிரிவினை நேர்ந்தது.
அந்த காலகட்டத்தை பற்றி பேசும்போது பகத் சிங் ஜக்கியான் உணர்ச்சிவசப்படுகிறார். அச்சமயத்தில் இருந்த குழப்பம் மற்றும் படுகொலைகள் பற்றி சொல்கையில் வந்த கண்ணீரை கட்டுப்படுத்த திணறினார் அந்த பெரிய மனிதர். “எல்லையை தாண்டச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இங்கும் பல இடங்களில் படுகொலைகள் நடந்தன.”
“நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிம்ப்லி கிராமத்தில் 250 இஸ்லாமியர்கள் இரண்டு இரவுகள் மற்றும் ஒரு நாளில் கொல்லப்பட்டனர்,” என்கிறார் பள்ளி ஆசிரியரும் எழுத்தாளரும் உள்ளூர் வரலாற்றாய்வாளருமான அஜ்மர் சித்து. பகத் சிங் ஜக்கியானை நேர்காணல் செய்கையில் உடனிருந்த சித்து, “கர்ஷாங்கர் காவல் நிலையத்தின் போலீஸ்காரர் 101 மரணங்களை மட்டுமே பதிவு செய்தார்,” என்றார்.
”ஆகஸ்ட் 1947-ல் இங்கு இரு வகை மக்கள் இருந்தனர். ஒரு வகை இஸ்லாமியர்களை கொன்று கொண்டிருந்தனர். இன்னொரு வகை அவர்களை காப்பாற்ற முயன்று கொண்டிருந்தனர்,” என்கிறார் பகத் சிங்.
“என் நிலத்துக்கு அருகே ஓர் இளைஞனை சுட்டுக் கொன்றனர். அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய அவரின் சகோதரருக்கு நாங்கள் உதவி செய்தோம். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருந்தார். எல்லை கடக்கும் கூட்டத்துடன் சென்றார். சடலத்தை எங்களின் சொந்த நிலத்தில் புதைத்தோம். அது ஒரு நல்ல ஆகஸ்ட் 15 ஆக இருக்கவில்லை,” என்றார் அவர்.
எல்லையை கடக்க முயன்று வெற்றி பெற்றவர்களில் ஒருவர் குலாம் முஸ்தபா. அவர்தான் பள்ளியில் பகத் சிங் ஜக்கியானுக்கு ஆதரவாக நின்றவர்.
“எனினும் முஸ்தபாவின் மகன் அப்துல் ரகுமான் கொஞ்ச காலத்துக்கு இங்குதான் இருந்தார். பெரும் ஆபத்தில் இருந்தார்,” என தொடர்கிறார் பகத் சிங். “என் குடும்பம் ரகுமானை ரகசியமாக எங்களின் வீட்டுக்கு ஒரு இரவில் அழைத்து வந்தனர். அவரிடம் ஒரு குதிரை இருந்தது.”
”இஸ்லாமியர்களை வேட்டையாடி கொண்டிருந்த கும்பல்களுக்கு இந்த தகவல் தெரிந்துவிட்டது. “எனவே ஒருநாள் இரவில், நண்பர்கள் மற்றும் தோழர்களின் உதவியோடு அவரை இங்கிருந்து ரகசியமாக வெளியே கொண்டு சென்றோம். எந்த ஆபத்துமின்றி எல்லையை அவர் கடக்க முடிந்தது.” பிறகு, அவரின் குதிரையை கூட எல்லை தாண்டி சென்று அவரிடம் சேர்ப்பித்தனர். கிராமத்திலிருந்த நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் முஸ்தபா, ஜக்கியானுக்கு நன்றி தெரிவித்தார். ஒருநாள் இந்தியாவுக்கு வருகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். “ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை.”
பிரிவினை பற்றி பேசுவது பகத் சிங்கை சோகமாக்குகிறது. மீண்டும் பேசுவதற்கு சில கணங்கள் எடுத்துக் கொண்டார். ஹோஷியர்பூரின் பிராம்பூர் கிராமத்தில் விடுதலைப் போராட்டம் பற்றி நடந்த ஒரு மாநாட்டை காவல்துறை தடுத்ததில் 17 நாட்கள் அவர் சிறை சென்றார்.
1948ம் ஆண்டில் லால் கம்யூனிஸ்ட் கட்சி இந்து யூனியன் என்கிற அமைப்பில் அவர் இணைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த கிர்த்தி கட்சியிலிருந்து வெளியேறிய அமைப்பு அது.
ஆனால் அச்சமயத்தில் தெலங்கானா முதலிய இடங்களில் கம்யூனிச எழுச்சி நேர்ந்ததால், 1948 முதல் 1951ம் ஆண்டு வரை கம்யூனிச குழுக்கள் தடைசெய்யப்பட்டன. பகத் சிங் ஜக்கியான் மீண்டும் தன்னுடைய பாத்திரத்துக்கு திரும்பினார். பகலில் விவசாயி, இரவில் ரகசிய தூதர். தலைமறைவு செயற்பாட்டாளர்களுக்கு அடைக்கலம் தருபவராகவும் இருந்தார். அவரே ஒரு வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
1952ம் ஆண்டில் லால் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது. 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது சிபிஐஎம்மில் இணைந்தவர், அதிலேயே நீடிக்கிறார்.
அந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிலம் முதலிய பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார். மேம்பாட்டு வரிக்கு எதிரான போராட்டம் நடந்த 1959ம் ஆண்டில் பகத் சிங் கைது செய்யப்பட்டார். கண்டி பகுதி (தற்போது பஞ்சாபின் வடகிழக்கு எல்லையில் இருக்கிறது) விவசாயிகளை ஒருங்கிணைத்ததுதான் அவரின் குற்றம். கோபம் கொண்ட பிரதாப் சிங் கைரோன்னின் அரசு, அவரின் எருமை மாட்டையும் தீவனம் வெட்டும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து ஏலம் விட்டு அவரை தண்டித்தது. ஆனால் அந்த இரண்டையும் கிராமத்தில் வசிக்கும் ஒருவரே 11 ரூபாய்க்கு வாங்கி மீண்டும் அவரிடம் கொடுத்தார்.
இப்போராட்டத்தின்போது லூதியானா சிறையில் மூன்று மாதங்களை கழித்தார் பகத் சிங். அதே வருடத்தில் பிறகொரு மூன்று மாதங்களை பாடியாலா சிறையில் கழித்தார்.
அவர் வாழ்க்கை முழுவதும் வசித்த கிராமம் முதலில் சேரிகளாக இருந்தது. சேரிக்கு இந்தி வார்த்தை ஜக்கி. அதனால்தான் அவர் ஜக்கியான் என அழைக்கப்பட்டார். எனவேதான் அவர் பெயர் பகத் சிங் ஜக்கியானானது. தற்போது அப்பகுதி ராம்கர் கிராமத்தின் கர்ஷங்கர் தாலுகாவில் இருக்கிறது.
1975ம் ஆண்டில் நெருக்கடி நிலையை எதிர்த்து மீண்டும் ஒரு வருட காலம் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றார். மக்களை ஒருங்கிணைத்தார். தேவைப்படுகையில் தூதராக செயல்பட்டார். நெருக்கடி நிலைக்கு எதிரான பிரசுரங்களை விநியோகித்தார்.
எல்லா வருடங்களிலும் அவரின் கிராமத்திலும் பகுதியிலும் இருந்துதான் அவர் இயங்கினார். மூன்றாம் வகுப்பை கடக்காத மனிதர், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஆர்வம் செலுத்தினார். அவர் உதவிய பலர் நல்ல நிலைக்கு வந்தனர். பலர் அரசு வேலைகளுக்கே கூட சென்றனர்.
*****
1990: பகத் சிங்கின் குடும்பத்தினர், பயங்கரத்துக்கும் ஆழ்துளைக் கிணறுக்கும் இடையில் சில நிமிட தூரமே இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தனர். அவர்களின் வீட்டிலிருந்து 400 அடி தூரத்தில் இருந்த ஆழ்துளைக் கிணறில் பொறிக்கப்பட்டிருந்த அவரின் பெயரை கண்டுபிடித்து பெருமளவில் ஆயுதம் கொண்ட காலிஸ்தானி தாக்குதல் குழு அவரின் நிலத்தில் நின்றது. அவர்கள் அங்கு பதுங்கியிருந்தார்கள். ஆனால் பதுங்கியிருந்தது தெரிந்தது.
1984லிருந்து 1993ம் ஆண்டு வரை பஞ்சாபை பயங்கரம் சூழ்ந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் சிபிஐ, சிபிஐஎம் மற்றும் சிபிஐஎம்எல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனெனில் அவர்கள் காலிஸ்தானிகளுக்கு எதிராக இருந்தனர். அந்த காலகட்டத்தில் பகத் சிங், கொல்லப்படுவோரின் பட்டியலில் இருந்தார்.
எனினும் 1990ம் ஆண்டில்தான் அத்தகைய பட்டியலில் இருப்பதன் தாக்கத்தை கொஞ்சமாகவேனும் அவர் உணர்ந்தார். அவரின் மூன்று மகன்கள் காவல்துறை கொடுத்த துப்பாக்கிகளுடன் கூரையில் இருந்தனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக் கொள்ள அரசாங்கம் அனுமதித்திருந்த காலகட்டம் அது.
“எங்களுக்கு அவர்கள் கொடுத்திருந்த துப்பாக்கிகள் நல்ல துப்பாக்கிகள் அல்ல. எனவே நான் ஒரு வேட்டை துப்பாக்கி வாங்கினேன். இன்னொரு துப்பாக்கி கூட எனக்கென வாங்கிக் கொண்டேன்,” என்கிறார் பகத் சிங் அந்த காலத்தை நினைவுகூர்ந்து.
அவரின் மகனான 50 வயது பரம்ஜித் சொல்கையில், “ஒருமுறை என் அப்பாவுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து வந்திருந்த மிரட்டல் கடிதத்தை நான் படித்தேன்: ‘உன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள். இல்லையெனில் உன் மொத்த குடும்பமும் அழித்தொழிக்கப்படும்’. அதை யாரும் பார்க்காதது போல் மீண்டும் உறைக்குள் வைத்து விட்டேன். என்னுடைய அப்பா எப்படி எதிர்வினை ஆற்றுவார் என தெரிந்து கொள்ள விரும்பினேன். அவர் அமைதியாக கடிதத்தை படித்தார். பிறகு மடித்து பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். சில கணங்கள் கழித்து எங்கள் மூவரையும் கூரைக்கு அழைத்துச் சென்று எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னார். ஆனால் கடிதத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.”
1990ம் ஆண்டின் சம்பவம் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. வீரமான இக்குடும்பம் இறுதி வரை போராடும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் ஏகே - 47 ரக துப்பாக்கிகளும் பிற கொலை ஆயுதங்களையும் கொண்ட பயிற்சி பெற்ற தாக்குதல் குழு அவர்களை அச்சுறுத்த முடியாது என்பதிலும் சந்தேகம் இல்லை.
அச்சமயத்தில்தான் தீவிரவாதிகளில் ஒருவன் ஆழ்துளைக் கிணற்றில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை கண்டுபிடித்தான். “அவன் மற்றவர்களிடம் திரும்பி, ‘நம் இலக்கு பகத் சிங் ஜக்கியானாக இருந்தால், நான் ஒன்றும் செய்ய முடியாது,’ என்றான்,” என்கிறார் விடுதலை போராட்ட வீரர். தாக்குதல் குழு தாக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு நிலத்திலிருந்து கிளம்பிவிட்டது.
தீவிரவாதிகளில் ஒருவரது தம்பிக்கு கிராமத்தில் பகத் சிங் உதவியிருந்தது பிறகு தெரிய வந்தது. அவருக்கு கிராமத்தின் கணக்காளராக அரசு வேலை கூட கிடைத்தது. “அவர்கள் பின்வாங்கிச் சென்ற இரண்டு வருடங்களுக்கு பிறகு, அந்த மூத்த சகோதரர் எனக்கு முன்னெச்சரிக்கைகளும் தகவல்களும் கொடுப்பவராக ஆனார்,” என்கிறார் பகத் சிங் புன்னகைத்தபடி. “எங்கே எப்போது செல்ல வேண்டுமென கூறுவார்.” அவரின் மீதான தாக்குதலிலிருந்து தப்பிக்க அவை உதவின.
அச்சம்பவத்தை பற்றி குடும்பத்தினர் பேசுகையில் பதற்றத்துடன் பேசினர். பகத் சிங்கோ அதை ஆய்வுப்பூர்வமாக நிதானத்துடன் பேசினார். பிரிவினை பற்றி பேசும்போதுதான் அவர் உணர்ச்சி மிகுந்திருந்தார். மனைவி அச்சமயத்தில் எப்படி இருந்தார்? “நாங்கள் தாக்குதலை எதிர்கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது,” என்கிறார் 78 வயது குர்தேவ் கவுர் நிதானமாக. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த அவர் சொல்கையில், “என்னுடைய மகன்கள் உறுதியாக இருந்தனர். எனக்கு எந்த பயமும் இல்லை. கிராமமும் எங்களுக்கு ஆதரவாக இருந்தது,” என்கிறார்.
பகத் சிங், குர்தேவ் கவுரை 1961ம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் முதல் மனைவி, 1944ம் ஆண்டில் திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இறந்துவிட்டார். அவர்களின் இரு மகள்களும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். குர்தேவ் கவுருக்கும் அவருக்கும் மூன்று மகன்கள். மூத்த மகன் ஜஸ்வீர் சிங் 2011ம் ஆண்டில் தன் 47 வயதில் இறந்து போனார். மற்ற இருவரில் 55 வயது குல்தீப் சிங் பிரிட்டனில் இருக்கிறார். பரம்ஜித் அவர்களுடன் இருக்கிறார்.
இன்னும் அவரிடம் வேட்டை துப்பாக்கி இருக்கிறதா? “இல்லை. அதனால் இப்போது என்ன பயன் இருக்கிறது? ஒரு குழந்தை கூட என் கையிலிருந்து அதை பறித்து விடும்,” என்கிறார் சிரித்தபடி அந்த 93 வயது முதியவர்.
1992ம் ஆண்டின் சட்டசபை தேர்தல்கள் மீண்டும் ஆபத்தை அவரின் வாசலுக்கு கொண்டு வந்தன. ஒன்றிய அரசு பஞ்சாபில் தேர்தல் நடத்த உறுதி பூண்டிருந்தது. காலிஸ்தானிகள் தேர்தல்களை தடுப்பதில் உறுதியாக இருந்தனர். வேட்பாளர்களை கொல்லத் தொடங்கினர். இந்திய தேர்தல் சட்ட த்தின்படி, பரப்புரையின்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியை சேர்ந்த வேட்பாளர் கொல்லப்பட்டால் தேர்தல் ஒத்தி வைக்கப்படும். அல்லது மீண்டும் நடத்தப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் பெரும் அபாயத்தில் இருந்தார்.
ஒப்பிட முடியாதளவுக்கு வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதால் ஜூன் 1991-ல் நடக்கவிருந்த தேர்தல்கள் ஒத்தி போடப்பட்டன. ஏசியன் சர்வே பத்திரிகையில் வெளியான குர்ஹார்பால் சிங் ஆய்வறிக்கையின்படி அந்த வருடத்தின் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை, “24 சட்டசபை மற்றும் பாராளுமன்ற வேட்பாளர்கள் கொல்லப்பட்டனர்; இரண்டு ரயில்களில் வந்த 76 பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர்; தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு பஞ்சாப் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.”
தீவிரவாதிகளில் இலக்கு தெளிவாக இருந்தது. வேட்பாளர்களை கொல்ல வேண்டும். அரசு, வேட்பாளர்களுக்கு அதிக பாதுகாப்பை அளித்தது. கர்ஷங்கர் தொகுதியிலிருந்து போட்டியிட்ட பகத் சிங் ஜக்கியானும் அவர்களில் ஒருவர். அகாலி தள்ளின் எல்லா குழுக்களும் தேர்தலை புறக்கணித்தன. “ ஒவ்வொரு வேட்பாளருக்கும் 32 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அளிக்கப்பட்டது. பிரபலமான தலைவர்களுக்கு அந்த எண்ணிக்கை 50ஐயும் கூட தாண்டியது.” ஆனால் இவை யாவும் தேர்தல் காலம் வரை மட்டும்தான்.
பகத் சிங்குக்கான 32 பேர் பாதுகாப்பு குழு எப்படி இருந்தது? “18 பாதுகாப்பு வீரர்கள் என்னுடைய கட்சி அலுவலகத்தில் இருந்தனர். இன்னொரு 12 பேர் என்னுடன் எப்போதும் நான் செல்லும் இடமெங்கும் வந்தனர். மிச்ச இரண்டு பேர் என் வீட்டில் எப்போதும் இருந்தனர்,” என்கிறார். தேர்தலுக்கு முந்தைய வருடங்களில் தீவிரவாதிகளின் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இருந்தால் அவருக்கு இருந்த அபாயம் பெரிது. ஆனாலும் அவருக்கு பிரச்சினை ஏதும் நேரவில்லை. ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை உள்ளடக்கி, பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீவிரவாதிகளை எதிர்கொண்டதில் தேர்தல் அதிக மரணங்களின்றி நடந்தது.
“அவர் 1992ம் தேர்தலில் போட்டியிட்டார்,” என்னும் பரம்ஜித், “அப்படி செய்கையில் காலிஸ்தானிகளின் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்பி பிற இளைய தோழர்களை காப்பாற்ற முடியுமென நம்பினார்,” என்கிறார்.
பகத் சிங் ஒரு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றார். ஆனால் பிற இடங்களில் அவர் வென்றார். 1957ம் ஆண்டில் ராம்கர் மற்றும் சக் குஜ்ஜ்ரான் ஆகிய இரு கிராமங்களின் தலையாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை தலையாரியாக இருந்தார். கடைசியாக 1998ம் ஆண்டில் அப்பதவியை அவர் வகித்தார்.
1978ம் ஆண்டில் நவான்ஷாரின் (தற்போது ஷாகீத் பகத் சிங் நகர்) கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குநராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகாலி தள்ளுடன் இருந்த செல்வாக்கான நிலப்பிரபு சன்சார் சிங்கை தோற்கடித்து அந்த பதவிக்கு அவர் வந்தார். 1998ம் ஆண்டில் மீண்டும் அப்பதவிக்கு எதிர்ப்பின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*****
பள்ளியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு எண்பது வருடங்களாக பகத் சிங் ஜக்கியான் அரசியலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டங்களை பற்றி எல்லாவற்றையும் அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அவரது கட்சியின் தேசிய கட்டுப்பாடு வாரியத்தில் அவர் இருக்கிறார். ஜலந்தரில் தேஷ் பகத் யாத்கர் நினைவு மண்டபத்தை இயக்கும் அறக்கட்டளையில் ஓர் அறங்காவலராகவும் இருக்கிறார். பிற அமைப்புகளை காட்டிலும் அவ்வமைப்பு பஞ்சாபின் புரட்சிகர இயக்கங்களை நினைவுகூர்ந்து பதிவு செய்கிறது. அந்த அறக்கட்டளையையே காதர் இயக்கத்தின் புரட்சியாளர்கள்தான் உருவாக்கினார்கள்.
“இன்றும் கூட, தில்லி எல்லையின் விவசாயப் போராட்டக் களங்களில் கலந்து கொள்ள இப்பகுதிகளில் இருந்து கிளம்பிச் செல்பவர்கள், முதலில் தோழர் பகத் சிங் வீட்டுக்கு சென்று, அவரின் ஆசிர்வாதம் வாங்கிய பின்தான் செல்கிறார்கள்,” என்கிறார் அவரின் நண்பர் தர்ஷன் சிங் மட்டு. சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினரான மட்டு சொல்கையில், “முன்பிருந்ததை போல இயங்க அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் அவரின் உறுதியும் தீவிரமும் எப்போதும் போல்தான் இருக்கிறது. இப்போதும் கூட ரம்கர் மற்றும் கர்ஷங்கர் ஆகிய பகுதிகளில் அரிசி, எண்ணெய், பருப்பு, பிற பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை, அவருடன் பங்களிப்புடன் சேர்த்து ஷாஜகான்பூரில் முகாமிட்டு போராடும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைக்கும் முயற்சியில் பங்குபெற்றிருக்கிறார்.”
நாங்கள் கிளம்புகையில், எங்களை வழியனுப்பவென, நடக்க உதவும் பொறியுடன் அவர் வேகமாக நகர்ந்து வருகிறார். அவர் போராடி சுதந்திரம் பெற்று கொடுத்த நாடு, இப்போதிருக்கும் சூழல் தனக்கு பிடிக்கவில்லை என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த பகத் சிங் ஜக்கியான் விரும்பினார். ஆட்சியில் இருப்பவரில் எவரும், “விடுதலை போராட்டத்தில் பங்கு பெறவில்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் சுதந்திர போராட்டத்தில் இடம்பெறவே இல்லை. ஒருவர் கூட இருக்கவில்லை. அவர்களை தடுக்கவில்லை எனில் இந்த நாட்டை அழித்துவிடுவார்கள்,” என்கிறார் கவலையோடு.
பிறகு சொல்கிறார்: “ஆனால் என்னை நம்புங்கள். இந்த ஆட்சியின் சூரியனும் அஸ்தமிக்கும்.”
எழுத்தாளர் குறிப்பு: சண்டிகரின் ட்ரிப்யூனின் விஷாவ் பார்தி மற்றும் பெரும் புரட்சியாளரான ஷாஹீத் பகத் சிங்கின் உறவினரான பேராசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோரின் விலைமதிப்பற்ற உதவிக்கு நன்றி. மேலும் அஜ்மெர் சித்துவின் உதவிக்கும் நன்றி.
தமிழில்: ராஜசங்கீதன்