“என் ஐந்து வயது மகளுக்கு கடுமையான காய்ச்சல்“ என்று சொல்லும் ஷகீலா நிஜாமுதீன், “அவளை என் கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மருத்துவமனைக்கு செல்லக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை“ என்கிறார்.
அகமதாபாத் நகரின் சிட்டிசன் நகர் நிவாரண காலனியில் வசிக்கிறார் 30 வயதாகும் ஷகீலா. அவர் வீட்டிலிருந்தபடியே காத்தாடிகளை தயாரித்து விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். தினக்கூலிகளான ஷகீலாவும், அவரது கணவரும் ஊரடங்கால் வருமானத்தையும் மிச்சமிருந்த நம்பிக்கையையும் இழந்துள்ளனர். “சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது“ என்று என்னிடம் வீடியோ அழைப்பில் அவர் சொன்னார். ‘வீட்டிலிருந்தபடியே கைவைத்தியம் செய்துகொள்ளுங்கள்’ என்கிறார்கள். அதையும் மீறி மருத்துவமனைக்குச் செல்ல முயன்றால் மருத்துவமனை கோப்புகள், ஆவணங்கள் வேண்டும் என்று காவல்துறையினர் கேட்பார்கள். இவற்றுக்கு நான் எங்கே போவது?“ என்கிறார் ஷகீலா.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50,000க்கும் மேற்பட்டோருக்கு, 2004ஆம் ஆண்டு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கட்டிய 81 காலனிகளில் இதுவும் ஒன்று. இப்போதைய ஊரடங்கு இம்மக்களுக்கு ஒரு கொடுங்கனவாக ஆகிவிட்டிருக்கிறது.
தொலைக்காட்சித் திரையில் நடிகர் அமிதாப் பச்சன் தோன்றி ஒன்றிணைவோம், கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்போம் என்று சொல்வதையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
“வேலையை இழந்துவிட்டு எல்லோரும் வீட்டிற்குள் கைகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது எதற்காக கைக் கழுவ வேண்டும், சொல்லுங்கள்?” என கேட்கிறார் ரேஷ்மா சையத். இவர் சிட்டிசன் நகர் சமூகத் தலைவராக உள்ளார். ரேஷ்மா ஆப்பா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். 2002 கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட நரோதா பாட்டியா என்கிற இந்த மறுவாழ்வு காலனி, அகமதாபாத்தில் உள்ள 15 காலனிகளின் ஒன்று. கேரள மாநில இஸ்லாமிய நிவாரணக் குழுவின் உதவியோடு 2004ஆம் ஆண்டு இந்த காலனி கட்டப்பட்டதாக அங்குள்ள கல்லில் எழுதப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிர் பிழைத்த 40 குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் இங்கே வந்துள்ளனர்.
இப்போது இங்கு 120 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகில் உள்ள முபாரக் நகர், காசியா மஸ்ஜித் பகுதிகளில் வசிக்கின்றனர். 2002ஆம் ஆண்டிற்கு முன்பே சிறுபான்மையினர் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். கலவரத்திற்கு பிறகு சிட்டிசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்மிக்க பிரானா ‘குப்பை மலைத் தொடரின்’ அடிவாரத்தில் அமைந்துள்ளது சிட்டிசன் நகர். 1982ஆம் ஆண்டு முதல் அகமதாபாத்தின் முதன்மை குப்பைக் கிடங்காக இப்பகுதி விளங்குகிறது. 84 ஹெக்டேருக்கு மேல் விரிந்துள்ள இப்பகுதியில் 75 மீட்டர் உயரத்திற்கு மேல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. பிரானாவில் 85 லட்சம் மெட்ரிக் டன் குப்பை இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கிருந்து அடிக்கடி நச்சு புகை வெளியேறுவதும் வாடிக்கையாக இருக்கிறது.
ஓராண்டிற்குள் இங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அகமதாபாத் நகராட்சி கார்ப்பரேஷனுக்கு (AMC) கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பி ஏழு மாதங்கள் ஆகின்றன. கெடு முடிவதற்கு இன்னும் 150 நாட்களே உள்ள நிலையில் 30 இயந்திரங்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் ஒற்றை டிராமல் இயந்திரத்தைக் கொண்டு பணி நடைபெறுகிறது.
இந்த குப்பைக் குவியலிலிருந்து அவ்வப்போது ஏற்படும் தீ, எரிமலை போல பெருமளவு புகையை கக்கி சுற்றுச்சூழலை சீர்கெடுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போதெல்லாம் ஊடகங்களின் கவனம் இக்காலனியின் மீது திரும்பும். அப்போது இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்தும், இம்மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற செய்தியும் வரும். இந்த நச்சுக்காற்றை இந்நகர் மக்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிக அருகிலிருந்து சுவாசித்து வருகின்றனர்.
”இங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் சளி மற்றும் இருமல் பிரச்னைகளுக்காகத்தான் வருகின்றனர்” என்கிறார் டாக்டர் ஃபர்ஹின் சையத். இப்பகுதி மக்களுக்காக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களால் அமைக்கப்பட்டுள்ள ராஹத் சிட்டிசன் கிளினிக் மருத்துவர் இவர். “காற்று மாசுபாடு, நச்சுப் புகை வெளியேற்றம் போன்ற காரணத்தால் சுவாசப் பிரச்சனை, நுரையீரல் தொற்று போன்றவை இப்பகுதி மக்களின் பொதுவான பிரச்சனைகள். இதன் காரணமாக இக்காலனியில் டிபி நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என்கிறார் டாக்டர் ஃபர்ஹின் சையத். ஊரடங்கு தொடங்கியதும் இந்த கிளினிக் மூடப்பட்டுவிட்டது.
ரேஷ்மா ஆபாவைப் போன்ற, கொஞ்சம்கூட சுத்தமான தண்ணீர் கிடைக்கப்பெறாத சிட்டிசன் நகர் குடியிருப்பு வாசிகளிடம் அடிக்கடி கைக்கழுவுதல் போன்ற கோவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களைச் சொல்வது அபத்தமானது.
கரோனா வைரஸ் என்பது தொற்று அல்லது மரணத்தை ஏற்படுத்தும் என்ற அச்சுறுத்தலுக்கு அவர்கள் அஞ்சவில்லை. ஊரடங்கு காலத்தில் இக்காலனி வாசிகளுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை. வேலையிழந்து பசி பட்டினியில் கிடப்பதால் வறுமைக்கு தான் அவர்கள் அதிகம் அஞ்சுகின்றனர்.
“இங்குள்ள பெரும்பாலான பெண்கள் அருகில் உள்ள பிளாஸ்டிக், டெனிம், புகையிலை போன்ற சிறு சிறு தொழிற்சாலைகளில் வேலைசெய்கின்றனர்” என்கிறார் 45 வயதாகும் ரெஹனா மிர்சா. “தொழிற்சாலை வேலைகள் நிரந்தரமற்றவை. வேலை இருந்தால் அழைப்பார்கள்; இல்லாவிட்டால் வீட்டில் இருக்க வேண்டியதுதான்” என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் விதவையான ரிஹானா. இங்குள்ள புகையிலை தொழிற்சாலையில் தினக்கூலியாக 8 முதல் 10 மணி நேரம் வேலை செய்து தினமும் ரூ. 200 சம்பாதித்து வந்தார். ஊரடங்கு தொடங்குவதற்கு இருவாரங்களுக்கு முன்பே அந்த வேலை நின்றுவிட்டது. ஊரடங்கு முடியும் வரை வேறு வேலை தேட முடியாது. உணவு வாங்குவதற்கு கூட அவரிடம் காசு இல்லை.
“காய்கறி, பால், தேயிலைகள் என எதுவும் கிடைக்கவில்லை“ என்று சொல்லும் ரேஷ்மா ஆபா, “பலரும் ஒரு வாரமாக உணவின்றி தவித்து வருகின்றனர். வெளியிலிருந்து வரும் காய்கறி லாரிகளை உள்ளே வர அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அருகில் உள்ள மளிகை கடையைகூட அவர்கள் திறக்கவிடுவதில்லை. இங்கு வசிப்பவர்கள் சிறு வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தச்சு வேலை செய்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள். அவர்களால் இப்போது வெளியே சென்று பணம் சம்பாதிக்க முடியாது. வெளியிலிருந்து பணம் வருவதற்கும் வாய்ப்பில்லை. எதை உண்பது? என்ன செய்வது?” என்று கேட்கிறார்.
“நான் தினமும் ரூ. 300க்கு வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறேன். எனக்கென நிலையான வருமானம் எதுவும் கிடையாது. சவாரி சரியாக கிடைக்காவிட்டால்கூட வாடகையை கொடுத்துதான் ஆக வேண்டும். சில சமயம் பணத்திற்காக ஆலைகளில் கூட வேலை செய்வேன்“ என்கிறார் இந்த காலனியில் வசிக்கும் ஆட்டோ ஒட்டுநர்களில் ஒருவரான ஃபரூக் ஷேக். இவர் ஒரு நாளுக்கு 15 மணி நேரம் வரை ஆட்டோ ஓட்டி ரூ.600-700 வரை சம்பாதித்தாலும், கையில் 50 சதவீதம் தான் தங்கும்.
ஃபரூக் ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒரே நபர். அவர் ஊரடங்குடன், இப்பகுதியில் நிலவும் தடைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். “நாங்கள் தினமும் சம்பாதித்து சாப்பிட்டு வந்தோம். இப்போது எங்கும் போகவும் முடியாது, சம்பாதிக்கவும் முடியாது. காவல்துறையினர் எங்களை அடிக்கின்றனர்” என்று சொல்லும் அவர், “சிலரது வீட்டில் தண்ணீர் கூட கிடையாது. முகக் கவசமாவது? சுத்திகரிப்பானவது? நாங்கள் ஏழைகள். எங்களிடம் இந்த ஆடம்பர பொருட்கள் எல்லாம் கிடையாது. இப்பகுதி எப்போதுமே மாசு நிறைந்தது தான். அதனால் எப்போதும் நோய்களும், உடல் தொந்தரவுகளும் இருக்கத்தான் செய்கிறது” என்கிறார் அவர்.
அச்சுறுத்தும் அபாயகரமான இப்பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் நடக்கவில்லை. சமூகக் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களில் பணியாற்றி வரும் அகமதாபாத் பல்கலைக்கழக இளம் பேராசிரியர் அக்பர் அலி போன்றவர்களின் முயற்சியாலும், தனியார் அளிக்கும் நன்கொடைகள், நிதி உதவியாலும் 2017ஆம் ஆண்டில் ராஹத் குடிமக்கள் சிகிச்சை மையம் இங்கு தொடங்கப்பட்டது. இந்த மையமும் எளிதாக இயங்கவில்லை. சரியான மருத்துவர்களைக் கண்டறிவது, நன்கொடையாளர்கள், செல்வந்தர்களைக் கண்டறிந்து பணம் பெறுவதில் அக்பர் அலி பல போராட்டங்களை சந்தித்துவிட்டார். இரண்டரை ஆண்டுகளில் இந்த மையம் மூன்று முறை இடமாற்றம் செய்யப்பட்டு, நான்கு மருத்துவர்கள் மாறியுள்ளனர். இப்போது நகர் முழுவதும் நிகழும் ஊரடங்கினால் சிகிச்சை மையமும் மூடப்பட்டுவிட்டது.
சிட்டிசன் நகர் அகமதாபாத் மாநகராட்சி எல்லைக்குள் வந்தாலும் இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் கிடையாது. 2009ஆம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் வரை தனியார் டேங்கர் லாரி தண்ணீரைத் தான் அவர்கள் நம்பியிருந்தனர். ஆழ்துளை கிணற்று நீரும் குடிக்கும் தகுதியில் இல்லை. அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த நீரில் அளவுக்கு அதிகமான உப்பு, உலோகங்கள், கிளோரைட், சல்ஃபேட், மக்னீசியம் உள்ளது கண்டறியப்பட்டது. 6 மாதங்களுக்கு முன் போடப்பட்ட ஆழ்துணை கிணறு காலனியின் ஒரு பகுதி தேவையை தற்போது தீர்த்து வருகிறது. நீரினால் ஏற்படும் நோய்கள், வயிறு தொந்தரவுகள் இங்கு தொடர் கதையாக இருக்கின்றன. மாசடைந்த நீரில் தொடர்ந்து புழங்குவதால் இங்குள்ள பெண்கள், சிறார்களுக்கு பலவகை தோல் தொற்றுகள், பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன.
அரசு தங்களிடம் நீண்ட காலமாகவே சமூக இடைவெளியை கடைபிடிப்பதாக சிட்டிசன் நகர் மக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே விளிம்பு நிலையில் உள்ள இம்மக்களின் நிலையை கோவிட்-19 தொற்றும், ஊரடங்கும் மேலும் பாதித்துள்ளன. “அரசுகள் ஓட்டு வாங்குவதற்கு எங்களிடம் வாக்குறுதிகளை தான் தருகின்றன” என்று சொல்லும் இப்பகுதியைச் சேர்ந்த பிளம்பரான முஷ்டாக் அலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “இப்போது வரை நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதைப் பார்க்க எந்த தலைவரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த அரசால் என்ன பயன்? அவர்களின் விளையாட்டுகளை [இங்குள்ள] மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்“ என்கிறார்.
“உங்கள் கண்கள், காதுகள், வாய் போன்றவற்றை தேவையின்றி தொடாதீர்கள். நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அல்லது உங்களது மருத்துவரை அணுகுங்கள்“ என்று நடிகர் அமிதாப் பச்சன் தொலைக்காட்சியில் பேசும் காட்சிகள் முஷ்டக் அலியின் ஒற்றையறை வீட்டிலும், அக்காலனியில் உள்ள பிற நெருக்கடியான வீடுகளிலும் ஒளிக்கின்றன.
தமிழில்: சவிதா