“நான் பிறந்ததிலிருந்து இது இப்படித்தான் இருக்கிறது,” என்கிறார் ரத்னவா எஸ். ஹரிஜன். அது ஒரு ஆகஸ்ட் மாதத்தின் குளிர்காலை. தினக்கூலிக்காக அவர் வேலை பார்க்கும் விவசாய நிலத்துக்கு துடிப்புடன் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்.  ஒல்லியாய், உயரமாய் லேசாக குனிந்தபடி அவர் நடக்கும் வேகம், பதின்வயதில் அவருக்கு நேர்ந்த கால் பலவீனத்தையும் மறைக்கக் கூடியதாக இருந்தது.

நிலத்தை அடைந்தவுடன், அவர் கொண்டுச் சென்ற வேலைக்கான உடைகளை வெளியே எடுத்தார். முதலில் அவர் ஓர் அழுக்கு நீலச்சட்டைக்குள் கையை விட்டு சேலையின் மீது அணிந்து கொள்கிறார். பிறகு மகரந்த சேர்க்கை துகள்கள் படாமல் இருக்கவென நீளமான, மஞ்சள் நிற நைட்டி போன்ற உடையை இடுப்பில் கட்டிக் கொள்கிறார். அதற்கு மேல் ஒரு கிழிந்த நீல நிற சிஃப்ஃபான் துணியை முடிந்து பை போல் ஆக்கிக் கொள்கிறார். ஒக்ரா செடியின் ஆண் பூக்களை சேகரிப்பதற்காக அது. ஒரு வெளுத்துப் போன வெள்ளை துண்டை தலையில் மாட்டிக் கொண்டு, 45 வயது ரத்னவா இடது கையில் நூல்களை பிடித்துக் கொண்டு தன் வேலையைத் தொடங்குகிறார்.

ஒரு பூவைப் பறிக்கிறார். மெதுவாக அதன் இதழ்களை மடக்கி ஆண் கூம்பின் மகரந்தப் பொடியை அதில் தடவுகிறார். மகரந்தம் சேர்க்கப்பட்டப் பூவைச் சுற்றி ஒரு நூலைக் கட்டி அடையாளப்படுத்துகிறார். அவரின் முதுகு வளைந்து ஒரு நளினத்துடன் நிலத்தில் இருக்கும் ஒக்ரா செடிகளின் எல்லா பூக்களிலும் மகரந்தத்தை சேர்க்கிறார். கையால் மகரந்தச் சேர்க்கை செய்வதில் அவர் திறன் பெற்றவர். சிறுமியாய் இருந்ததிலிருந்து அந்த வேலையை அவர் பார்க்கிறார்.

ரத்னவா மடிகா சமூகத்தை சேர்ந்தவர். கர்நாடகாவில் பட்டியல் சமூகம் அது. கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தின் ரானிபென்னூர் தாலுகாவிலுள்ள கொனனடலி கிராமத்தின் மடிகா பகுதியில் அவர் வாழ்கிறார்.

Ratnavva S. Harijan picks the gandu hoovu (' male flower') from the pouch tied to her waist to pollinate the okra flowers. She gently spreads the pollen from the male cone to the stigma and ties the flower with a thread held in her left hand to mark the pollinated stigma
PHOTO • S. Senthalir
Ratnavva S. Harijan picks the gandu hoovu (' male flower') from the pouch tied to her waist to pollinate the okra flowers. She gently spreads the pollen from the male cone to the stigma and ties the flower with a thread held in her left hand to mark the pollinated stigma
PHOTO • S. Senthalir

ரத்னவா எஸ். ஹரிஜன் ஆண் பூவை தன் இடுப்பில் கட்டியிருக்கும் பையில் இருந்து எடுக்கிறார். மெதுவாக ஆண் கூம்பின் மகரந்தப் பொடியை தடவி, மகரந்தம் சேர்க்கப்பட்ட பூவைச் சுற்றி ஒரு நூலைக் கட்டி அடையாளப்படுத்துகிறார்

அவரின் வேலை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வீட்டு வேலைகள் முடித்து காலை உணவையும் தேநீரையும் குடும்பத்துக்கு அளித்துவிட்டு, மதிய உணவை தயாரித்து, அவசரமாக சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு நிலத்துக்குக் கிளம்பி விடுகிறார்.

ஒரு நாளின் முதல் பாதி 200 ஒக்ரா செடிகளுக்கு மகரந்தம் சேர்ப்பதில் கழிந்து விடுகிறது. மூன்று ஏக்கர் நிலத்தின் பாதி அளவு அது. மதியம் ஓர் அரைமணி நேர இடைவேளை உணவுக்கு எடுத்துக் கொள்கிறார். பிறகு அடுத்த நாள் மகரந்தம் சேர்ப்பதற்காக பூவிதழ்களை உரித்து மகரந்தத் தளத்தை தயார் செய்ய நிலத்துக்கு வருகிறார். நிலவுடமையாளர் அவருக்கு நிர்ணயித்த தினக்கூலி ரூ.200

கையால் மகரந்தம் சேர்க்கும் நுட்பத்தைத் தொடக்கத்திலேயே அவர் கற்றுக் கொண்டார். “எங்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. எனவே நாங்கள் பிறர் நிலங்களில் வேலை பார்க்கிறோம்,” என்கிறார் அவர். “நான் பள்ளிக்குச் செல்லவில்லை. பூப்பெய்துவதற்கு முன்பிருந்தே வேலை பார்க்கத் தொடங்கிவிட்டேன். நாங்கள் ஏழைகள் என்பதால் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. அச்சமயத்தில் களைகளை அப்புறப்படுத்தி தக்காளிச் செடியைப் பூக்கச் செய்வேன்.” மாற்றுச் செடிகளின் மகரந்தம் சேர்ப்பதை குறிப்பிடுகிறார் அவர்.

திருமலதேவரக்கொப்பா கிராமத்தின் நிலமற்ற விவசாயக் கூலிகளின் குடும்பத்தில் பிறந்தவர் ரத்னவா. ஹவேரியின் தொழிலாளர்களில் 42.6 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள்தான். மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் 70 சதவிகித தொழிலாளர்கள் பெண்கள் (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011). எனவே ரத்னவா இளம்வயதிலேயே பணிபுரியத் தொடங்கியது ஒன்றும் அங்கு புதிதில்லை.

எட்டுக் குழந்தைகளில் மூத்தவரான அவர், கொனனடலியைச் சேர்ந்த விவசாயக் கூலி சொன்னாச்சவுடாப்பா எம். ஹரிஜனுக்கு மணம் முடிக்கப்பட்டார். “என்னுடைய தந்தை ஒரு குடிகாரர். எனவே எனக்கு வேகமாக, பூப்பெய்திய ஒரு வருடத்திலேயே, திருமணம் முடிக்கப்பட்டுவிட்டது. அப்போது என் வயது என்னவெனக் கூட எனக்குத் தெரியாது,” என்கிறார் அவர்.

Left: Flowers that will be used for pollination are stored in a vessel. Right: Ratnavva pollinates the stigmas of about 200 okra plants within the first half of the day
PHOTO • S. Senthalir
Left: Flowers that will be used for pollination are stored in a vessel. Right: Ratnavva pollinates the stigmas of about 200 okra plants within the first half of the day
PHOTO • S. Senthalir

இடது: மகரந்தச் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும் பூக்கள் ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. வலது: நாளின் முதல் பாதியில் ரத்னவா 200 ஒக்ரா செடிகளில் மகரந்தம் சேர்த்து விடுகிறார்

திருமலாதேவரகொப்பாவில் கையால் மகரந்தச் சேர்க்கை செய்யும் பணிக்கு ரத்னவா 70 ரூபாய் நாட்கூலி பெறுகிறார். கொனனடலியில் 15 ஆண்டுகளுக்கு முன் அவர் பணிபுரியத் தொடங்கியபோது நாட்கூலி 100 ரூபாய் என்கிறார் அவர். “ஒவ்வொரு வருடமும் அவர்கள் (நிலப்பிரபுக்கள்) பத்து ரூபாய் கூட்டுவார்கள். இப்போது எனக்கு 200 ரூபாய் கிடைக்கிறது.”

கையால் செய்யப்படும் மகரந்தச் சேர்க்கை கொனனடலியில் விதை தயாரிப்பதற்கு முக்கியமான வேலை ஆகும். ஒக்ரா, தக்காளி, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் முதலிய காய்கறிகளின் மரபணு மாற்ற ரகங்கள் அங்கு வளர்க்கப்படுகின்றன. அந்த வேலை வழக்கமாக மழை மற்றும் குளிர்காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. காய்கறி விதைகளும் பருத்தியும்தான் அந்த கிராமத்தில் விளைவிக்கப்படும் பிரதான விவசாயப் பொருட்கள். கிட்டத்தட்ட 568 ஹெக்டேர்களில் (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) அவை விளைவிக்கப்படுகின்றன. காய்கறி விதைத் தயாரிப்பில் நாட்டிலேயே கர்நாடகாவும் மகாராஷ்டிராவும் முன்னணியில் இருக்கின்றன. அதில் தனியார் துறை முக்கியமான பங்கைச் செய்கிறது.

கடும் உழைப்பும் திறனும் தேவைப்படுகிற கை மகரந்தச் சேர்க்கைக்கு வேலை பார்ப்பவர்கள் தீர்க்கமான பார்வை, லாவகமான கை, பெரும் பொறுமை மற்றும் கவனம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் பூவின் நுண்ணியப் பகுதியை அதீத கவனத்துடன் அவர்கள் கையாள வேண்டும். இந்த வேலைக்கு ஆண்களை விட அதிகமாக பெண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.  அருகாமை கிராமங்களிலிருந்து ஆட்டோவில் கூட விவசாயக் கூலிகளாக இந்த வேலைகளைச் செய்ய பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

அம்பிகா (பிற்படுத்தப்பட்ட) சமூகத்தை சேர்ந்த பரமேஷப்பா பக்கிரப்பா ஜதாரின் நிலத்தில்தான் ரத்னவா பணிபுரிகிறார். அவரிடம் வாங்கிய 1.5 லட்ச ரூபாய் கடனை ரத்னவா அடைக்க வேண்டும். வட்டியில்லாமல் அவரிடம் வாங்கிய அந்தத் தொகை, அவரின் வேலைக்கு முன்பணமாகக் கருதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ரத்னவா.

“என் கைக்குக் காசு வராது. நான் வேலை பார்த்த நாட்களை கணக்கு வைத்து எனக்கான ஊதியத்தை வாங்கியக் கடனுக்கென வைத்துக் கொள்கிறார் நிலவுடமையாளர்,” என்கிறார் அவர். “நாங்கள் வாங்கிய கடன்களுக்கு நிலத்தில் வேலை பார்க்கிறோம். தேவை ஏற்படும்போது மீண்டும் கடன் வாங்குகிறோம். கடன் வாங்கி வாங்கி வேலை பார்க்கிறோம்.”

Left: Pollen powder is applied on the stigma of a tomato plant flower from a ring. Right : Ratnavva plucks the ‘crossed’ tomatoes, which will be harvested for the seeds
PHOTO • S. Senthalir
Left: Pollen powder is applied on the stigma of a tomato plant flower from a ring. Right : Ratnavva plucks the ‘crossed’ tomatoes, which will be harvested for the seeds
PHOTO • S. Senthalir

இடது: ஒரு தக்காளிப் பூவில் மகரந்தத் தூள் தடவப்படுகிறது. வலது: மாற்றுச் சேர்க்கையில் விளைந்த தக்காளிகளை ரத்னவா பறிக்கிறார்

ரத்னாவுக்கான வேலை ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை கடுமையாக இருக்கும். அது மழைக்காலம். அந்த சமயத்தில்தான் ஒக்ரா மற்றும் வெள்ளரிச் செடிகளில் மகரந்தச் சேர்க்கை செய்யப்படும். வெள்ளரி வளர்ப்புக்கு நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட 6 மணி நேரங்களுக்கு எந்த இடைவேளையும் இன்றி பணிபுரிய வேண்டும். ஒக்ரா முனைகள் விரலைக் காயப்படுத்தும் அளவுக்கு கூர் கொண்டவை.

ஆகஸ்டு மாதத்தில் அவரை நான் சந்தித்தபோது, மகனின் நகத்தின் ஒரு துண்டை தன் கட்டை விரலில் ஒட்டியிருந்தார். ஏனெனில் ஒக்ரா மொட்டுகளை உரிக்கக் கூரான முனை தேவைப்பட்டது. 18 வயது மகன் லோகேஷ் நோய்வாய்ப்பட்டதால், அவருக்கு பதிலாக அவர் பணிபுரிந்த நிலத்தில் வேலை பார்ப்பதற்காக, பரமேஷப்பா நிலத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டார் அவர். கல்லூரியில் சேர்ப்பதற்காக தாய் வாங்கியிருந்த 3000 ரூபாய் கடனை அடைப்பதற்காக லோகேஷ்ஷும் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார்.

எனினும் ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் மொத்த பொருளாதாரச் சுமையையும் ரத்னவாதான் சுமக்கிறார். கணவர், மாமியார், கல்லூரிக்கு செல்லும் மூன்று மகன்கள் மற்றும் தனக்கு என தினசரிச் செலவு போக, கணவரின் மருத்துவச் செலவுக்கும் ரத்னவாதான் செலவு செய்கிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கணவரின் மருத்துவச் செலவுக்காக 22,000 ரூபாய் வரை நிலவுடமையாளரிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். மஞ்சள் காமாலை நோய் வந்த பிறகு கணவரின் உடலிலுள்ள ரத்த செல் எண்ணிகை கடுமையாக சரிந்து விட்டது. ரத்த மாற்ற சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதற்கான வசதிகளுடன் அருகில் இருக்கக் கூடிய அரசு மருத்துவமனை, மங்களூரில்தான் இருக்கிறது. கிராமத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவு.

பணம் தேவைப்படுகையில் நிலவுடமையாளர் கொடுக்கிறார். “உணவு, மருத்துவமனை மற்றும் தினசரித் தேவை என எல்லாவற்றுக்கும் நான் கடன் வாங்குகிறேன். அவர் ஓரளவுக்கு எங்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு நிறைய பணம் கடன் கொடுக்கிறார். அங்கு (வேலைக்கு) மட்டும்தான் நான் செல்கிறேன். வேறெங்கும் கிடையாது,” என்கிறார் ரத்னவா. “முழுத் தொகையை இன்னும் நான் அடைக்கவில்லை. நான் மட்டுமே எவ்வளவு அடைக்க முடியும்?”

Left: Ratnavva looks for flowers of the okra plants to pollinate them. Right: Her bright smile belies her physically strenuous labour over long hours
PHOTO • S. Senthalir
Left: Ratnavva looks for flowers of the okra plants to pollinate them. Right: Her bright smile belies her physically strenuous labour over long hours
PHOTO • S. Senthalir

இடது: மகரந்தச் சேர்க்கை செய்வதற்காக ஒக்ரா செடிகளில் பூக்களை தேடுகிறார் ரத்னவா. வலது: அவரின்  நீண்ட நேர கடுமையான உழைப்பை தாண்டி புன்னகைக்கிறார்

வருமானத்துக்காக சார்ந்திருக்க வேண்டிய இந்த முடிவுறா நிலையால் நிலவுடமையாளர் கேட்கும்போதெல்லாம் உழைக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. ஊதியத்தை அதிகரிக்கக் கூட அவரால் கேட்க முடியாது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்து கொனனடலி கிராமத்தில் பணிபுரியும் பெண்கள் எட்டு மணி நேர வேலைக்கு 250 ரூபாய் கூலி பெறுகையில் ரத்னவாவின் கூலி மட்டும் 200 ரூபாயாகவே இருக்கிறது. அதிலும் இன்ன மணி நேரங்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை.

“அதனால்தான் அவர்கள் எப்போது வேலைக்கு அழைத்தாலும் நான் போக வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் காலை ஆறு மணிக்கு வேலை தொடங்கி மாலை ஏழு மணியைத் தாண்டியும் நீடிக்கும். மகரந்தச் சேர்க்கை வேலை இல்லையெனில் களை எடுக்கும் வேலை மட்டும்தான் இருக்கும். 150 ரூபாய்தான் கூலியாகக் கிடைக்கும்,” என விளக்குகிறார். “கடன் வாங்கியிருப்பதால் நான் எதுவும் சொல்ல முடியாது. எப்போது என்னை அழைத்தாலும் போக வேண்டும். அதிக ஊதியம் நான் கேட்க முடியாது.”

ரத்னவாவின் உழைப்பு மதிக்கப்படாததற்கு கடன் மட்டுமே காரணம் அல்ல. பல நேரங்களில் லிங்காயத்துகளின் குடும்ப வேலைகள் செய்ய ரத்னவா அழைக்கப்படுவார். பழங்கால சாதிய வழக்கமான ‘கூலியற்ற வேலை’ சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருந்தாலும் கொனனடலியில் வழக்கத்தில் இருக்கிறது. இந்த வழக்கம் ஒவ்வொரு மடிகா குடும்பத்தையும் ஒவ்வொரு லிங்காயத் சமூகத்தின் குடும்பத்துடன் கட்டிப் போடுகிறது. ஆதிக்கம் நிறைந்த பிற்படுத்தப்பட்ட சமூகமான லிங்காயத் சாதியினரும் அவர்களை தங்களின் வீடுகளில் கூலியின்றி உழைக்கக் கட்டாயப்படுத்துவார்கள்.

“திருமணமோ யாராவது இறந்தாலோ அல்லது எந்த ஒரு விழாவாக இருந்தாலும் நாங்கள்தான் அவர்களின் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். அதைச் செய்ய ஒரு முழு நாள் ஆகிவிடும். எல்லா வேலைகளையும் நாங்கள்தான் செய்ய வேண்டும். திருமண நிகழ்வு என்றால், எட்டு முழு நாட்களை நாங்கள் கழிக்க வேண்டும்,” என்கிறார் ரத்னவா. “ஆனால் அவர்கள் எங்களை வீட்டுக்குள் விட மாட்டார்கள். எங்களை வெளியிலேயே நிறுத்தி பொறியும் தேநீரும் கொடுப்பார்கள். தட்டு கூட கொடுக்க மாட்டார்கள். எங்களுக்கான தட்டுகளை எங்களின் வீடுகளிலிருந்து கொண்டு வருவோம். சில நேரங்களில் அவர்கள் ஒரு ஆட்டுக் குட்டியையோ கன்றுக்குட்டியையோ கொடுப்பார்கள். ஆனால் பணம் கொடுக்க மாட்டார்கள். மாடுகள் இறந்து போனால், அவற்றைத் தூக்கிப் போட எங்களை அழைப்பார்கள்.”

நான்கு வருடங்களுக்கு முன்பு லிங்காயத் குடும்ப உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்தால், சாதிய வழக்கத்தின்படி ரத்னவா ஒரு ஜோடி செருப்பை வாங்கி, அவற்றுக்கு பூஜை செய்து, மணமகனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்தான் அந்த இடத்தில் வேலை பார்ப்பதை நிறுத்துவதென முடிவெடுத்தார். போதுமான வருமானம் அங்கு இல்லை. அவரின் முடிவு லிங்காயத் குடும்பத்தை கோபப்படுத்திவிட்டதாக சொல்கிறார் அவர்.

Left: Ratnavva at home in Konanatali. Right: Her daughter Suma walks through their land with her cousin, after rains had washed away Ratnavva's okra crop in July
PHOTO • S. Senthalir
Left: Ratnavva at home in Konanatali. Right: Her daughter Suma walks through their land with her cousin, after rains had washed away Ratnavva's okra crop in July
PHOTO • S. Senthalir

இடது: கொனனடலி வீட்டில் ரத்னவா. வலது: ரத்னவாவின் ஒக்ரா பயிரை ஜூலை மாத மழை அழித்த பிறகு அந்த நிலத்தில் உறவினருடன் நடந்து செல்லும் சுமா

அரசால் கணவருக்கு ஒதுக்கப்பட்ட அரை ஏக்கர் நிலத்தில் பரமேஷப்பாவின் நிதியுதவியில் இந்த வருடம் ஒக்ராவும் சோளமும் பயிரிட்டிருந்தார் ரத்னவா. ஜூலை மாத மழை அதில் விளையாடி விட்டது. கொனனடலியின் மடகா-மசூர் ஏரியோரம் மடிகாக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்து சிறு துண்டு நிலங்களை மழை வெள்ளம் சூழந்தது. “ஹரிஜன்களின் (மடிகாக்களின்) நிலங்களில் இந்த வருடம் ஒக்ரா பயிரிடப்பட்டது. ஆனால் அவை எல்லாம் நீரில் மூழ்கிவிட்டது,” என்கிறார் அவர்.

ரத்னவாவின் பளுவை குறைக்க அரசு எந்த உதவியும் செய்யவில்லை. நிலமற்றத் தொழிலாளராக அவர், விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் எந்த நலத்திட்டமும் பெற முடியாது. அவரிழந்த பயிருக்கான நிவாரணத்தையும் பெறவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதந்தோறும் கொடுக்கும் 1000 ரூபாயும் பெற முடியவில்லை. அவரிடம் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் கூட இருக்கிறது.

கடுமையான உழைப்பை பல மணி நேரங்களுக்குக் கொட்டியும் பணத்தட்டுப்பாடு குறையவே இல்லை. ரத்னவா சார்ந்திருந்த நுண்நிதி நிறுவனங்கள் அவரின் கடன் சுமையை இன்னும் சிக்கலாக்கி விட்டன. பரமேஷப்பாவுக்கு அவர் கொடுக்க வேண்டிய கடனையும் தாண்டி இரண்டு லட்ச ரூபாய் கடன் அவருக்கு இருக்கிறது. 2-லிருந்து 3 சதவிகித வட்டி.

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் வீட்டில் ஒரு அறை கட்டவும் கல்லூரிக் கட்டணத்துக்காகவும் மருத்துவச் செலவுக்காகவும் என பத்து பேரிடம் அவர் கடன் வாங்கிவிட்டார். அன்றாடச் செலவுகளுக்கு அவர் பணமிருக்கும் லிங்காயத் குடும்பத்து பெண்களை நாடுகிறார். “கடந்த வருடம் 2,650 ரூபாய் நான் வாங்கிய கடன்களுக்கான வட்டியாக மட்டும் மாதந்தோறும் கட்டிக் கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். “கோவிட் ஊரடங்குக்கு பிறகு, வட்டிப் பணம் கட்டக் கூட என்னிடம் பணமில்லை. ஆனாலும் மாதாந்திரச் செலவுக்கு நான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.”

கடன்கள் அதிகமானாலும் குழந்தைகளை கல்லூரியிலிருந்து நிறுத்தக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் ரத்னவா. அவரின் மகள் சுமா ‘கூலியில்லா உழைப்பு’ பாரம்பரியத்தை தொடராமல் இருப்பதையும் உறுதி செய்திருக்கிறார் அவர். “என்னுடைய காலும் சரி நானும் சரி நல்ல நிலையில் இல்லை. என்னால் நடக்க முடியாது. ஆனால் என் குழந்தைகள் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் பள்ளியை நிறுத்த வேண்டியிருக்கும். எனவே நான் வேலை செய்வதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்,” என விளக்குகிறார் அவர். தனக்கு நேரும் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், “அவர்கள் விரும்பும் வரை அவர்களை படிக்க வைப்பேன்,” எனக் கூறுகிறார் ரத்னவா.

தமிழில்: ராஜசங்கீதன்

S. Senthalir

ਐੱਸ. ਸੇਂਥਾਲੀਰ, ਪੀਪਲਜ਼ ਆਰਕਾਈਵ ਆਫ਼ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਦੀ ਸੀਨੀਅਰ ਸੰਪਾਦਕ ਅਤੇ 2020 ਪਾਰੀ ਫੈਲੋ ਹੈ। ਉਹ ਲਿੰਗ, ਜਾਤ ਅਤੇ ਮਜ਼ਦੂਰੀ ਦੇ ਜੀਵਨ ਸਬੰਧੀ ਰਿਪੋਰਟ ਕਰਦੀ ਹੈ। ਸੇਂਥਾਲੀਰ ਵੈਸਟਮਿੰਸਟਰ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿੱਚ ਚੇਵੇਨਿੰਗ ਸਾਊਥ ਏਸ਼ੀਆ ਜਰਨਲਿਜ਼ਮ ਪ੍ਰੋਗਰਾਮ ਦਾ 2023 ਦੀ ਫੈਲੋ ਹੈ।

Other stories by S. Senthalir
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan