ஒட்டுமொத்த பம்தாபைசா பகுதியும் ஓடுகள் உருவாக்க நககுல் பாண்டோவுக்கு உதவிக் கொண்டிருந்தது. குழு முயற்சி மற்றும் ஆதரவுக்கான வெளிப்பாடாக அது இருந்தது. வீட்டில் உருவாக்கப்பட்டு நககுல் கொடுக்கும் சிறு அளவிலான மதுவைத் தாண்டி எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் மக்கள் அனைவரும் இலவசமாக வேலை பார்த்தனர்.
ஆனால் அவரின் கூரைக்கு ஏன் ஓடுகள் செய்து கொண்டிருக்கின்றனர்? ஏற்கனவே இருந்தவற்றை எப்படி அவர் இழந்தார்? அவரின் வீடு, பெருமளவில் ஓடுகள் இன்றி மொட்டையாக நின்று கொண்டிருந்தது.
”அரசின் கடன்தான் காரணம்,” என்கிறார் சோர்வுடன். “4,800 ரூபாய் கடன் வாங்கி இரண்டு மாடுகள் வாங்கினேன்.” அரசுத் திட்டத்தின் அடிப்படை அதுதான். மாடுகளுக்கு வாங்கப்படும் கடன்கள் குறிப்பிட்ட அளவு மானியமும் குறிப்பிட்ட அளவு வட்டியுடனான கடனும் கொண்டிருக்கும். அந்தத் தொகையில் சுர்குஜாவின் இந்தப் பகுதியில் 1994ம் ஆண்டில் இரண்டு மாடுகள் வாங்க முடியும். (மத்தியப் பிரதேசத்தில் அப்போதிருந்த மாவட்டம் தற்போது சட்டீஸ்கரில் இருக்கிறது).
கடன் வாங்குவதில் நககுல்லுக்கு முதலில் ஆர்வம் இருக்கவில்லை. அவர் சார்ந்த பாண்டோ பழங்குடிக் குழுவின் சில உறுப்பினர்கள் கடன்களால் பாதிக்கப்பட்ட அனுபவமும் இருக்கிறது. நிலங்களையே வாங்கிய கடன்களுக்கு இழந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் கடன் அரசிடமிருந்து கிடைப்பது. குறிப்பாக பழங்குடிகள் நலனுக்காக உள்ளூர் வங்கியிலிருந்து கொடுக்கப்படும் கடன். அதை வாங்குவதில் எந்தவிதப் பிரச்சினையும் இருக்கும் வாய்ப்பு இல்லை. அந்தச் சூழலில் அது ஒரு சிறந்த யோசனையாக இருந்தது.
”ஆனால் என்னால் கடனை அடைக்க முடியவில்லை,” என்கிறார் நககுல். பாண்டோக்கள் வறுமையில் உழலும் மக்கள் ஆவர். ‘அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினராக’ பட்டியலிடப்பட்டிருப்பவர்கள். நககுல்லும் அவர்களின் நிலைக்கு விதிவிலக்கல்ல.



