கடையின் உரிமையாளர், தான் இல்லையென்றார் அவர். நண்பர்தான் கடை உரிமையாளர் என்றார். சற்று நேரம் கழித்து, ’உரிமையாளரின் உறவினர்’ என்கிற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். சில கணங்கள் கழித்து “அக்கடையில் பணிபுரிந்த ஒருவரது உறவினர்” ஆனார். இன்னும் கொஞ்ச நேரம் கேள்விகளைத் தொடர்ந்திருந்தால், தான்தான் கடையின் உரிமையாளர் என அவர் சொல்லியிருப்பார்.
புகைப்படம் எடுக்கப்பட மறுத்தார். கடைக்குள்ளும் படம் பிடிக்கக் கூடாது என சொல்லிவிட்டார். ஆனால் கடைக்கு வெளியே இருந்த பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில் அவர் சந்தோஷமடைந்தார்.
‘வெளிநாட்டு மதுக் கடை’ எனப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. நுழைவாயிலிலிருந்து சற்றுத் தள்ளிப் பலகை இருந்தது. உரிமையாளர்: ரமேஷ் பிரசாத். சுர்குஜா மாவட்டத்தின் முனையில் இருக்கும் கட்கோரா டவுனில் இருக்கும் பகுதி அது. அப்போது மத்தியப்பிரதேசத்தில் இருந்தது. இப்போது சட்டீஸ்கரில் இருக்கிறது. நம்முடன் தடுமாற்றத்துடன் பேசிக் கொண்டிருக்கும் பேச்சாளர் நிச்சயமாக ரமேஷ் பிரசாத் இல்லை. கடையுடனான அவருடையத் தொடர்பு அநேகமாக அக்கடையின் பெரிய வாடிக்கையாளராக இருப்பது மட்டும்தான் என நம்பத் தொடங்கி விட்டோம்.
வெளிநாட்டு மதுவா? இல்லை. IMFL என்கிற சுருக்கத்தை கடைசியாக எப்போது கேட்டேன் என்பது நினைவில் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது என்பதே அதன் விரிவாக்கம். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட 1994ம் காலகட்டத்தில், தேசிய மதுவுக்கும் வெளிநாட்டு மதுவுக்கும் இடையேயான ஆதரவாளர்கள் விவாதம் பற்றியெரிந்து கொண்டிருந்தது.
லா இன்சைடர் இணையதளத்தில் தெரிந்து கொண்ட வகையில், “வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜின், பிராந்தி, விஸ்கி, ரம் போன்றவை தயாரிக்கப்படும் முறையிலேயே இந்தியாவுக்குள் தயாரித்து, உற்பத்தி செய்யப்பட்டு அல்லது கலப்பு செய்யப்படும் மதுவகை என அதற்கு அர்த்தம். ஆனால் அவற்றில் பீர், ஒயின் மற்றும் வெளிநாட்டு மது வராது.” கவனியுங்கள். “பீரும் ஒயினும் வெளிநாட்டு மதுவும்” அதில் கிடையாது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவில் இறக்குமதி செய்யப்பட்ட மதுவும் ஓர் உள்ளூர் அம்சமும் (வெல்லப்பாகாக இருக்கலாம். அல்லது உள்ளூர் கலவை அல்லது பாட்டிலாகவோ இருக்கலாம்) இருக்கும். நிச்சயமாக எங்களுக்குத் தெரியவில்லை.



