கொண்ட்ரா சம்மையா.. கடன்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்…” என்கிறது முதல் தகவல் அறிக்கை
சம்மய்யாவும் அவரின் மனைவி கொண்ட்ரா சகரிகாவும் ஆறு ஏக்கர் நிலத்தில் பிடி பருத்தி விதைத்திருக்கும் நரஸ்பூர் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தரிகோபுள்ளா காவல்நிலையத்தில் 2017ம் ஆண்டின் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
உறவினர்களிடம் வெவ்வேறு வட்டிகளுக்கு அவர்கள் வாங்கியிருந்த கடன் 5 லட்சத்தை தொட்டது. ஒரு ஏக்கருக்கும் சற்று அதிகமாக நிலம் வைத்திருந்தனர் சம்மய்யாவும் சகரிகாவும். மிச்ச நிலத்தை உறவினர்களிடம் இருந்து குத்தகைக்கு எடுத்திருந்தனர். “ஒவ்வொரு பருவமும் தொடங்குவதற்கு முன்பும் விவசாயி கடன் வாங்குவதுதான் கடனுக்கான முக்கிய காரணம்,” என்கிறார் சகரிகா. பஞ்சமும் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொண்டு வந்தது.
சொந்த நிலத்தில் விவசாயம் பார்ப்பதற்கு முன் அவர்கள் பருத்தி நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்தனர். 2011ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு கொஞ்ச காலம் ஹைதராபாத்தில் வாழ்ந்தனர். அங்கு சம்மய்யா ஓட்டுநராக பணிபுரிந்தார். சம்மய்யா தந்தையின் உடல்நலம் குன்றத் தொடங்கியதும் 2013ம் ஆண்டில் தெலெங்கானாவின் அவர்கள் நரசப்புவுக்கு திரும்பினர்.
தற்கொலை செய்து கொண்டபோது சம்மய்யாவுக்கு வயது 29. சகரிகாவுக்கு வெறும் 23தான். அவர்களின் குழந்தைகள் ஸ்னேகிதா மற்றும் சாத்விக் ஆகியோருக்கு முறையே 5 மற்றும் 3 வயது ஆகியிருந்தன. “என் கணவருடன் கழித்த நேரங்களை ஒவ்வொரு நாளும் குழந்தைகள் நினைத்து பார்க்கிறார்கள்,” என்கிறார் அவர். “என் கணவர் இறந்த பிறகு வந்த முதல் வருடம் மிகவும் கடினமாக இருந்தது. சொந்தக்காரர்கள் விசேஷங்களுக்கு கூப்பிட மாட்டார்கள். என்னுடைய கஷ்டத்தை இப்போது அவர்கள் பார்த்துவிட்டதால், கூப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள்….”








