“ரகசிய வழியில் நாங்கள் வெளியே வந்தோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? குறைந்தபட்சம் எங்களிடம் மூலப்பொருட்கள் இருந்தால், வீட்டிலேயே இருந்து கொண்டு கூடைகள் பின்னித் தயார் செய்வோம்,” என தெலங்கானாவின் கங்கல் கிராமத்திலிருக்கும் கூடை பின்னும் குழு ஒன்று கூறியது. ரகசிய வழியா? ஆம். காவல்தடுப்போ முள்வேலிகளோ இல்லாத இடத்தில் கிராமவாசிகள் ரகசியமாக அமைத்துக் கொண்ட வழி.
கங்கலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெள்ளிதண்டுப்பாடு என்கிற குக்கிராமத்தில் பேரீச்சை இலைகள் சேகரிக்கவென ஏப்ரல் 4ம் தேதி காலை 9 மணி அளவில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆணுடன் சேர்ந்து நெலிகுந்தரஷி ரமுலம்மா ஆட்டோவில் கிளம்பினார். அவற்றைக் கொண்டுதான் கூடைகள் தயாரிக்கிறார்கள். பொது நிலங்களிலிருந்து சேகரிப்பார்கள். சமயங்களில் விவசாய நிலங்களில் சேகரித்து அதற்கு பதிலாக சில கூடைகளை விவசாயியிடம் கொடுத்து விடுவார்கள்.
கங்கலில் இருக்கும் கூடைத் தயாரிப்பவர்கள் தெலங்கானாவில் பழங்குடிச் சமூகமாக பட்டியலிடப்பட்டிருக்கும் யெருகுலா சமூகத்தை சேர்ந்தவர்கள். மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலம்தான் கூடை விற்பனை நடக்கும் காலம். இம்மாதங்களின் வெயில்காலம் இலைகளை காய வைப்பதற்கான சரியான காலம்.
வருடத்தின் மற்ற மாதங்களில் அவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். நாட்கூலியாக 200 ரூபாய் வரை கிடைக்கும். பருத்தி அறுவடைக்காலமான டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஒரு நாளைக்கு 700லிருந்து 800 ரூபாய் வரை, வேலை இருந்தால் சம்பாதிப்பார்கள்.
இந்த வருடத்தின் கொரோனா ஊரடங்கு, கூடை விற்று வரும் அவர்களின் வருமானத்தை முடக்கி விட்டது. “பணமுள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள். எங்களால் முடியவில்லை. அதனால்தான் நாங்கள் வெளியே வந்தோம் (இலைகளை சேகரிக்க). இல்லையெனில் நாங்கள் ஏன் வெளியே வரப் போகிறோம்?” என கேட்கிறார் 70 வயதான ரமுலம்மா.







