"1994 இல் பிளேக் வந்த போதும் அல்ல, 2006 இல் சிக்குன்குனியா வந்தபோதும் அல்ல, 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் கூட இந்த கோயில் மூடப்படவில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக நாங்கள் இந்த கோவில் மூடப்படுவதை காண்கிறோம்", என்று வருத்தத்துடன் கூறுகிறார் சஞ்சய் பெண்டே. தெற்கு மகாராஷ்டிராவின் துல்ஜாபூர் நகரில் உள்ள துல்ஜா பவானி தேவியின் கோவிலில் உள்ள பிரதான பூசாரிகளில் இவரும் ஒருவர்.
கோவிட் 19 பரவுவதை தடுப்பதற்காக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக மார்ச் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இந்த கோவில் மூடப்பட்டது. இது இங்குள்ள மக்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது. "இது என்ன வகையான நோய்? மாநிலத்திற்கு வெளியில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள் ஆனால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தான் தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதுவும் போலீசாருடன் சண்டையிட்ட பிறகு", என்கிறார் 38 வயதாகும் பெண்டே. அவர் தினசரி நடத்தும் பத்து பதினைந்து சிறப்பு பூஜைகளில் இருந்து அவர் சம்பாதிப்பதை இழந்துள்ளதால் அந்த கவலையின் ஒரு பகுதியாக அவ்வாறு கூறுகிறார். துல்ஜாபூரில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பூசாரிகள் இருப்பதாக பெண்டே மதிப்பிடுகிறார் அவர்கள் கோயில் தொடர்பான நடவடிக்கையால் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
மராத்வாடா பகுதியில் உள்ள உஸ்மானாபாத் மாவட்டத்தில், 34 ஆயிரம் மக்கள் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வசிக்கும் இந்நகரத்தின் பொருளாதாரம், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று நம்பப்படும் மலையின் மேல் உள்ள இக்கோவிலையே சார்ந்துள்ளது. துல்ஜா பவானி தேவி, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் பலரால் குலதெய்வமாக கருதப்படுகிறாள், மேலும் இது மாநிலத்திலுள்ள யாத்திரை பாதையில் பவானி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.









