சாண்டோ டண்டி ஒரு பழங்குடி. ஆனாலும் அவரை ஒரு குறிப்பிட்ட பழங்குடிப் பிரிவுக்குள் அடக்கிவிட முடியாது. கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒடிசா, மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், தெலெங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஆந்திரா பிரதேசம் ஆகிய பகுதிகளிலிருந்து பலர் அசாம் தேயிலை தோட்டத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக வந்திருக்கின்றனர். இக்குழுக்களின் வழிதோன்றல்கள் பழங்குடி சமூகங்களுடன் கலந்துவிட்டனர். இச்சமூகங்கள் மொத்தமாக ‘தேயிலைப் பழங்குடிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.
கிட்டத்தட்ட 60 லட்சம் பேராக அசாமில் வசிக்கும் இவர்கள் சொந்த மாநிலங்களில் பட்டியல் பழங்குடிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள். ஆனால் அந்த அடையாளம் இங்கு அவர்களுக்கு நிராகரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் 1000 தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிகின்றனர்.
தினசரி வாழ்வின் துயரமும் தீவிர உழைப்பும் பலரின் ஆசைகளை நொறுக்கியிருக்கிறது. சாண்டோவின் ஆசை மட்டும் நொறுங்கவில்லை. அவரைச் சுற்றியிருக்கும் துயரங்களை வெளிப்படுத்தும் ஜுமுர் பாடல்களை அவர் பாடுகிறார். வெயிலிலும் மழையிலும் தேயிலைத் தோட்டங்களில் பாடுபடும் மக்களை பற்றியும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்கு பின் இருக்கும் கடின உழைப்பைப் பற்றியும் பாடுகிறார்.